(Source: ECI/ABP News/ABP Majha)
இஞ்சினியர் செல்வராகவன்... செருப்படி வாங்கி இயக்குநர் ஆன கதை தெரியுமா?
செல்வராகவன் தான் ஒரு இயக்குநராக வேண்டும் என்று தன் தந்தையிடம் தெரிவித்த போது தந்தை கஸ்தூரிராஜாவின் ரியாக்ஷன் என்னவாக இருந்தது என்பதை சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார் செல்வா.
இயக்குநர் கஸ்தூரிராஜாவின் மூத்த மகன் செல்வராகவன். இன்று தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர். இவர் எடுக்கும் படங்கள் அவ்வப்போது பெரிதும் பாராட்டப்படவில்லை என்றாலும், பத்து, இருபது ஆண்டுகள் கழித்து படம் என்றால் இதுதான் என்று அனைவரும் எடுத்துக்காட்டாக கூறும்படி நிச்சயமாக இருக்கும். சினிமா பின்னணியில் இருந்து திரைத்துறைக்கு வந்திருந்தாலும் இவர் கடந்து வந்த பாதை எளிதொன்றும் அல்ல! தந்தை இயக்குநர் மகன் இயக்குநர் ஆவதை தடுக்கவா போகிறார்… என்று நாம் நினைக்கலாம். ஆனால் செல்வராகவன் தான் ஒரு இயக்குநராக வேண்டும் என்று தன் தந்தையிடம் தெரிவித்த போது தந்தை கஸ்தூரிராஜாவின் ரியாக்ஷன் என்னவாக இருந்தது என்பதை சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார் செல்வா.
பொறியியல் படிப்பின் இரண்டாம் ஆண்டின் போது சினிமா ஆசை வந்து ''நான் ஒரு டைரக்டர் ஆக வேண்டும்'' என்று தன் தந்தையிடம் கூறினாராம் செல்வராகவன். அதைக் கேட்ட கஸ்தூரிராஜா ஆத்திரமடைந்து செருப்பால் அடித்து, நீ டிகிரி முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தந்தைக்காக மேலும் இரண்டு வருடம் படித்து டிகிரியும் வாங்கி விட்டார் செல்வராகவன்.மீண்டும் தந்தையிடம் சென்று ''நான் டைரக்டர் ஆக வேண்டும்'' என்று கூறியுள்ளார். அப்போது அமெரிக்காவில் மேற்படிப்புக்கு செல்ல வேண்டும் என்று பெற்றோர் வற்புறுத்தி உள்ளனர். எதற்கும் இணங்காத செல்வராகவன் நான்கு நாள் பட்டினி கிடந்து தான் நினைத்ததை சாதித்துள்ளார். இயக்குநர் ஆவதை விரும்பாத அம்மா பூஜை அறையை சாத்திக் கொண்டாராம்… இறுதியில் பட்டினி கிடந்த செல்வாவின் பிடிவாதத்தால் இவரது ஆசைக்கு பெற்றோர் இணங்கியுள்ளனர்.
அன்று தன் ஆசைக்காக பட்டினி கிடந்து அடம்பிடித்த இளைஞன் தான் இன்று நம் முன் இயக்குநர் செல்வராகவனாக அவதரித்துள்ளார். அவரது முதல் படம் காதல் கொண்டேன். அப்பா தயாரிப்பாளர், தம்பி கதாநாயகன்.. தந்தைக்கு ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால் பதினாறு வயது தனுஷ் கதாநாயகனாக இந்த படத்தில் அறிமுகமானார்.அந்த சமயத்தில் அவரின் தோற்றத்திற்காக சந்தித்த விமர்சனங்கள் ஏராளம்.சாதிக்க அழகோ தோற்றமோ தடையில்லை என இன்று நிரூபித்துக் காட்டியவர் தனுஷ். தமிழ் சினிமா மட்டுமின்றி இன்று ஹாலிவுட் வரை சென்றுவிட்டார் நடிகர் தனுஷ்.
அண்ணன் செல்வராகவன் தன் திரைப்படங்களை மட்டும் இயக்கவில்லை தன்னையே செதுக்கி உள்ளார் என பலமுறை கூறியுள்ளார் தனுஷ். செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த புதுப்பேட்டை திரைப்படம் தனுஷின் திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றது என்று சொல்லலாம்.
நானே வருவேன்:
தற்போது செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் நானே வருவேன். இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Update soon 😍@theVcreations @dhanushkraja @thisisysr @omdop @ElliAvrRam pic.twitter.com/WcVq9Eh0wu
— selvaraghavan (@selvaraghavan) August 31, 2022
செல்வா தனுஷ் காம்போ எப்போதும் ஹிட் தான்.அதே போல் இந்த படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ரிலீஸ் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.