“இளையராஜாவுக்கு பின் இசையை அதிகம் நேசிப்பவர் வித்யாசாகர் தான்”... தேசிங்கு ராஜா-2 விழாவில் ஆர்.கே.செல்வமணி
இளையராஜாவுக்குப் பின் இசையை அதிகமாக நேசிக்கக் கூடையவர் இசையமைப்பாளர் வித்யாசாகர் என தேசிங்கு ராஜா 2 படத்தின் இசை வெளியீட்டில் இயக்குநர் ஆர்.கே செல்வமணி பேசியுள்ளார்

தேசிங்கு ராஜா 2
இயக்குநர் எழில் இயக்கத்தில் கடந்த 2013ல் விமல் நடித்து வெளியான தேசிங்கு ராஜா படம் வெற்றிப்படமாக அமைந்தது. 12 வருடங்களுக்கு தற்போது இதன் இரண்டாம் பாகமாக விமல் நாயகனாக நடிக்கும் தேசிங்கு ராஜா-2 படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் எழில்.
இன்பினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் P ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு இணையான இன்னொரு முக்கிய கதாபாத்தில் நடிகர் ஜனா அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக பூஜிதா பொன்னாடா, ஜூலி, ஹர்ஷிதா ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, ரவிமரியா, சாம்ஸ், ரோபோ சங்கர், சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், மதுரை முத்து, விஜய் டிவி புகழ், விஜய் டிவி கோதண்டம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசையமைத்துள்ளார். வரும் ஜூலை 11 ஆம் தேதி திரையரங்கில் இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் நேற்று ஜூலை 1 ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது
இசையமைப்பாளர் வித்யாசாகர் பேசும்போது
“இயக்குநர் எழிலுக்கு என்னுடன் முதல் படம் ‘பூவெல்லாம் உன் வாசம்’. அதற்கு அடுத்த படத்தில் இணைவதற்கு 25 வருடங்கள் பிடித்திருக்கிறது. அந்த படத்தின் பாடல்கள் அவரை அவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது என நினைக்கிறேன். அதிலிருந்து மீண்டு வந்து இந்த படத்தை கொடுத்திருக்கிறார். எழிலின் படங்கள் எப்பொழுதும் குடும்பத்தோடு பார்க்கும் படங்கள். ஆனால் இந்த படத்தை பார்க்கும்போது அதிரடியாக இருந்தது. இரண்டு படங்களிலும் பார்த்த எழிலுக்கு ரொம்பவே வித்தியாசம் இருக்கிறது.
முதல் பிரேமிலிருந்து கடைசி பிரேம் வரை எனக்கு எங்கே பின்னணி இசை வாசிப்பது என்பதில் சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. அந்த அளவிற்கு அனைவரும் பேசிக்கொண்டே, காமெடி பண்ணிக் கொண்டே இருக்கிறார்கள். ஜன்னல் ஓரம் படத்திற்குப் பிறகு மீண்டும் இசையமைக்கும் விமல் படமும் இதுதான். இந்த படத்தில் அறிமுகமாகி இருக்கும் ஜனா உள்ளிட்ட கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். டிஜிட்டலுக்கு மாறிய பிறகு இசைக்கருவிகளை கையாளுவது எளிதாக இருக்கலாம். ஆனால் இசையை உருவாக்க கற்பனை தேவை” என்று பேசினார்.
இயக்குநர் ஆர்.கே செல்வமணி பேசும்போது
“காமெடி படங்கள் எடுப்பது ரொம்பவே கஷ்டம். அதனால்தான் என்னுடைய படங்களில் பெரும்பாலும் காமெடியே இருக்காது. இசையமைப்பாளர் வித்யாசாகரை பொறுத்தவரை அவர் ஒரு இலக்கிய கவிஞர் என்று சொல்லலாம். பாடல்களில் வேற்றுமொழி வார்த்தைகளை கூட அனுமதிக்க மாட்டார். அவர் எப்படி இப்படி ஒரு பாடலை இந்த படத்தில் போட்டார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த 25 வருடத்தில் அவர் நிறைய மாறிவிட்டார். இளையராஜாவிற்கு பிறகு இசையை அதிகமாக நேசிப்பவர் வித்யாசாகர் தான்.
இயக்குனர் எழில் இந்த படத்தில் பத்து இயக்குனர்களை நடிக்க வைத்தது போல அடுத்த படத்தில் அவர் பத்து தயாரிப்பாளர்களை கட்டாயம் நடிக்க வைக்க வேண்டும். தயாரிப்பாளர் சங்கம், பெப்சி பிரச்சினைகளை பேசிவிட்டு வீட்டுக்கு டென்ஷனுடன் வருவதெல்லாம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தின் அந்த ஆறு மணி காமெடியை தான் பார்த்து ரிலாக்ஸ் ஆவேன். மக்களுக்கு என்ன தேவையோ அதை கொடுக்க வேண்டும் என்பதற்காக தன்னை மாற்றிக்கொண்டு படங்களை கொடுக்கக்கூடியவர் இயக்குநர் எழில்.
விமல் இந்த படத்தில் அழகாக இருக்கிறார். பிரபுதேவா போல டான்ஸ் ஆடி இருக்கிறார். எப்படி நம்மை படம் எடுக்க வேண்டாம் என்று சொன்னால் கோபப்படுவோமோ அதேபோலத்தான் யூடியூப்பில் விமர்சனம் பண்ணுபவர்களை பண்ண வேண்டாம் என்று சொன்னால் அவர்களுக்கு கோபம் வரும். அது மட்டுமல்ல ஒரு படத்தை பற்றி நல்லபடியாக விமர்சனம் பண்ணினால் அதை பார்ப்பதற்கு இங்கே ஆள் இல்லை. விமர்சனம் பண்ணுவதை தடுக்க முடியாது. ஆனால் படம் வெளியாகி ஒரு நாள் கழித்தாவது விமர்சனம் செய்யலாமே” என்று பேசினார்.





















