அடேங்கப்பா காம்பினேஷனே செம்மயா இருக்கே! - வெளியானது இயக்குநர் ராமின் அடுத்த பட அறிவிப்பு!
”தென்னிந்திய சினிமாவின் பெருமைமிகு முகங்களுடன் ஒரு சிறந்த பயணத்தின் தொடக்கம் “
தமிழ் சினிமாவில் ஆழமான கதைக்களத்தை கையில் எடுத்து , வித்தியாசமான கோணங்களுடன் தனது படைப்புகளை கொடுப்பவர் இயக்குநர் ராம் . இவரது இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இறுதியாக இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பேரன்பு’. இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்திருந்தார். மாறுபட்ட மற்றும் ஆழமான கதைக்களத்துடன் வெளியான இந்த படத்தை தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது மலையாள ரசிகர்களும் கொண்டாடி தீர்த்தனர். மேலும் தங்க மீன்கள் படத்தில் நடித்த சிறுமி சாதனா , இந்த படத்தில் ஆட்டிச நிலையாளரான குழந்தையாக நடித்திருந்தார். பேரன்பு திரைப்படம் பல சர்வதேச திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
இந்நிலையில் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பு எப்போது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.தற்போது ராமின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெயர் வைக்கப்படாத அந்த படத்தை production #7 என குறிப்பிட்டுள்ளனர். படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் நிவின் பாலி கமிட்டாகியுள்ளார். ஹீரோயினாக அஞ்சலி நடிக்க உள்ளார். இது தவிர நடிகர் சூரி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க , படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரடக்ஷன் தயாரிக்கிறது. இது குறித்து சமூக வலைத்தள பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி “ தென்னிந்திய சினிமாவின் பெருமைமிகு முகங்களுடன் ஒரு சிறந்த பயணத்தின் தொடக்கம் “ என குறிப்பிட்டுள்ளார்.
அறிவிப்பு குறித்த போஸ்டரில் பழங்குடியின மக்களின் ஓவியங்கள் பிண்ணனியில் இடம்பெற்றுள்ளன. நிவின் பாலி மற்றும் ராம் கூட்டணி என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படம் தமிழ் மற்றும் மலையாளம் என பைலிங்குவலாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. பேரன்பு படத்திற்கு மலையாள ரசிகர்கள் கொடுத்த வரவேற்பே இந்த முடிவுக்கு காரணமாம். நிவின் பாலியின் நேரம் படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு நேரடியாக ‘ரிச்சி’ என்னும் தமிழ் படத்தில் அறிமுகமானார். ஆனால் அந்த படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்நிலையில் இயக்குநர் ராமுடன் அவர் இணைந்திருப்பதால் நிச்சயம் நிவினுக்கு இந்த படம் கைக்கொடுக்கும் என நம்பப்படுகிறது.விரைவில் படம் குறித்த மற்ற அறிவிப்புகள் வெளியாகும்.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இறுதியாக உருவாகியுள்ள திரைப்படம் ’ மாநாடு’ . இந்த படத்திர்கும் யுவன்தான் இசையமைத்துள்ளார். மாநாடு படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படம் வருகிற ஆயுத பூஜை அன்று திரைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.