Praveen Gandhi: அழகான, வசதியான பெண்ணை காதலித்தால் நாடக காதலா? - பிரவீன் காந்தி கடும் விமர்சனம்!
மோகன் ஜி, மாரி செல்வராஜ் சொல்வது போல அந்தந்த சாதியில் இப்போது தான் கொடுமை நடக்கிறதா?. பாலசந்தர், பாரதிராஜா காலக்கட்டத்தில் நடக்கவில்லையா? ஏன் அவர்கள் சொல்லவில்லை?
![Praveen Gandhi: அழகான, வசதியான பெண்ணை காதலித்தால் நாடக காதலா? - பிரவீன் காந்தி கடும் விமர்சனம்! director praveen gandhi talks about vetrimaaran Pa ranjith Mohan G Mari Selvaraj Praveen Gandhi: அழகான, வசதியான பெண்ணை காதலித்தால் நாடக காதலா? - பிரவீன் காந்தி கடும் விமர்சனம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/19/27c2ce2ff5633022d3e1ba9df6410b671716091803489572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் சினிமா மீது மிகப்பெரிய பிம்பம் உள்ளது. இங்கே சொல்லப்படுவது எல்லாம் உண்மை என எடுத்துக் கொள்கிறார்கள் என இயக்குநர் பிரவீன் காந்தி கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பட விழாவில் பேசிய இயக்குநர் பிரவீன் காந்தி, “சாதிய ரீதியிலான படங்களை எடுத்து வெற்றிமாறனும், பா.ரஞ்சித்தும் தமிழ் சினிமாவை தளர்ச்சியடைய செய்கிறார்கள்” என கூறினார். இதற்கு பதிலடி கொடுத்த இயக்குநர் வெற்றிமாறன், “இந்தியா முழுக்க சாதியக் கொடுமைகள் இருந்து கொண்டு தான் உள்ளது. இந்தியாவில் சாதியரீதியான ஒடுக்குமுறை இன்று இல்லை என்றோ, சமூக ஏற்றத்தாழ்வு இல்லை என்று சொல்கிறவர்கள் எங்கு வாழ்கிறார்கள் என எனக்குத் தெரியவில்லை” என கூறியிருந்தார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் பிரவீன் காந்தி, “வெற்றிமாறன், பா.ரஞ்சித் ஆகியோர் பெயரை அந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்டேன். அதனுடன் மாரி செல்வராஜ், மோகன் ஜி பெயரையும் சேர்த்து கொள்ளுங்கள். இதில் முத்தையா பெயரையும் சேர்த்து கொள்ளலாம். ஆனால் அவர் சொல்லும் குறிப்பிட்ட சமுதாயம் தான் பெரியது என நேரடியாக சொல்ல மாட்டார். நமக்கென ஒரு கடமை உள்ளது.
தமிழ் சினிமாவுக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்பது எம்ஜிஆரை பார்த்தால் தெரியும். ஆந்திராவிலும், தமிழ்நாட்டிலும் சினிமா மீது மிகப்பெரிய பிம்பம் உள்ளது. இங்கே சொல்லப்படுவது எல்லாம் உண்மை என எடுத்துக் கொள்கிறார்கள். பல சாதனையாளர்கள் இதில் இருந்து வந்திருக்கிறார்கள். அதேசமயம் எதை நாம் மறக்க வேண்டும் என நினைக்கிறோமோ அதை தூண்டி விடுகிறதோ என தோன்றுகிறது.
வெற்றிமாறன் தான் சார்ந்த சமூகத்தை பற்றி பேச இது ஈஸியான வழியாக உள்ளதோ என்பதை வியாபார யுக்தியாக எடுத்துக் கொள்கிறார்கள். காலா படத்தில் ரஜினியையும், நானே படேகரையும் எப்படி அடையாளப்படுத்தியிருப்பார்கள் என்பது வெளிப்படையாக தெரியும். மோகன் ஜி, மாரி செல்வராஜ் சொல்வது போல அந்தந்த சாதியில் இப்போது தான் கொடுமை நடக்கிறதா?. பாலசந்தர், பாரதிராஜா காலக்கட்டத்தில் நடக்கவில்லையா? ஏன் அவர்கள் சொல்லவில்லை?
சின்ன கவுண்டர் படத்தில் கவுண்டர் குடும்பத்தைச் சேர்ந்த மனோரமாவை, சலவைத் தொழிலாளியான கவுண்டமணி படம் முழுக்க கிண்டல் செய்திருப்பார். அன்னைக்கு எல்லாரும் நட்பு ரீதியாக இருந்ததால் சாத்தியமானது. இதயம் படத்தில் கஷ்டப்பட்டு கல்லூரிக்கு வரும் முரளி, தன்னை விட வசதியான ஹீராவை காதலிப்பது போல காட்சிகள் இருக்கும். அதை இப்போது எடுத்தால் நாடக காதல் என சொல்லி விடுவார்கள்” என தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)