Agni Natchathiram : ஒரே பாட்டால் நிரோஷாவுக்கு ரசிகரான அமிதாப்பச்சன்.. 35 ஆண்டுகளை கடந்த அக்னி நட்சத்திரம் படம்..!
மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அக்னி நட்சத்திரம் படம் வெளியாகி இன்றோடு 35 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அக்னி நட்சத்திரம் படம் வெளியாகி இன்றோடு 35 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
கடந்த 1988 ஆம் ஆண்டு மணிரத்னம் எழுதி இயக்கிய அக்னி நட்சத்திரம் படத்தில் பிரபு, கார்த்திக், அமலா, நிரோஷா , விஜயகுமார் , ஜெயசித்ரா , சுமித்ரா , எஸ்.என்.லட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். மௌனராகம் படத்திற்கு பிறகு வெளியான இப்படம் ஹீரோக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் எடுக்கப்பட்டிருந்தது.
கிட்டதட்ட 200 நாட்களுக்கு மேலாக ஓடிய இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் பேவரைட் ஆக உள்ளது. இந்த படம் நடிகை நிரோஷாவுக்கு முதல் படமாகும். இந்த படத்தில் இடம்பெற்ற “வா வா அன்பே அன்பே” பாடலில் அவர் நீச்சல் உடையில் ரசிகர்களை கவர்ந்தார்.
ஆரம்பத்தில் படங்களில் நடிக்க நிரோஷா ஆர்வம் காட்டவே இல்லை. இதனால் அவரது அக்காவான நடிகை ராதிகாவிடம் ஒருநாள் முழுக்க மணிரத்னம் பேசி இப்படத்தில் நிரோஷாவை நடிக்க வைத்துள்ளார். நாயகன் படத்தில் ஹீரோயினாக முதலில் நிரோஷாவைத் தான் மணிரத்னம் அணுகியிருந்தார். ஆனால் அவர் மறுத்ததால் அக்னி நட்சத்திரம் படத்தில் மணி ரத்னம் நிரோஷா நடிக்க வேண்டும் என பிடிவாதமாக இருந்தார்.
அந்த படம் ரிலீசான சமயத்தில், ராதிகா Aaj Ka Arjun என்ற இந்தி படத்தில் நடிகர் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்தார். அப்போது ஷூட்டிங்கில் அமிதாப் ராதிகாவிடம், நிரோஷா உன்னுடைய தங்கை தானே என கேட்டுள்ளார். ராதிகாவும் ஆமாம் என தெரிவித்துள்ளார். பின்னர் உன் தங்கை ரொம்ப கவர்ச்சிகரமானவர். அக்னி நட்சத்திரம் படத்தில் வா வா அன்பே அன்பே பாடலை அவளுக்காக நான் 50 முறைக்கு மேல் சி.டி தேய தேய பார்த்து விட்டேன் என தெரிவித்ததோடு நிரோஷாவை அதிகமாக வர்ணித்துள்ளார். அமிதாப்பின் தீவிர ரசிகையான ராதிகாவுக்கு கவலையாக இருந்துள்ளது.
நிரோஷாவை பார்க்க வேண்டும் என அமிதாப் சொல்ல, விஷயத்தை ராதிகா தெரிவித்துள்ளார். ஆனால் வரமாட்டேன் என நிரோஷா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஒரு நேர்காணலில் பேசிய அவர், ”ராதிகா அப்படி சொன்னபோது எனக்கு ரொம்ப பதட்டமாக இருந்தது. இதனிடையே ஷூட்டிங் ஒன்றில் எனக்கு கால் மூட்டு உடைந்தது. மருத்துவமனையில் தவறாக ஆபரேஷன் செய்ய அதனை சரி செய்ய மும்பை சென்றிருந்தேன்.
நான் மும்பை வந்ததை அமிதாப்பச்சனிடம் ராதிகா சொல்லியுள்ளார். அப்படியா, நிரோஷாவை நான் சந்திக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். நிலைமையை சொன்ன பிறகு நான் சீக்கிரம் குணமாக வேண்டி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார். அதன்பிறகு மறுநாள் அமிதாப்பச்சனை சந்திக்க ஷூட்டிங் ஸ்பாட் சென்றேன். என்னோட நேரம் அவருடைய உயரத்திற்கு ஓரளவு ஈடான செருப்பை கூட என்னால் அணிய முடியவில்லை. திரையில் என்னை பார்த்து விட்டு நான் உயரமாக இருப்பேன் என அமிதாப் நினைத்து விட்டார். சின்னப் பெண்ணாக இருந்த என்னை கட்டியணைத்து நான் உன்னுடைய தீவிர ரசிகை என தெரிவிக்க, அதை என்னால் மறக்க முடியாது என நிரோஷா தெரிவித்துள்ளார்.