Ravishankar: எங்கே அந்த வெண்ணிலா.. காற்றோடு கரைந்த ரவிஷங்கருக்கு திரையுலகம் கண்ணீர் அஞ்சலி...
Ravishankar : எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டிருந்தாலும் சரியான வாய்ப்புகள் அமையாததால் காணாமல் போன இயக்குநர் ரவிஷங்கர் தற்கொலை செய்து கொண்டார்.
சிறுகதை எழுத்தாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி பின்னர் இயக்குநர், பாடலாசிரியர் என தன்னுடைய எழுத்து புலமை மூலம் ரசிகர்கள் மத்தியில் நிலைத்தவர் தான் ரவிஷங்கர்.
சிறுகதை எழுத்தாளராக அவர் எழுதிய சிறுகதை ஒன்று பெரிய பாதிப்பை ஏற்படுத்த அவருக்கு இயக்குநர் பாக்யராஜ் அறிமுகம் கிடைக்கிறது. அதன் மூலம் அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரியும் வாய்ப்பு ரவிஷங்கருக்கு அமைந்தது. பாக்யராஜின் 'இது நம்ம ஆளு' படத்தில் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். ஒரு சில காலங்கள் குடும்ப படங்களுக்கு பெயர் போன இயக்குநர் விக்ரமன் படங்களுக்கு உதவி இயக்குநராக பணிபுரிந்தார்.
அதை தொடர்ந்து 2002ம் ஆண்டு சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் மற்றும் குணால், அனிதா நடித்த 'வருஷமெல்லாம் வசந்தம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ரவிஷங்கர். எழுதி மீது இருந்த தன்னுடையாக காதலை பாடலாசிரியராக இருந்து வெளிப்படுத்தினார். சிற்பி இசையில் 'வருஷமெல்லாம் வசந்தம்' படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல் வரிகளையும் ரவிஷங்கரே எழுதி இருந்தார். அதிலும் குறிப்பாக அப்படத்தில் இடம்பெற்ற 'எங்கே அந்த வெண்ணிலா...' , 'அடி அனார்கலி... ', 'முதல் முதலாய்...' உள்ளிட்ட பாடல்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இப்படத்தில் 'அடி அனார்கலி...' பாடலை பாடியதற்காக சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை பெற்றார் உன்னிகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
சரத்குமார் - தேவயானி நடிப்பில் வெளியான 'சூர்யவம்சம்' படத்தின் சூப்பர் ஹிட் பாடலான 'ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ' இன்றும் அனைவரின் பிளேலிஸ்டில் இடம்பெற்று இருக்கும் எவர்கிரீன் பாடல்.
மிகப்பெரிய இயக்குநர், பாடலாசிரியராக வருவார் என அவருக்கு நெருக்கமானவர்கள் எதிர்பார்த்த நிலையில் பெரிய அளவில் வாய்ப்புகள் வராததால் வீட்டிலேயே முடங்கி போனதாக சொல்லப்படுகிறது. திருமணமே செய்துகொள்ளாமல் தனிமையிலேயே வசித்து வந்த ரவிஷங்கர் நண்பர்களுடன் பழகுவதையும் குறைத்து கொண்டு தனிமையில் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் 63 வயதான ரவிஷங்கர், நேற்று இரவு கே.கே. நகரில் அவர் வசித்து வந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் திரையுலகத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்கே அந்த வெண்ணிலா என தேடி ரோசாப்பூவை சூட காத்திருந்த கவிஞன் இன்று காற்றோடு கரைந்து போனார்... என அவரின் நெருங்கிய நட்பு வட்டம் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 - 24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.