Rajinikanth: பாட்ஷா படத்தை குறை சொன்ன கே.எஸ்.ரவிக்குமார்! ரஜினிகாந்த் என்ன பண்ணாரு தெரியுமா?
பாட்ஷா படத்தை பார்த்து குறை சொன்ன நிலையில், ரஜினிகாந்த் என்ன பதில் சொன்னார்? என்று கே.எஸ்.ரவிக்குமார் மனம் திறந்து பேசியுள்ளார்.

தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகர் கவின். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ப்ளடி பெக்கர். பிரபல இயக்குனர் நெல்சன் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருடன் நெல்சன் மற்றும் கவின் இருவரும் இணைந்து நேர்காணல் செய்தனர்.
பாட்ஷாவில் குறை சொன்ன கே.எஸ்.ரவிக்குமார்:
அப்போது, கவின் சரியான நண்பன் தனது தவறை சுட்டிக் காட்டுபவன் என்று கூறினார். அப்போது, கே.எஸ்.ரவிக்குமார் இதுதொடர்பாக கூறும்போது, “ எனக்கு 40 வருஷமா நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் படம் பார்த்துவிட்டு மனதில் இருப்பதை வெளிப்படையாக கூறுவார்கள். அது போன்று சொல்பவர்களும் நமக்கு வேண்டும்.
பாட்ஷா படம் ரிலீசாவதற்கு முதல் நாள் காட்சிக்கு ஆல்பர்ட் தியேட்டரில் பாக்ஸில் உங்களுக்கு டிக்கெட் சொல்லியிருக்கு. நீங்கள் உங்கள் குடும்பத்துடன் சென்று பாருங்கள் என்று கூறினார். போயி பாத்தேன். அன்னைக்கு நைட் கூப்பிட்டார். நான் படம் பார்த்துவிட்டு என்ன தோன்றியதோ அதை சொன்னேன். சார் மாஸ் படம். ஆனால் என்றேன். ஏதாவது குறை இருக்கா? என்று ரஜினி சார் கேட்டார்.
என்ன சொன்னார் ரஜினி?
ஆமா சார். உங்களுக்கு மட்டும்தான் வயசு ஆகல. ஆனா உங்க கூட இருக்குற வில்லனுக்கு வயசு ஆகிட்டே போது. அவரு பொண்ணை நீங்க எப்படி கல்யாணம் பண்றீங்க? என்றேன். அதற்கு அவர் அதெல்லாம் அப்படியே போயிடும் என்றார். குறைகளையும் சொன்னேன்.
சொல்லிவிட்டு வெளியில் வந்து என் நண்பர்களை சந்திக்கும்போது அவர்கள் எல்லாம் அவரோடு படம் பண்றதுக்கு பேசிவிட்டு வருவியா? இப்படி சொல்லிட்டு வந்துருக்கியே? என்றார்கள். நானும் அப்புறம்தான் யோசிச்சேன். ஆனா, இரண்டே வாரத்துல கூப்பிட்டு நாம படம் பண்ணலாமா?னு கேட்டாரு. அவருக்கு அது பிடிச்சு இருந்துச்சு. உண்மையை சொல்றான். உண்மையை சொல்றான் அப்படினு” இவ்வாறு அவர் பேசினார்.
முத்து, படையப்பா:
புரியாத புதிர் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான கே.எஸ்.ரவிக்குமார் நாட்டாமை படம் இயக்கி மிகப்பெரிய இயக்குனராக அங்கீகாரம் பெற்ற நிலையில், 1995ம் ஆண்டு ரஜினிகாந்தை வைத்து அவர் இயக்கிய படம் முத்து. இந்த படம் இந்தியா மட்டுமின்றி ஜப்பானிலும் வெற்றிகரமாக ஓடியது. பாட்ஷா படத்திற்கு பிறகு மிகப்பெரிய உச்சத்திற்கு சென்ற ரஜினிகாந்தின் புகழை மேலும் உச்சத்திற்கு கொண்டு சென்ற படம் முத்து ஆகும்.
முத்து படத்திற்கு பிறகு அருணாச்சலம் படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், கமல்ஹாசனுக்கு அவ்வை சண்முகி, கார்த்திக்கிற்கு பிஸ்தா, சரத்குமாருக்கு நட்புக்காக என அடுத்தடுதது வெற்றி மேல் வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருந்த கே.எஸ்.ரவிக்குமார் மீண்டும் ரஜினியுடன் இணைந்து உருவான படம் படையப்பா.
ரஜினிகாந்த் – கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவான இந்த படம் ரஜினிகாந்த் படங்களில் எப்போதுமே ரசிகர்களால் கொண்டாடப்படும் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் ஆகும். அதன்பின்பு, இருவரது கூட்டணியில் உருவான லிங்கா படம் தோல்வி அடைந்தது. லிங்காவிற்கு முன்பு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ராணா படம் உருவாக இருந்த நிலையில், ரஜினியின் உடல்நலம் காரணமாக அந்த படம் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.





















