தமிழ்நாட்டின் திட்டங்கள் வடமாநிலங்களில் டிரெண்ட் செட்டர்...திமுக அரசை புகழ்ந்து தள்ளிய த செ ஞானவேல்
தமிழ்நாடு அரசின் திட்டங்கள் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வருவதாக வெல்லட்டும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சியில் இயக்குநர் தசெ ஞானவேல் பேசியுள்ளார்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் செய்வதின் பகுதியாக இன்று சென்னையில் வெல்லட்டும் தமிழ்ப் பெண்கள் என்கிற தலைப்பில் மாபெரும் நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது. திமுக அரசு திட்டத்தில் பயனடைந்த பல்வேறு பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழ்நாடு அரசுக்கும் தங்களது நன்றியைத் தெரிவித்தார்கள். திரைத்துறையைச் சேர்ந்த இயக்குநர் ஞானவேல் , வசந்தபாலன் , ராஜூ முருகன் , நடிகை ரோகினி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினர்.
தமிழ்நாடு அரசு திட்டங்கள் பற்றி த செ ஞானவேல்
திட்டங்கள் மாதிரியே திட்டங்களுக்கு வைக்கப்படும் பெயர்கள் ரொம்ப முக்கியம் என்று நான் நினைக்கிறேன். தமிழ்நாடு அரசு தனது திட்டங்களுக்கு வைக்கும் பெயர்கள் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. மணிமேகலை காப்பியத்தில் செவிடு , குருடு என்கிற வார்த்தையை பயன்படுத்தியிருக்க மாட்டார்கள். காது கேளாத , வாய் பேசா என்கிற வார்த்தை தான் பயன்படுத்தி இருப்பார்கள். இன்று தமிழ்நாடு அரசின் திட்டங்களின் பெயர்களும் இதே மாதிரியானவைதான். இலவச பேருந்து என்று இல்லாமல் கட்டணமில்லா பேசுந்து, மகளிர் உதவி தொகை என்று வைக்காமல் உரிமைத் தொகை என்று வைத்திருக்கிறார். வெற்றி நிச்சயம் , வாழ்ந்து காட்டுவோம் போன்ற திட்டங்களின் பெயர்கள் மக்களுக்கு சுய மரியாதையையும் நம்பிக்கையும் தருகிறது. இந்த மாதிரி பிள்ளைகளுக்கு பெயர் வைப்பது மாதிரி திட்டங்களுக்கு பெயர் வைத்து வரும் தமிழ்நாடு அரசை நான் மனதார பாராட்டுகிறேன்.
பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணம்
" இந்த திட்டங்களால் தமிழ்நாடு எவ்வளவு முன்னேறியது , தமிழ் நாடு எவ்வளவு வளர்ச்சி பெற்றது என்று கேட்பார்கள். அந்த பேச்செல்லாம் கடந்த இரண்டு வருடத்தில் முடிந்துவிட்டது. இன்று தமிழ்நாட்டின் திட்டங்கள் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறது என்பதை நாம் பேசவேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். இங்கு இருக்கக் கூடிய கட்டணமில்லா பேருந்து பக்கத்தில் இருக்கக் கூடிய கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் அறிக்கையாக மாறுகிறது. இங்கு இருக்கக் கூடிய திட்டங்கள் வட மாநிலங்களுக்கு டிரெண்ட் செட்டராக இருந்து வருகின்றன. திராவிட இயக்கம் என்றாலே பேச்சு அரசியல் என்று கேலியாக சொல்வார்கள். ஆனால் நாம் உரத்து சொல்ல வேண்டியது பேச்சே இங்கு பெரிய அரசியல் தான்." என்று இயக்குநர் ஞானவேல் பேசினார்.





















