Chirstopher Nolan: ஹீத் லெட்ஜர் மறைந்தபோது.. கோல்டன் க்ளோப் மேடையில் கிறிஸ்டோஃபர் நோலன் உருக்கம்!
Golden Globe Awards 2024: சிறந்த இயக்குநருக்கான விருதை வென்ற இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் தனது நண்பர் நடிகர் ஹீத் லெட்ஜரை நினைவுகூர்ந்துள்ளார்.
கோல்டன் க்ளோப் விருதுகளில் சிறந்த இயக்குநருக்கான விருதை வென்ற கிறிஸ்டோஃபர் நோலன் (Christopher Nolan) தனது நண்பர் மறைந்த நடிகர் ஹீத் லெட்ஜரை நினைவு கூர்ந்தார்.
கோல்டன் க்ளோப்
ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதிற்கு நிகரான அந்தஸ்த்தைப் பெற்ற ஒரு விருது கோல்டன் குளோப். 81 வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள பெவர்லி ஹில்டன் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்திய நேரப்படி காலை 6.30 தொடங்கிய இந்நிகழ்ச்சியில் பல்வேறு படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு என மொத்தம் 27 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலான விருதுகளை ஓப்பன்ஹெய்மர் படக்குழுவே தட்டிச் சென்றது.
ஓப்பன்ஹெய்மர்
கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் கிலியன் மர்ஃபி, எமிலி பிளண்ட், ராபர்ட் டெளனி ஜூனியர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் ஓப்பன்ஹெய்மர். அனு குண்டை கண்டுபிடித்த இயற்பியல் விஞ்ஞானி ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான இந்தப் படம் இந்தியளவில் மட்டும் 100 கோடிகளுக்கும் மேலாக வசூல் செய்தது.
இந்தப் படத்தில் இடம்பெற்ற நெருக்கமான காட்சிகளில் பகவத் கீதையின் வசனங்களை கதாநாயகன் பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றதால் இந்தப் படத்திற்கு விமர்சனங்கள் எழுந்தன. கடந்த ஆண்டு ஹாலிவுட் சினிமாவில் வெளியாகிய படங்களில் பார்பீ மற்றும் ஓப்பன்ஹெய்மர் படம் அதிக வசூல் ஈட்டியது . இந்நிலையில் இன்று நடைபெற்ற கோல்டன் குளோப் விருது நிகழ்ச்சியில் மொத்தம் ஐந்து விருதுகளை ஓப்பன்ஹெய்மர் படம் வென்றது. இந்தப் படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான விருதை கிறிஸ்டோஃபர் நோலன் வாங்கினார். அப்போது மறைந்த தனது நண்பன் மற்றும் நடிகர் ஹீத் லெட்ஜரை அவர் நினைவு கூர்ந்தார்.
16 வருடங்களுக்குப் பிறகு அதே மேடை
கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய பேட்மேன் சீரிஸின் இரண்டாம் பாகம் தி பேட்மேன் டார்க் நைட் படத்தில் ஜோக்கராக நடித்தார் ஹீத் லெட்ஜர். இந்தப் படத்தில் இவரது கதாபாத்திரத்திற்காக கடுமையான உழைப்பை செலுத்திய அவர் அனைவரையும் மிரளவைத்தார்.
முந்தைய படங்கள் தோல்வியடைய பேட்மேன் படம் அவருக்கும் மிகப்பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தது. இப்படியான நிலையில் ஹீத் லெட்ஜர் எதிர்பாராதவிதமாக தனது அப்பார்ட்மெண்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். ஓவர் டோஸாக மருந்து உட்கொண்டதால் அவர் உயிரிழந்தார்.3 அந்த ஆண்டு அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. அவரது மரணத்திற்குப் பின் அவர் சார்பில் இந்த விருதை கிறிஸ்டோஃபர் நோலன் இந்த விருதை பெற்றுக் கொண்டார்.
இன்று சிறந்த இயக்குநருக்கான விருதை பெற்றுக்கொள்ள 16 ஆண்டுகளுக்குப் பிறகு அதே மேடையில் அவர் தனது நண்பர் ஹீத் லெட்ஜரை நினைவு கூர்ந்து பேசினார். அன்று நான் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தேன். இன்று கீழே அமர்ந்து என்னை அன்பான ஒரு பார்வை பார்த்துக் கொண்டிருக்கும் ராபர்ட் டெளனி இதேபோல் அன்றும் என்னை பார்த்து எனக்கு ஆதரவு தெரிவித்தார். இந்த விருதை ரசிகர்களின் சார்பில் தான் ஏற்றுக் கொள்வதாக கூறி தனது படத்தில் நடித்த நடிகர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.