28 வருட மோதல் இன்னும் தொடர்கிறதா? நேருக்கு நேர் சந்தித்தும் பேசாமல் சென்ற பார்த்திபன் சேரன்
அணமையில் இயக்குநர் சேரன் மற்றும் பார்த்திபன் இருவரும் சந்தித்துக் கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் இருவருக்கும் இடையிலான பழைய மோதல் ஒன்றை ரசிகர்கள் பேசத் துவங்கியுள்ளார்கள்.

அண்மையில் மறைந்த இயக்குநர் வி சேகருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியபோது இயக்குநர் பார்த்திபன் மற்றும் சேரன் இருவரும் சந்தித்துக் கொண்டனர். இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டு ஒரு வார்த்தைக்கூட பேசாமல் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைத் தொடர்ந்து சேரன் மற்றும் பார்த்திபன் இடையிலான பழைய பிரச்சனை ஒன்றை ரசிகர்கள் தற்போது மீண்டும் கிளறத் தொடங்கியுள்ளார்கள்.
28 வருடங்களுக்கு முன் மோதல்
1997 ஆம் ஆண்டு சேரன் இயக்குநராக அறிமுகமான பாரதி கண்ணம்மா படத்தில் பார்த்திபன் நாயகனாக நடித்தார். பொதுவாக படங்களின் க்ளைமேக்ஸில் நாயகன் தான் தியாகம் செய்வார். ஆனால் இந்த படத்தில் நாயகி மீனா தனது காதலை தியாகம் செய்யும் வகையில் க்ளைமேக்ஸ் அமைந்திருந்தது. இந்த வித்தியாசமான க்ளைமேக்ஸிற்காகவே பாரதி கண்ணம்மா திரைப்படம் பெரியளவில் பேசப்பட்டது. ஆனால் இந்த க்ளைமேக்ஸ் எடுக்கும்போது சேரன் மற்றும் பார்த்திபன் இடையில் கரும் வாக்குவாதம் ஏற்பட்டது . படத்தின் க்ளைமேக்ஸ் முழுவதையும் கேட்டபின்பே பார்த்திபன் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் படப்பிடிப்பின் போது தனக்கு இந்த க்ளைமேக்ஸில் விருப்பம் இல்லை என்று அவர் வாக்குவாதம் செய்ததாக சேரன் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். பார்த்திபன் மற்றும் தயாரிப்பாளர்கள் சொன்னதையும் மீறி தான் எடுக்க நினைத்ததை எடுத்து முடித்தார் சேரன்.
பார்த்திபன் படத்தை குறைசொன்ன சேரன்
அதேபோல் 2019 ஆம் ஆண்டு சேரன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். அப்போது பார்த்திபன் அளித்த பேட்டி ஒன்றில் ' பிறரது மனதை புண்படுத்த சேரன் தயங்கமாட்டார்' என சேரன் குறித்து பேசியிருந்தார். அதேபோல் வேறு ஒரு இயக்குநரின் படத்தைப் பார்த்துவிட்டு சேரன் 'என்ன பார்த்திபன் மாதிரி படமெடுத்திருக்கீங்க ' என நக்கலாக சொன்னதாக மற்றொரு தகவல் வெளியானது. இதனால் சேரன் மற்றும் பார்த்திபன் இடையில் சமூக வலைதளத்தில் கருத்து மோதல் நடந்தது. பின் இருவரும் அவரவர் தவறை ஒப்புக்கொண்டு சுமுகமாக விலகினர்.
நேரில் சந்தித்தும் பேசிக்கொள்ளாதது ஏன் ?
அண்மையில் மூத்த இயக்குநர் வி சேகரின் இறப்பிற்கு அஞ்சலி செலுத்த சேரன் மற்றும் பார்த்திபன் சென்றன. அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டு எதுவும் பேசிக்கொள்ளாமல் சம்பிரதாயத்திற்கு கைகுலுக்கி நகர்ந்தனர். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் இடையில் பழைய பிரச்சனை இன்னும் தீரவில்லையா. ஒரு வார்த்தைக்கூட இருவரும் ஏன் பேசிக்கொள்ளாமல் சென்றனர் என கேள்வி எழுப்பியுள்ளார்கள்.





















