Director Bharathiraja: ஆமாம்.. நடிகை அதிதி காலில் விழுந்தேன்.. மேடையில் பாரதிராஜா ஓப்பன் டாக் - காரணம் என்ன?
இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படமான கருமேகங்கள் கலைகின்றன திரைப்படத்தின் குழு செய்தியாளர்களைச் சந்தித்ததனர்.
இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படமான கருமேகங்கள் கலைகின்றன திரைப்படத்தின் குழு செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான பாரதி ராஜா பேசுகையில், ”இந்த படத்தின் கதையை தங்கர் பச்சான் விவரிக்கும்போது நாவல் படித்த உணர்வு வந்தது. வாழ்க்கையில் இதுபோன்ற கதாபாத்திரம் மிகவும் அரிது. இந்த படத்தில் நடித்த அனைவரையும் பாராட்டுகிறேன். உள்ளளவில் கூறுகிறேன் நான் பெண்களின் கண்கள் என்றால் விரும்பி ரசிப்பேன்.
நான் படம் இயக்கிய காலத்தில் கூட ஷாட் வைத்தால் கண்களுக்குத்தான் வைப்பேன். அதன் பின்னர் நான் கண்களை மிகவும் ரசித்தது இயக்குநர் கௌதம் மேனன் கண்களைத்தான். கௌதம் மேனனின் கண்கள் பேசுகிறது. நாமெல்லாம் நடிக்கும்போது முகத்தை மேலும் கீழும் நகர்த்தி நடிப்போம். ஆனால் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு கண்கள் இயல்பாகவே பேசுகிறது. கௌதம் மேனனை இயக்குநராக பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு நடிகனாக மிகவும் ஆழமாக அந்த கண்கள் மட்டும் அவ்வளவு பேசுகிறது. அந்த நடிப்பிற்கு தலை வணங்குகிறேன். எனக்கும் கௌதம் மேனனுக்கும் ஒரு காட்சி உள்ளது. அந்த காட்சியில் நான் அவரை அடிக்க வேண்டும். நான் கௌதம் வாசுதேவ் மேனனை அடிக்கவே மிகவும் சிரமப்பட்டேன். அடிங்க சார்” என அவர் கூறிய பின்னர் அடித்துவிட்டேன்.
அதேபோல் மற்றொரு காட்சியில் அதிதி பாலன் காலில் நான் விழ வேண்டும். எல்லோரும் கேட்பார்கள் அதிதி பாலன் காலில் பாரதிராஜா விழுவதா? எப்போது சினிமாதான் எனது தெய்வீக தொழில் என வந்த பின்னர் வித்தியாசமே கிடையாது. அதிதி காலில் ஒன்றும் நான் விழவில்லையே! ராமநாதனின் பொண்ணு காலில் தானே விழுந்தேன்” என்றார்
மேலும், ”இந்த படத்தைப் பற்றி நான் பேசவேண்டும் என்றால் பேசிக்கொண்டே இருப்பேன். இந்த படத்தின் லெனினைப் பார்த்ததில்லை. 40 முதல் 50 வருடங்கள் சினிமாவில் இருக்கிறேன். இவரது தம்பி கண்ணனுடன் நான் பணியாற்றியிருக்கிறேன். அவரை இப்போது நினைத்தாலும் கண்ணீர் வந்து விடும். மிகவும் அற்புதமான மனிதர். கண்ணன் நல்ல கேமராமேன். ஆனால் எந்த விழாவுக்கும் செல்லாத லெனின் இந்த விழாவுக்கு வந்துள்ளார். அதேபோல் நடராஜன், நான் முன்பெல்லாம் அவரை கவிதாலயா நடராஜன் என அழைத்துக்கொண்டு இருப்பேன். இவ்வளவு சிறப்பாக நடிப்பார் எனத் தெரியாது. அமைச்சர் கூட அப்படி இருக்கமாட்டார், மிக அற்புதமாக நடித்துள்ளார்.
மேலும், திரைப்பட வரலாற்றில் சில படங்கள் தான் வருடக் கணக்கில் பேசப்படும். திரைப்படம் என்பது நான்கு சுவற்றிக்குள் அமர்ந்து அனைவரும் பார்ப்பது. கருமேகங்கள் கலைகின்றன திரைப்படம் ஒரு படம் இல்லை இது அதனையும் கடந்தது. இது ஒரு புத்தகம். சினிமாவில் நாகரீகமாக எடுக்கப்பட்ட சினிமா. சாரல் என்ற குழந்தை நட்சத்திரம் நடித்துள்ளார். அவருக்கும் கௌதம் மேனனைப்போல் கண்கள் பேசுகின்றன. இந்த படத்தில் நடித்த அனைவரும் தனக்கு வழங்கப்பட்ட கதாப்பாத்திரத்தை மிகவும் சிறப்பாக கையாண்டுள்ளனர். குறிப்பாக யோகி பாபு, அவரது முக அமைப்பிற்கும் முடி அலங்காரத்தையும் வைத்து தனது நடிப்பால் நம்மை கண் கலங்கை வைத்து விட்டார். கருமேகங்கள் கலைகின்றன திரைப்படத்தை கணவன், மனைவி, குழந்தைகள், பேரன், பேத்தி என அனைவருடனும் அமர்ந்து பார்க்க வேண்டிய படம்” என பாரதிராஜா பேசினார்.