Alaigal Oivathillai: 'மதங்களை கடந்த காதல்’ .. காவியம் படைத்த பாரதிராஜா.. அலைகள் ஓய்வதில்லை ரிலீசாகி 42 வருஷமாச்சு..!
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் உருவான‘அலைகள் ஓய்வதில்லை’ படம் வெளியாகி இன்றோடு 42 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் உருவான‘அலைகள் ஓய்வதில்லை’ படம் வெளியாகி இன்றோடு 42 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
பாரதிராஜாவின் காவியம்
பொதுவாக சினிமாவில் காதல் கதைகளுக்கு பஞ்சமே இல்லை. அது எப்படி சொல்லப்படுகிறது என்பதில் தான் வெற்றியே உள்ளது. ஒரு மாதிரி கருத்தை எடுத்தாலும் சுவாரஸ்யமாக சொன்னாலும் எப்படிப்பட்ட காதல் கதையையும் மக்கள் கொண்டாடுகிறார்கள். விடலைப் பருவ காதலும், மதம் தாண்டிய காதலையும் சொல்லி ரசிகர்களிடம் கவனம் பெற்றார் ‘பாரதிராஜா’ . அந்த படம் தான் ‘அலைகள் ஓய்வதில்லை’. இந்த படம் கார்த்திக் மற்றும் ராதாவுக்கு அறிமுகப்படமாகும். மேலும் தியாகராஜன், சில்க் ஸ்மிதா, கமலா காமேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
படத்தின் கதை
பிராமண ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திக்கிற்கும், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த வசதிப் படைத்த ராதாவுக்கும் ஒரு கட்டத்தில் காதல் முளைக்கிறது. தங்கையின் காதல் அண்ணனுக்குத் தெரியவருகிறது. கோபமாகி இருவரையும் அடிக்கிறார். காதலைக் காவு வாங்க மதம் குறுக்கே வருகிறது. நண்பர்களின் உதவியுடன் ஊரை விட்டு ஓடிப்போக நினைக்கிறார்கள். ஊரே திரண்டு வந்து நிற்கிறது. அண்ணனுக்கும் ஊர் மக்களும் திக்கித்து நிற்கும் படி காதலர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதையாகும்.
அலைகள் ஓய்வதில்லை படத்தின் சிறப்புகள்
நிழல்கள் படத்தின் தோல்வியை தொடர்ந்து அலைகள் ஓய்வதில்லை படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த 2 படங்களின் கதைக்கும் சொந்தக்காரன் பின்னாளில் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர், நடிகர் என பெயரெடுத்த மணிவண்ணன் தான். பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த அவரே வசனமும் எழுதினார். கவர்ச்சி நடிகையாக அறியப்பட்ட சில்க் ஸ்மிதா, நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருந்தார். இசையமைப்பாளர் இளையராஜா , தனது சகோதரர் பாஸ்கருடன் பாவலர் கிரியேஷன்ஸ் என்ற பெயரில் இப்படத்தை தயாரித்திருந்தார்.
பஞ்சு அருணாசலம், கங்கை அமரன், வைரமுத்து, இளையராஜா ஆகியோர் எழுதிய பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. குறிப்பாக ஆயிரம் தாமரை மொட்டுக்களே பாடல் எவர்க்ரீன் பாடலாக அமைந்தது. இந்த படம் திரையிட்ட தியேட்டர்கள் எல்லாம் 100 நாட்களை கடந்து ஓடியது. இன்றைக்கும் டிவியில் போட்டாலும் முழுவதுமாக பார்ப்பவர்கள் நிறைய பேர். எப்படி அலைகள் ஓயாதோ, அதே போல் தான் இந்த படத்தின் தாக்கமும் என்றென்றைக்கும் ஓயாது.