Anurag Kashyap: ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு... அனுராக் காஷ்யப் பிறந்தநாளில் மகள் தந்த சர்ப்ரைஸ்!
நடிகராகவும் தன் திறமையைக் காண்பித்த அனுராக், தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். லியோ படத்திலும் சர்ப்ரைஸ் பாத்திரத்தில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அனுராக் காஷ்யப்
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இயக்குநர் அனுராக் காஷ்யப், சினிமா ஆசையில் 1993ஆம் ஆண்டு மும்பைக்கு வந்தார். அங்குள்ள தியேட்டர் ஒன்றில் வேலைக்கு சேர்ந்து தொலைக்காட்சி தொடருக்கு வசனம் எழுதி வந்தார். தொடர்ந்து ராம் கோபால் வர்மாவின் படங்களுக்கு வசனம் எழுதிய அவர், ‘பாஞ்ச்’ என்னும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
ஆனால் சென்சாரில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அப்படம் ரிலீசாகவில்லை. தொடர்ந்து Black Friday, No Smoking, Return of Hanuman, Dev D, Gangs of Wasseypur, Bombay Velvet உள்ளிட்ட பல படங்களை இயக்கி பாலிவுட்டில் முக்கிய இயக்குநராக வலம் வருகிறார். நடிகராகவும் தன் திறமையைக் காண்பித்த அனுராக் தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். லியோ படத்திலும் சர்ப்ரைஸ் பாத்திரத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பிறந்தநாள் வாழ்த்து
இன்று அனுராக் காஷ்யப் தனது 51ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளன்று அவரது மகளான ஆலியா காஷ்யப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தந்தையுடனான சிறு வயது புகைப்படத்தைப் பகிர்ந்து “பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா” என்று பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
சமீபத்திய நேர்காணல்
முன்னதாக, எத்தனையோ நல்ல படங்களை இயக்கி இருந்தாலும் தன்னுடைய படங்களுக்கு ஒரு தேசிய விருதும் கிடைக்காதது ஏன் என்கிற கேள்விக்கு அனுராக் அளித்த பதில் கவனமீர்த்தது. ”என்னுடைய படங்களுக்கு எந்த சூழலிலும் தேசிய விருது கிடைக்கப் போவதில்லை என்று எனக்குத் தெரியும். ஏனென்றால் நான் அத்தனை அரசுகளுடன் சண்டையிட்டிருக்கிறேன்.
அதே நேரத்தில் எந்த சூழலிலும் நான் சண்டை போடுவதை நிறுத்தப் போவதில்லை. இத்தனை ஆண்டுகளில் உங்களுடைய படங்களுக்காக எப்படி சண்டையிட வேண்டும் என்பது எனக்கு தெரிந்திருக்கிறது. சென்சார் வாரியத்திற்கு எந்த காரணத்திற்காகவும் உங்களுடைய படங்களின் காட்சிகளை நீக்கும் உரிமை கிடையாது என்பது எனக்கு தெரிந்திருக்கிறது” என்று அவர் கூறினார்.
ஹட்டி
அனுராக் காஷ்யப் முக்கிய வில்லனாக நடித்துள்ள படம் ஹட்டி (எலும்பு) . இந்தப் படத்தில் நவாசுதீன் சித்திக் திருநங்கை கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். மேலும் பாலிவுட் இயக்குநர் அக்ஷத் அஜய் ஷர்மா இயக்கியிருக்கும் இந்தப் படத்தை ஜீ ஃபைவ் ஒடிடி தளம் தயாரித்துள்ளது. இந்த படம் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.