கேஜிஎப் படத்தால் தெறித்த வார்த்தைகள்! மேடையில் முட்டிக்கொண்ட அருண்பாண்டியன் - அமீர்!
கே.ஜி.எப். மற்றும் ஆர்.ஆர்.ஆர். படத்தை வைத்து தமிழ் சினிமாவை எடை போடாதீர்கள் என்று இயக்குனர் அமீர் காட்டமாக பேசியுள்ளார்.

நடிகர் அமீர் சமீபத்தில் நடைபெற்ற படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகரும், தயாரிப்பாளருமாகிய அருண்பாண்டியன் தமிழ் சினிமா பின்னோக்கி சென்று கொண்டிருப்பதாக பேசினார். இந்த நிலையில், அந்த மேடையில் பேசிய அமீர் அருண்பாண்டியன் கருத்துக்கு மறுப்பு தெரிவித்தார்.
அமீர் அந்த நிகழ்ச்சியில் பேசியிருப்பதாவது, அருண்பாண்டியன் சார் பேசும்போது பல கருத்துக்களை கூறினார். தமிழ்சினிமா மீதான கோபத்தை கூறினார். நடிகர்களின் சம்பளத்தை கூறினார். தயாரிப்பாளராக அவர் இருப்பதால் அது அவருடைய பிரச்சினை. 90 சதவீதம் கொடுத்தார்களா? 80 சதவீதம் கொடுத்தார்களா? என்பது அவருடைய பிரச்சினை. முதலில் ஏன் கொடுக்கிறீர்கள்? என்பதுதான் என்னுடைய கேள்வி. கொடுப்பதில் இருந்துதான் தொடங்குகிறது.

அவர் சொல்லும்போது தவறுதலாக ஒரு வார்த்தை கூறினார். தமிழ்சினிமா எல்லா வகையிலும் பின்தங்கியிருப்பதாக கூறினார். அதை ஏற்க மறுக்கிறேன். இந்திய சினிமாவிற்கே முன்னோடி தமிழ் சினிமாதான். ஒருநாளும் தமிழ் சினிமா பின்னோக்கி போகாது. ஒரு ஆர்.ஆர்.ஆர்., கே.ஜி.எப்.-ஐ வைத்து எடை போடாதீர்கள். அந்த காலத்திலே சந்திரலேகா எடுத்துள்ளனர்.
அந்த சந்திரலேகாவிற்கு இணையாகவோ ஆயிரத்தில் ஒருவன், நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபனுக்கு இணையாகவே, சமூக படைப்புகள், எளிய படைப்புகள் என தமிழ் சினிமாவின் படைப்புகளுககு ஈடு இணையே கிடையாது. அதனால், பின்தங்கியிருக்கிறோம் என்று மட்டும் கூறாதீர்கள். என்னால் அந்த வார்த்தையை மட்டும் ஏற்கவே முடியாது. தமிழ் சினிமா என்றைக்குமே முன்னோடியாகதான் இருந்தது.

அனைத்து காலகட்டத்திலும் ஹீரோக்கள் பின்னால் சினிமா இருந்துள்ளது. பாரதிராஜா சார் 16 வயதினிலே பண்ணும்போது இருந்தது, அவர் கிழக்குச்சீமையிலே பண்ணும்போதும் இருந்தது. இல்லையென்று மறுக்கவே முடியாது. ஆனால், அது கிழக்குச்சீமை, கருத்தம்மா வருவதற்கு தடையாக இருந்தது கிடையாது. கமர்ஷியல் சினிமா ஒரு பக்கம் இருக்கும்.
தமிழ் சினிமா கலைஞர்கள்தான் இன்றைக்கு அனைத்து மொழிகளிலும் இருக்கிறார்கள். ராஜமவுலி தன்னுடைய படத்தின் விளம்பரத்திற்காக உட்கார்ந்திருந்தபோது என்னுடைய தாய்வீடு என்று தமிழ்சினிமாவை கூறியுள்ளார். நாங்கள் இதைப்பார்த்துதான் கற்றுக்கொண்டோம். நாங்கள் இன்னும் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது என்றார். ஒரு சில படங்களின் வெற்றியை வைத்து தமிழ் சினிமாவை எடைபோட வேண்டாம். தமிழ் சினிமா என்றைக்கும் தலைநிமிர்ந்து இருக்கும்.”
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், மேடையில தன்னுடை கருத்து குறித்து அருண்பாண்டியன் விளக்கம் அளித்தார். இதனால், சிறிது நேரம் மேடையில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்




















