Thalapathy Vijay: "இளைஞர்களுக்கு விஜய் ஒரு ரோல் மாடல்" - இயக்குநர் ஏ.வெங்கடேஷ் புகழாரம்!
இன்றைய இளைஞர்களுக்கு விஜய் ஒரு ரோல் மாடல். அவரை பின்பற்றினால் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நீந்தி எப்படி வெற்றி பெறலாம் என தெரிந்து கொள்ளலாம்.
விஜய்யின் இன்றைய வளர்ச்சி என்பது மிக பிரமாண்டமானது என இயக்குநர் ஏ.வெங்கடேஷ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் விஜய். ரசிகர்களால் தளபதி என கொண்டாடப்படும் அவருக்கு ஜூன் 22 ஆம் தேதி 50வது பிறந்தநாள் ஆகும். இதனை பிரமாண்டமாக கொண்டாட திரையுலகினர், ரசிகர்கள், தமிழக வெற்றிக் கழகத்தினர் என அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இப்படியான நிலையில் விஜய் தற்போது “The Greatest of All Time" என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் அடுத்த அப்டேட் பிறந்தநாளன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே விஜய்யை வைத்து 3 படங்களை இயக்கிய கமர்ஷியல் இயக்குநர் ஏ.வெங்கடேஷ் நேர்காணல் ஒன்றில் விஜய்யின் வளர்ச்சி பற்றி பேசியுள்ளார். அதில், “விஜய்யின் வளர்ச்சி பிரமாண்டமானது என்பது உலகத்துக்கே தெரியும். இதை யாரும் எதிர்பார்க்கவே இல்லை. எதிர்கருத்துகளுக்கு மத்தியில் அந்த வளர்ச்சி வந்தது. அது சாதாரணமானது இல்லை. இன்றைய இளைஞர்களுக்கு விஜய் ஒரு ரோல் மாடல். அவரை பின்பற்றினால் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நீந்தி எப்படி வெற்றி பெறலாம் என தெரிந்து கொள்ளலாம்.
அறிமுகமான புதிதில் எந்த பத்திரிக்கை விஜய்யை விமர்சித்ததோ பின்னாளில் அதே பத்திரிக்கையில் அட்டைப்படத்தில் அவர் படம் வந்தது. அதேபோல் ஆரம்ப காலத்தில் தியேட்டர்களில் அவர் படத்துக்கு ஒரு காட்சி, இரண்டு காட்சி கொடுத்தார்கள். இன்றைக்கு விஜய் படம் தங்கள் தியேட்டரில் ரிலீசாகாதா என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இது அற்புதமான வளர்ச்சி தான்.
என்னுடைய முதல் படமான மகாபிரபு பார்த்து தான் விஜய் என்னுடன் படம் பண்ணலாம் என அழைத்தார். நானும் ஒருநாள் கழித்து காதல் கதை ஒன்றை சொன்னேன். வேண்டாம் என எஸ்.ஏ.சந்திரசேகர் சொல்லிவிட்டார். அப்ப விஜய்க்கு இருந்த சூழலை வைத்து கதை யோசித்தால் வரவில்லை. அதன்பின்னர் எஸ்.ஏ.சந்திரசேகர் உதவியாளரான தமிழன் பட இயக்குநர் மஜீத் ஒரு கதை சொன்னார். அதுதான் “செல்வா” படம் உருவானது.
விஜய்க்கு காதல் படம் பண்றதுக்கு பதிலாக ஆக்ஷன் படம் பண்ண வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.செல்வா படத்தில் அதை உணர்ந்து நிறைய ஆக்ஷன் காட்சிகளை வைத்தேன். இதன்பின்னர் எங்கள் கூட்டணி என்றென்றும் காதல், பகவதி படம் என தொடர்ந்தது" என ஏ.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.