Sarath Babu: ‘வாக்கிங் போகும்போது முளைத்த காதல்’.. மறைந்த நடிகர் சரத்பாபு பற்றிய அறியப்படாத தகவல்கள்..!
மறைந்த நடிகர் சரத்பாபுக்கும் தனக்குமான உறவு குறித்து இரண்டாவது மனைவியின் மகன் தீபக் நம்பியார் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மறைந்த நடிகர் சரத்பாபுக்கும் தனக்குமான உறவு குறித்து இரண்டாவது மனைவியின் மகன் தீபக் நம்பியார் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த சரத்பாபு, கடந்த மே 25 ஆம் தேதி உடல்நலக்குறைவால் ஹைதராபாத்தில் உயிரிழந்தார். அவரின் கடைசி ஆசைப்படி அவரது உடல் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. சரத்பாபு முதலில் ரமா பிரபா என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த உறவானது விவாகரத்தில் முடிந்தது. தொடர்ந்து தமிழ் சினிமாவின் மறைந்த பழம்பெரும் நடிகரான எம்.என்.நம்பியாரின் மகளான சினேகாவை 2வதாக திருமணம் செய்துகொண்டார். ஆனால் வாழ்க்கையும் பாதியில் முடிந்தது.
இப்படியான நிலையில், சினேகாவின் மகனான தீபக் நம்பியார், சரத்பாபு பற்றிய பல அறியப்படாத பல தகவல்களை நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். அதில், “நடிகர் மோகன் ராம் தான் பாபுஜியின் (அப்பா) உடல் நிலை பற்றி சொன்னார். நான் உடனே அம்மாவை அழைத்துக் கொண்டு பெங்களூரு சென்றேன். அங்கு அப்பாவின் சகோதரர் இருந்தார். அவரை பார்த்தபோது எங்களுக்கே மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. காரணம் உடல்நிலையில் அவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டவர் கோமா நிலையில் இருந்தார்.
1988 ஆம் ஆண்டு சரத்பாபுவுக்கு முதல் திருமணம் முறிவுக்கு வந்தது. அதன்பிறகு 1990ம் ஆண்டில் போட் கிளப் பகுதியில் வாக்கிங் போகும்போது அம்மாவை பார்த்து பேசுவது வழக்கம். அப்படி அவர்கள் நட்பு வளர்ந்து அடுத்தக்கட்டத்துக்கு சென்றது. அப்படி ஒருநாள் அம்மாவிடம், நான் உங்கள் அப்பாவிடம் (நம்பியார்) பேசப்போகிறேன். அதன்பிறகு வீட்டுக்கு வந்து பேசி திருமணம் செய்துக் கொண்டார்.
நம்பியார் தாத்தாவுக்கு அப்பாவை பற்றி நன்றாகவே தெரியும். அதனால் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. சுமூகமாகவே சென்றது. சரத்பாபுவுக்கு சோமன் பாபு, ஒய்.ஜி.மகேந்திரன், மோகன் ராம், நடிகை சுஹாசினி ஆகியோர் மிகவும் நெருக்கமானவர்கள். படத்தில் நீங்கள் எவ்வளவு நட்பானவராக பார்க்கிறீர்களோ, நிஜ வாழ்க்கையில் அதற்கு நேரெதிராகவே இருப்பார்.
சின்ன வயதில் இருந்தே சரத்பாபு கஷ்டப்பட்டு வந்ததால், அவருக்கு எதைப்பற்றியும் ஒரு தெளிவான அணுகுமுறை இருந்தது. இருவரும் திருமணம் செய்துக் கொண்ட போது எனக்கு வயது 20. ஆனால் அவருடன் இருக்கும்போது அம்மாவுக்கு ஏற்பட்ட சந்தோஷத்தை பார்த்தபோது நானும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டேன். நானும் சரத்பாபுவை எப்போதும் ஒரு அப்பாவாக மதித்துள்ளேன். அவர் எனக்கு சொல்லிக் கொடுத்த பாடங்கள் இன்றும் மறக்க முடியாதது. எனக்கு ஏதாவது சந்தேகங்கள் ஏற்பட்டால் அவரிடம் தான் கேட்பேன்” என தெரிவித்துள்ளார்.