தூக்குல தொங்கி இருப்பாங்க.. ரிவியூவ்க்கு ரூ.3 லட்சம்.. ப்ளூ சட்டை மாறன் குறித்து பார்த்திபன் ஆடியோ!
வேறு ஒரு தயாரிப்பாளராக இருந்தால் தூக்கில் தொங்கி இருப்பார் நீங்கள் கொடுக்கும் அழுத்தத்தில். நீங்கள் விமர்சனம் செய்யும் முறை பலரை இரிட்டேட் செய்கிறது.
![தூக்குல தொங்கி இருப்பாங்க.. ரிவியூவ்க்கு ரூ.3 லட்சம்.. ப்ளூ சட்டை மாறன் குறித்து பார்த்திபன் ஆடியோ! Did my fans burn the effigy of the Blue Shirt Maran Parthiban explained in the audio தூக்குல தொங்கி இருப்பாங்க.. ரிவியூவ்க்கு ரூ.3 லட்சம்.. ப்ளூ சட்டை மாறன் குறித்து பார்த்திபன் ஆடியோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/20/60a1acf3034ca84a1cc4ff1975facd2c1658299785_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இரவின் நிழல் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் செய்த விமர்சனம் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட விமர்சனத்தில், "படத்தை ஒரே ஷாட்டில் எடுத்திருக்கிறார்கள், படத்திற்கு முன்பு மேக்கிங் வீடியோ என்று அரை மணிநேரம் காண்பித்திருக்கிறார்கள், பார்த்திபன் இதை உலகிலேயே நான்லீனியர் படம் என்று சொன்னார். ஆனால், ஏற்கனவே 2013 இல் ஈரானில் fish & cat என்ற படம் வந்து விட்டது. அதனால் இதை உலகிலேயே, தமிழகத்திலேயே, சினிமாவிலேயே என்று சொல்வதெல்லாம் தேவையில்லாத ஒன்று", என்று பேசி இருந்தார்.
ப்ளூ சட்டை உருவபொம்மை எரிப்பு
இந்நிலையில் புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் இரவின் நிழல் படத்தை பார்த்த சிலர் ப்ளூ சட்டை மாறனுக்கு கண்டனம் தெரிவித்து அவரின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து அதனை செருப்பால் அடித்ததோடு தீயிட்டு கொளுத்தியும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், "ப்ளூ சட்டை மாறனுக்கு செருப்புமாலை போட்டு தரமான செருப்படி சம்பவம் செய்த பார்த்திபன் ரசிகர்கள். புதுமையான பாராட்டிற்கு நன்றி பார்த்திபன் சார். உங்கள் நாகரீக செயல் தொடரட்டும்…" என குறிப்பிட்டுள்ளார். இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் சேர்த்து பதில் கூறி ஆடியோ ஒன்றை பார்த்திபன் வெளியிட்டுள்ளார்.
முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமா, இல்லையா?
ப்ளூ சட்டை மாறன் கூறிய படம் குறித்து பேசிய அவர், "இரண்டு நாளாக இந்த பிரச்சனை குறித்து பேசனுமனு நெனச்சேன், இது ரொம்ப பெருசா ஆகிட்டு வருது. ப்ளூ சட்டை மாறன் அவர்கள் என்னுடைய படத்தை முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் இல்லன்னு சொல்லி ஒரு படத்தை சொல்றார். அந்த படத்தை நாங்களும் தேடி பாத்தோம், அது நான் லீனியர் படமெல்லாம் இல்ல. அப்படி உண்மையாவே அவர் ஒரு நேர்மையான ஆளா இருந்திருந்தா, நான் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இந்த படத்தை இந்த டேக் ஓட விளம்பரப்படுத்துறேன். ஆனா அவர் படம் பாக்குற வரைக்கும் எனக்கு கால் பண்ணி சொல்லல", என்று கூறினார்.
தொடர்புடைய செய்திகள்: கல்யாணத்துக்கு பிறகும் ஜீன்ஸ் பேன்டா? மனைவியிடம் சண்டையிட்ட கணவன் மர்ம மரணம்!
உருவபொம்மை எரித்தது சரியா?
மேலும், "உருவ பொம்மை எரிப்பதற்கு என்றுமே நான் எதிரானவன். மாறனுடைய உருவ பொம்மையை எரித்ததில் எனக்கு கொஞ்சமும் உடன்பாடு இல்லை. இன்னொன்று அதை செய்தவர்கள் என் ரசிகர்களும் இல்லை. எனது ரசிகர் மன்றைத்தை மனிதநேய மன்றமாக மாற்றி பல ஆண்டுகள் ஆகிறது. அப்போது அதிலிருந்த எண்ணிக்கை குறைந்துவிட்டது. மிகக்குறைவான நபர்கள் மட்டுமே அதில் இருந்து சமூக சேவைகளை செய்து வருகின்றனர்." என்று ரசிகர் மன்றம் குறித்து விளக்கம் அளித்தார்.
கண்டனம் தெரிவிக்காதது ஏன்?
அப்படி செய்தவரை மேடையில் சந்தித்தும் கண்டனம் தெரிவிக்க வில்லை என்று கூறிய அவர், "அதனை செய்தவர் ஒரு படம் எடுத்த தயாரிப்பாளர், நடிகர். ஒரு மரியாதைக்குரிய நபர் அப்படி செய்ததில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும், மேடையிலேயே அவரிடம் அது குறித்து பேசுவது நாகரிகம் அல்ல. அதனால் நான் அவரிடம் தனிப்பட்ட முறையில் கண்டித்தேன். அப்போது அவர் சொன்னார் நான் ஒரு படம் எடுத்தேன் அதற்கு விமர்சனம் செய்வதற்கு என்னிடம் 3 லட்சம் கேட்டார் அந்த கோபத்தில்தான் செய்தேன் என்றார். அதையும் என் பெயர் பயன்படுத்தி செய்ததற்காக எதிர்ப்பு தெரிவித்தேன்", என்று கூறினார்.
ப்ளூ சட்டையிடம் மன்னிப்பு
ப்ளூ சட்டையிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக பேசிய அவர், "எனது மன்னிப்பு உருவ பொம்மை எரித்ததற்கு மட்டும்தான். நீங்கள் என் படத்தை நன்றாக இல்லை என்று சொல்லுங்கள். நான் எதுவும் கேட்கப்போவதில்லை. ஆனால் விமர்சனத்தை தாண்டி, அது முடிந்த பிறகு ட்விட்டரில் தனிப்பட்ட முறையில் தாக்குகிறீர்கள். ஏற்கனவே இந்த படத்தை கங்காருப்போல சுமந்துகொண்டு இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறேன். வேறு ஒரு தயாரிப்பாளராக இருந்தால் தூக்கில் தொங்கி இருப்பார் நீங்கள் கொடுக்கும் அழுத்தத்தில். நீங்கள் விமர்சனம் செய்யும் முறை பலரை இரிட்டேட் செய்கிறது. அது மட்டும் இல்லாமல் ட்விட்டரில் ஏதேதோ எழுதுகிறீர்கள். இதெல்லாம் எனது ஓட்டத்தை மட்டுப்படுத்துகிறது. இதைமட்டும் சொல்லிக்கொள்ள விரும்பினேன். என் இந்தமுயற்சியை நிறைய பேர் பாராட்டி இருக்கிறீர்கள், இந்த படம் நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது, அதற்கும் நீங்கள் அளிக்கும் ஆதரவுக்கும் நன்றி" என்று முடித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)