தேவாவின் மாஸ்டர் டச்...சூப்பர்ஸ்டார் டைட்டில் கார்ட் பின்னணி இசை உருவான பின்னணி
கடந்த 34 ஆண்டுகளாக ரஜினி படங்களின் டைட்டில் கார்டுகளில் பயண்படுத்தப்பட்டு வரும் தேவாவின் பின்னணி இசை உருவான பின்னணி குறித்து பார்க்கலாம்

இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா இன்று மாரடைப்பால் காலமாகியுள்ள செய்தி தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி என்கிற டைட்டில் கார்டில் தேவாவின் இசை இடம்பெற்றது. 1992ஆம் ஆண்டு வெளியான ‘அண்ணாமலை’ படத்துக்காக இசையமைப்பாளர் தேவா உருவாக்கிய அந்த இசை, இன்று வரை ரஜினியின் திரைப் பயணத்துடன் தொடர்ந்து வருகிறது. தேவா இந்த இசையை உருவாக்கியதற்கு பின் ஒரு சுவாரஸ்யமான பின்னணி இருக்கிறது.
ஜேம்ஸ் பாண்ட் படங்களில் இருந்து கிடைத்த யோசனை
‘அண்ணாமலை’ படத்தில் ரஜினிகாந்தை அறிமுகப்படுத்துவதற்கு ஒரு தனித்துவமான திரை வடிவமைப்பை உருவாக்க வேண்டும் என்று இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா திட்டமிட்டார். ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வரும் இசையைப் போல இந்த இசை இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்
ரஜினியின் பெயர் திரையில் தோன்றும்போதே ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே இயக்குநரின் நோக்கமாக இருந்தது. அதற்காக ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்’ என்ற எழுத்துகளுடன் பிரத்யேக தலைப்பு வடிவமைப்பு உருவாக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு ஃபிரேமையும் கையால் உருவாக்க வேண்டியிருந்ததால், இந்த வடிவமைப்பை முடிக்க சுமார் ஒரு மாதம் ஆனது.
உயிர் கொடுத்த தேவாவின் இசை
காட்சிக்கான வடிவமைப்பு தயாரானதும், அதற்குப் பொருத்தமான பின்னணி இசை தேவைப்பட்டது. ஜேம்ஸ் பாண்ட் படங்களின் அறிமுக இசையைப் போன்ற தாக்கம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தேவாவிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
ரஜினியின் பெயர் திரையில் தோன்றும் தருணத்தை ரசிகர்களுக்கு மறக்க முடியாததாக மாற்றும் வகையில் தேவா இசையை உருவாக்கினார். அந்த பின்னணி இசையைதான் இன்று வரை ரஜினி படங்களின் டைட்டில் கார்டுகளில் நாம் கேட்டு வருகிறோம்.
இந்த இசையில் ரஜினியின் பெயரில் ஒவ்வொரு எழுத்துக்கள் தோன்றும் போதும் ஒரு சவுண்ட் எஃபக்ட் வருகிறது இல்லையா அதனை படக்குழு எப்படி உருவாக்கினார்கள் தெரியுமா. சவுக்கால் அடிக்கும் ஒலியைத் தலைகீழாக மாற்றிப் பயன்படுத்தி இந்த இசையை உருவாக்கினார்கள்.
தனது பெயருக்கு இவ்வளவு பெரிய அறிமுகம் தேவையா என்ற தயக்கம் ரஜினிக்கு முதலில் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் கே. பாலச்சந்தர் இந்த யோசனைக்கு ஆதரவளித்ததைத் தொடர்ந்து, ‘அண்ணாமலை’ படத்தில் அந்தத் தலைப்பு அறிமுகம் இடம்பெற்றது.
படம் வெளியானபோது ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு, இந்த முயற்சியைத் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க அறிமுகங்களில் ஒன்றாக மாற்றியது. ரஜினியின் பெயர் திரையில் தோன்றுவதும், அதனுடன் தேவாவின் இசை ஒலிப்பதும் ரசிகர்களின் ஆரவாரத்துடன் இணைந்தது.
34 ஆண்டுகள் கடந்தும் தொடரும் அதே இசை
‘அண்ணாமலை’ படத்துக்காக உருவாக்கப்பட்ட இந்த இசை, பின்னர் ரஜினிகாந்தின் திரைப் பயணத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியது. இடைப்பட்ட காலத்தில் ரஜினி படங்களின் டைட்டில் கார்டுகளில் இந்த இசை பயன்படுத்தப்படவில்லை. 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில் இந்த இசை மீண்டும் பயண்படுத்தப்பட்டது அன்று தொடங்கி சமீபத்தில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் வரை சூப்பர்ஸ்டார் டைட்டில் கார்டில் இந்த இசை தொடர்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















