‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்தில் இருந்து தீபிகா படுகோன் விலகியதற்கான காரணங்களை தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா தெரிவித்துள்ளார்.

பிரபாஸ் நடிப்பில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து நடிகை தீபிகா படுகோன் விலகியதற்கான பின்னணி குறித்து தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா தற்போது பேசியுள்ளார். சம்பளம், படப்பிடிப்பு நேரம், படத்தின் லாபத்தில் பங்கு மற்றும் தெலுங்கு வசனங்களைப் பேசுவது உள்ளிட்ட பல விஷயங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்படாமல் போனதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்பிரிட் படத்தில் இருந்து விலகிய தீபிகா
‘அர்ஜுன் ரெட்டி’, ‘கபீர் சிங்’, ‘அனிமல்’ ஆகிய படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்காவின் அடுத்த படமாக ‘ஸ்பிரிட்’ உருவாகி வருகிறது. பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை டி-சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. காவல்துறை அதிகாரியை மையமாகக் கொண்ட ஆக்ஷன் கதையாக இப்படம் உருவாகி வருகிறது
பிரபாஸுக்கு ஜோடியாக முதலில் தீபிகா படுகோன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. பிரபாஸ் மற்றும் தீபிகா ஏற்கனவே ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் இணைந்து நடித்திருந்ததால், இந்தக் கூட்டணி மீண்டும் தொடரும் என்ற எதிர்பார்ப்பும் உருவானது. ஆனால், பின்னர் இருவருக்கும் இடையேயான இந்த கூட்டணி ‘ஸ்பிரிட்’ படத்தில் அமையவில்லை.
தயாரிப்பாளர் சொன்ன காரணம்
தீபிகா படுகோன் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து விலகியதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. ஆனால் இதுகுறித்து முதல்முறையாக படத்தின் தயாரிப்பாளர் மனம் திறந்து பேசியுள்ளார்.
தீபிகா படத்திலிருந்து விலகியது குறித்து பேசிய பிரணய் ரெட்டி வங்கா, “தீபிகாவின் சம்பள எதிர்பார்ப்பு பேச்சுவார்த்தையில் முக்கியமான விஷயமாக இருந்தது. அதேபோல், படப்பிடிப்பில் அவர் செலவிடும் நேரம் குறித்தும் சில நிபந்தனைகள் இருந்தன” என்று தெரிவித்துள்ளார்.
இதனுடன், படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு கிடைக்கும் லாபத்தில் 10 சதவீதத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் தீபிகா தரப்பில் முன்வைக்கப்பட்டதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற கோரிக்கைகளுடன், தெலுங்கு வசனங்களை பேசுவது தொடர்பான விவகாரமும் அவர் படத்தில் இருந்து விலகியதற்கான முக்கிய காரணமாக அமைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தீபிகா விலகியதைத் தொடர்ந்து, அவரது இடத்தில் திரிப்தி டிம்ரி கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டார். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய ‘அனிமல்’ படத்தில் நடித்திருந்த திரிப்தி, தற்போது மீண்டும் அவருடன் இணைந்துள்ளார். இதன் மூலம் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் அவர் நடிக்கும் இரண்டாவது படமாக ‘ஸ்பிரிட்’ அமைந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















