Deepika Padukone : `கருப்பானவளாக உணர்ந்தேன்!’ - சர்ச்சைக்கு உள்ளான தீபிகா படுகோனின் பதிவு!
தீபிகா படுகோனேவின் நடிப்புத் திறமைக்காகவும், அழகிற்காகவும் நெட்டிசன்கள் அவரைப் பாராட்டினாலும், சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் கூறியிருக்கும் ஒரு வார்த்தை அவரை சர்ச்சையில் தள்ளியுள்ளது.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன், அறிமுகமானது முதலே தனக்கென்று தனிப்பாதையை வகுத்து, தனது தேர்ந்த நடிப்பால் அனைவரின் மனதிலும் இடம்பிடித்தவர் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே. அமெரிக்க இதழான `அல்லூர்’ இதழின் அட்டைப் படத்தில் சமீபத்தில் இடம்பிடித்து தனது திறமைக்கு மேலும் அங்கீகாரம் பெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் நடிப்புத் திறமைக்காகவும், அழகிற்காகவும் நெட்டிசன்கள் அவரைப் பாராட்டினாலும், சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பதிவின் கேப்ஷனில் அவர் கூறியிருக்கும் ஒரு வார்த்தை அவரை சர்ச்சையில் தள்ளியுள்ளது.
`எனக்கு நினைவு தெரிந்த வரை, கறுப்பினத்தவரைப் போல உணரச் செய்தது முதல் உலகின் முன்னணி அழகு சார்ந்த இதழின் அட்டைப்படத்தில் இடம்பெறுவது வரை, இந்தப் பயணம் மலையேற்றம் போல, பாடங்கள் கற்றுக் கொள்வது, கற்றுக் கொண்ட தவறானவற்றை மறப்பது, வளர்வது, பரிணாமம் அடைவது என இருந்தது’ என தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவின் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.
`Person of colour’ என்று இந்தப் பதிவில் நடிகை தீபிகா படுகோனே குறிப்பிட்டுள்ள சொல் உலகம் முழுவதும் வெள்ளையினத்தைச் சேராத மக்களைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்தியர்கள் உள்பட, குறிப்பாக கறுப்பினத்தவர்களைக் குறிக்கும் சொல்லாகவும் இது இருக்கிறது. இதனைத் தொடர்ந்து நடிகை தீபிகா படுகோனேவின் கேப்ஷனை எதிர்த்து பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
`தீபிகா என்ன சொல்ல வருகிறார்? person of colour என்று அழைக்கப்படுவது அவமானம் என்றா, அல்லது அவர் வெள்ளையினத்தவரா?’ என்று ஒரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார். மற்றொருவர், `இந்த இடத்தில் person of colour என்ற சொல்லைப் பயன்படுத்தியதன் மூலம், அவ்வாறு இருப்பதைத் தவறானது என்ற ரீதியில் சித்தரித்துள்ளார் தீபிகா’ எனக் கூறியுள்ளார்.
View this post on Instagram
`உணரச் செய்தார்கள்’.. இந்த வார்த்தை அவமானங்களைக் குறிக்கும் பொருளை அளிக்கிறது.. இவ்வாறு சொல்ல வேண்டும் என்பது அவரின் நோக்கமாக இல்லாமல் இருக்கும்.. ஆனால் அவர் பயன்படுத்திய வார்த்தைகள் தவறானது’ என்று நடிகை தீபிகா படுகோனேவின் வார்த்தைப் பிரயோகத்தை விமர்சனம் செய்துள்ளார்.