‛வடிவேலுவை மிஞ்ச ஒருத்தன் வந்தால்... நான் ஆந்திரா போய்டுவேன்...’ - காமெடி நடிகர் வெங்கல்ராவ் உருக்கம்!
நடிகர் வடிவேலு ஐயா எங்களுக்கு கடவுள் மாதிரி என்றும், காமெடியில் அவரை வீழ்த்த எவரும் கிடையாது என்றும் காமெடி நடிகர் வெங்கல்ராவ் உருக்கமாக பேசியுள்ளார்.
நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் துணை நகைச்சுவை நடிகராக நடித்தவர் வெங்கல்ராவ். இவர் தனியார் யூ டியூப் தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
“ என்னை உருவாக்கியவர் வடிவேல் ஐயா. அவர் மூலமாகதான் நான் காமெடிக்கு வந்தேன். காமெடியை இவ்வாறு செய்ய வேண்டும் என்று சொல்லித் தந்து இந்த இடத்திற்கு கொண்டு வந்தவர் வடிவேல் ஐயா. இரண்டு வருடங்கள் நாங்கள் என்ன செய்கிறோம் என்று கேட்பார். பணக்கஷ்டம் இருக்குமா? என்று அவர் கேட்பார். ஐந்தாறு படங்களில் வாய்ப்பு கொடுங்கள் என்றுதான் கேட்போம். அவரிடம் காசு கேட்டால் மரியாதையாக இருக்காது.
காமெடி சிங்கம் வடிவேல் மீண்டும் நடிக்க வருகிறார். இதனால், இனி நடிகர்களுக்கு கவலை ஏதும் இருக்காது. படத்திற்கான காமெடியை நடிகர் வடிவேல் ஐயாவும், இயக்குனரும் உருவாக்குவார்கள். வடிவேலு எனக்கு கடவுள் மாதிரி. சண்டையை விட்டு ஏன் வந்தேன் என்று நினைத்தது உண்டு. ஆனால், வடிவேலுவால் நான் காமெடி நடிகராக இந்தியா முழுவதும் தெரிந்துள்ளேன். காமெடிகளை வடிவேலு ஐயா இல்லாமல் நான் பண்ண முடியுமா? தலைநகரம் காமெடி அமெரிக்கா வரை பாராட்டப்பட்டது.
வடிவேலு ஐயாவிற்கு மேலே நகைச்சுவை செய்கிறேன் என்று ஒரு ஆள்கூட இதுவரை கிடையாது. வடிவேலு ஐயாவை மிஞ்சுவேன் என்று கூறுபவர்கள் என்ன சிவாஜியா? எம்.ஜி.ஆரா? அவ்வாறு ஒருவர் வந்துவிட்டால் நான் ஆந்திராவிற்கே சென்றுவிடுகிறேன். வடிவேலு ஐயா மாதிரி காமெடிக்காக கஷ்டப்படுபவர்கள் யாருமே கிடையாது.”
இவ்வாறு அவர் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.
நடிகர் வெங்கல்ராவ் சண்டைக் கலைஞராக தனது வாழ்வைத் தொடங்கினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று ஏராளமான மொழிகளில் சண்டைக் கலைஞராக பணியாற்றிய இவர், பின்னர், நடிகர் வடிவேலுவுடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளில் தோன்றினார். இந்த காட்சிகள் அவருக்கு மிகுந்த புகழை ஏற்படுத்தித்தந்தது.
வடிவேலுவுடன் இணைந்து தலைநகரம், எலி, கந்தசாமி உள்ளிட்ட ஏராளமான படங்களில் துணை நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரையுலகின் காமெடி மன்னனாக வலம் வரும் வைகைப்புயல் வடிவேலு கடந்த சில ஆண்டுகளாகவே பெரியளவில் நடிக்காமல் ஒதுங்கியே இருந்தார்.
இந்த நிலையில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படம் மூலமாக நாயகனாக அறிமுகமாக உள்ளார். மேலும், தொடர்ந்து பல படங்களில் நடிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்