”தமிழ்ச் சினிமாவின் மறக்க முடியாத மேதை பீம் சிங்” நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் ஒரு சிறப்பாஞ்சலி..!
பீம்சிங் - சிவாஜி இணைந்து “ப” என்ற எழுத்தில் தொடங்கும் படத்தைக் கொடுத்தால், அது நிச்சயம் அபார வெற்றி என்பது எழுதப்படாத விதியாக பல ஆண்டுக் காலம் இருந்தது
தமிழ்ச் சினிமாவின் மறக்க முடியாத மேதைகளின் பட்டியலில், இயக்குநர்கள் வரிசையில் முக்கிய இடத்திற்குச் சொந்தக்காரர் பீம்சிங். இவருடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இணைந்து பல வரலாற்று வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளனர். அதுவும், இவர்களின் “ப” வரிசை படங்களில் வெற்றிப்பட்டியலை இதுவரை யாரும் தொட்டதில்லை என்பது சரித்திரம்.
பீம்சிங் நூற்றாண்டு
இயக்குநர் பீம்சிங் மறைந்தாலும், அவரது வாரிசுகளில் பி. லெனின், முன்னணி படத் தொகுப்பாளாராக (வீடியோ எடிட்டர்) அசத்துகிறார். பி. கண்ணன் ஒளிப்பதிவாளராக, குறிப்பாக பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக பல படங்களில் முத்திரைப் பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நூற்றாண்டின் 1924-ம் ஆண்டில் அக்டோபர் 15-ம் தேதி பிறந்த பீம்சிங், இன்று, நூறாண்டுகளை நிறைவு செய்கிறார். அவரது மனைவி சுகுமாரியும் பிரபல நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசனை அறிமுகம் செய்தவர் பீம்சிங்
இயக்குநர் பீம்சிங் சிவாஜி மட்டுமல்ல, களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தின் மூலம், கமல்ஹாசன் என்ற குட்டிபையனை அறிமுகம் செய்து, தமிழ் சினிமாவுக்கு அழகு சேர்த்தவர். தமிழ்ப்படங்கள் மட்டுமன்றி, 18 இந்திப் படங்கள், 8 தெலுங்குப் படங்கள், 5 மலையாளப்படங்கள், ஒரு கன்னடப்படம் உட்பட 67 படங்களை இயக்கியவர். அவரும், சிவாஜியும் இணைந்து “ப” என்ற எழுத்தில் தொடங்கும் படத்தைக் கொடுத்தால், அது நிச்சயம் அபார வெற்றி என்பது எழுதப்படாத விதியாக பல ஆண்டுக் காலம் தமிழ்ச்சினிமாவின் “சென்டிமெண்டாக” இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
”ப” படங்களின் ஹிட் லிஸ்ட்
நீங்களே பாருங்களேன், பாகப்பிரிவினை, படிக்காத மேதை, பெற்ற மனம், பாவ மன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா, பந்த பாசம், பார் மகளே பார், பச்சை விளக்கு, பழனி, பட்டத்து ராணி, பாலாடை உள்ளிட்ட 17 படங்களை சிவாஜியும் இயக்குநர் பீம்சிங் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அசாத்திய படங்களை கொடுத்த இயக்குநர் பீம்சிங்
தமிழ்ச் சினிமாவின் முத்திரைப்பதித்த பல படங்களைக் கொடுத்த இயக்குநர், நடிகர் திலகம் என சிவாஜியை அழைப்பதற்கேற்ப பல அசாத்திய படங்களை சிவாஜியை வைத்து இயக்கியவர் பீம்சிங். அவரது நூறாண்டு விழாவில், அவரை சிலர் நினைவுக்கூர்ந்தாலும், கொண்டாப்பட வேண்டிய விதத்தில் அவருக்கான கொண்டாட்டம் இல்லை என்பதே நிதர்சனம். ஆனால், சிவாஜியின் மகனும் பிரபல நடிகருமான பிரபு, இயக்குநர் பீம்சிங்கிற்கு, நூற்றாண்டு பிறந்தநாளில், அவருக்குப் புகழ்மாலை சூட்டியுள்ளார்.
பிரபுவின் புகழ் மாலை - பீம்பாய்
இதோ, நடிகரின் பிரபுவின் புகழ் வரிகள்…"இன்று இயக்குநர் ஏ.பீம்சிங் அவர்களின் நூறாவது பிறந்தநாள்..... பீம்சிங் அவர்களின் நூற்றாண்டு... இந்த நாளில் அவரைப் பற்றி நினைக்கும் போது எனக்கு பெருமையாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அப்பா அவரை பீம் பாய் என்றுதான் செல்லமாக அழைப்பார். அப்பா நடித்த படங்களில் உதவி இயக்குனராக இருந்தவர். அவரை 'செந்தாமரை' படத்தில் இயக்குனராக அறிமுகப்படுத்தினார். அந்தப் படம் முடிய தாமதம் ஆனாலும், உடனே கால்ஷீட் கொடுத்து 'அம்மையப்பன்', 'ராஜா ராணி' படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு அவர் நண்பர்களுடன் இணைந்து தயாரித்து, அவர் இயக்கிய 'பதி பக்தி' படத்திலும் நடித்தார்.
மற்ற நடிகர்களை வைத்து படங்கள் இயக்கினாலும் அப்பா நடிப்பில் பாகப்பிரிவினை, படிக்காத மேதை, பெற்ற மனம், பாவ மன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா, பந்த பாசம், பார் மகளே பார், பச்சை விளக்கு, பழனி, பட்டத்து ராணி, சாந்தி, பாலாடை, பாதுகாப்பு போன்ற பத்தொன்பது படங்களை இயக்கினார்.
அவர், சாந்தி படத்தின் இந்தி பாதிப்பை சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் சுனில்தத் நடிப்பில் கௌரி என்கிற பெயரில் இயக்கினார். அதே போல சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் 'பாசமலர்' படத்தை இந்தியில் 'ராக்கி' என்கிற பெயரில் அசோக்குமார் நடிப்பில் இயக்கினார். இப்படி தமிழ் படங்களின் பெருமையை இந்தி் வரை கொண்டு சென்ற பெருமைக்குரிய இயக்குநர் பீம்சிங். காலத்தால் அழியாத பல காவிய படங்களை தந்தவர்... குடும்பக் கதைகளின் எதார்த்த இயக்குநர்... காட்சிகளில் எளிமை... வசனங்களில் புதுமை... பாடல்களில் இனிமை... தமிழ் சினிமாவின் ஆளுமை.... என்று திகழ்ந்தவர்.
அவருக்கு இன்று நூறாவது ஆண்டு என்கிற போது எனக்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது. அப்பா இருந்திருந்தால் அவரை கொண்டாடி மகிழ்ந்திருப்பார்... காலம் என்னவோ அவர்களை எடுத்துக் கொண்டுவிட்டது.
ஆனால், அவரது ஆன்மா தனது படைப்புகள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. படைப்புக்கும் அழிவில்லை. படைத்தவருக்கும் அழிவில்லை... கலைஞர்கள் எப்போதுமே மக்களுக்கானவர்கள்... அவர்கள் எப்போதும் மக்களோடு வாழ்ந்து கொண்டிருப்பார்கள்... பீம்சிங்கும் அய்யாவும் நமோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அன்புடன் பிரபு" என வாழ்த்து மழை பொழிந்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் மறக்க முடியாத மேதை
தமிழ்ச்சினிமாவின் மறக்கமுடியாத மேதைகளில், இயக்குநர் பீம்சிங்கிற்கு எப்போதும் ஒரு முக்கிய இடம் உண்டு என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. அவரது புகழும் அவர் பிரம்மாண்ட வெற்றி திரைப்படங்களும் கடந்த நூற்றாண்டு மட்டுமல்ல, இந்த நூற்றாண்டிலும் மென்மேலும் பேசப்படும் என நம்புவோம்.