புகைப்படம் எடுக்காதே நிறுத்து.. கோபத்தில் பேசிய அமிதாப் பச்சன்.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நேற்று மாலை ரசிகர்களை சந்தித்த போது புகைப்படம் எடுத்தவர்கள் மீது கோபமடைந்தார்.

பாலிவுட் சினிமாவின் ஜாம்பவான் அமிதாப் பச்சன். இவர் நடிப்பில் வெளியான சோலை, டான் போன்ற திரைப்படங்கள் இந்திய அளவில் பிரபமடைந்திருக்கிறது. அதேபோன்று படத்திற்கேற்ப தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தனது 82 வயதிலும் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது தான் பலருக்கும் ஆச்சர்யத்தை அளிக்கிறது. இந்நிலையில், அமிதாப் பச்சன் தனது வீட்டின் முன்பு குவிந்த புகைப்பட கலைஞரிடம் கடிந்துகொண்டது பேசுபொருளாகியுள்ளது.
சினிமா ரசிகர்கள் பலரும் தங்களுக்கு பிடித்த நடிகர்களை நேரில் காண ஆசைப்படுவது உண்டு. நடிகர்களின் பிறந்தநாளில் நேரில் பார்த்து வாழ்த்து சொல்ல கால் கடுக்க காத்திருப்பார்கள். இந்த கலாச்சாரம் தமிழ் சினிமாவில் மட்டும் அல்ல பாலிவுட்டிலும் தொடர்ந்து வருகிறது. பாலிவுட்டில் கிங் ஆக திகழும் ஷாருக்கான், சல்மான் கான், அமிதாப் பச்சன் போன்ற நடிகர்களை காண அவர்களது வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்துவிடுவர். உதவி கேட்டும் சிலர் தனிப்பட்ட முறையில் சந்தித்த நிகழ்வுகளும் நடந்திருக்கிறது. அதேபாேன்று நடிகர் அமிதாப் பச்சன் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரசிகர்களை நேரில் சந்திப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
இந்த சந்திப்பின் போது ரசிகர்கள் பல நினைவுப்பரிசுகளையும் அமிதாப்பச்சனுக்கு வழங்குவர். அவரை பார்த்தாலே போதும் ஆனந்த மகிழ்ச்சியில் துள்ளி குதிப்பார்கள். அதேபோன்று நேற்று மாலை தனது வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்களை அமிதாப் பச்சன் காண சென்றார். அப்போது வெளியில் இருந்து வந்த சிலர் ரசிகர்களுக்கு இடையூறு செய்ததாகக் கூறப்படுகிறது. அமிதாப் பச்சன் ரசிகர்களை பார்த்து கையசைக்க முயன்றபோது வெளியில் இருந்து வந்த சிலர் புகைப்படம் எடுக்க முந்திக்கொண்டு வந்ததால் ஏய் நிறுத்து புகைப்படம் எடுக்காதே என கடிந்துகொண்டார். தற்போது இதுதொடர்பான புகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது.




















