Bigg Boss Tamil: பிக் பாஸூக்கு பின் வாழ்க்கை மாறிடுச்சு.. பிஸி செலிப்ரிட்டிகளாக வலம் வரும் போட்டியாளர்களின் லிஸ்ட்!
Bigg Boss Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்ட பலரும் இன்று திரைத்துறையில் பெரிய பிரபலங்களாக ஜொலிக்கிறார்கள்.
விஜய் டிவியில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்க உள்ளது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 6 சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்ததை தொடர்ந்து இந்த சீசனுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்ட பலரும் இன்று திரைத்துறையில் பெரிய பிரபலங்களாக ஜொலிக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலே பிரபலமாகி விடுவதுடன் வெளியே வந்ததும் ஏராளமான வாய்ப்புகள் அவர்களை தேடி வருகிறது. அந்த வகையில் கடந்த பிக் பாஸ் சீசன்களில் கலந்து கொண்ட இன்று செலிபிரிட்டிகளாக மாறியுள்ள ஒரு சிலரை பற்றி பார்க்கலாம் :
தாமரைச் செல்வி :
நாடக கலைஞராக பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்ற தாமரை செல்வி அந்த சீசனை ஒரு கலக்கு கலக்கியவர். அந்த சீசன் மிகவும் பரபரப்பாக இருந்ததற்கு மிக முக்கியமான காரணமாக இருந்தவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு சீரியல் வாய்ப்புகளும், சினிமா வாய்ப்புகளும் தாமரை பக்கம் அலைமோதியது. இன்றும் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி மிகவும் பிரபலமாக இருக்கிறார் தாமரை செல்வி.
கவின்:
'கனா காணும் காலங்கள்' தொடர் சின்னத்திரையில் அறிமுகமான கவின், சரவணன் மீனாட்சி தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அதை ஏற்றுக்கொண்ட கவின், பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். பிக் பாஸ் வீட்டுக்குள் காதல் வலையில் சிக்கி அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 5 லட்சம் பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கவின் தற்போது பிஸியான நடிகராக வலம் வருகிறார். கவின் நடித்த லிப்ட், டாடா உள்ளிட்ட படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன.
சாண்டி மாஸ்டர்:
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் சாண்டி மாஸ்டர். இவர் பிக் பாஸ் சீசன் 3ல் பங்கேற்று இரண்டாம் இடத்தைக் கைப்பற்றினார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாண்டி மாஸ்டர் லெவல் எங்கோ போனது. ஏராளமான படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றும் வாய்ப்பு பெற்றதோடு சினிமாவில் நடிகனாகவும் அறிமுகமானார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'லியோ' படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் சிக்ஸ் பேக் கெட்டப்பில் கலக்கலாக நடித்துள்ளார்.
முகமது அசீம் :
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளரான அசீம், ஏராளமான சர்ச்சைகளுக்கு பிறகு பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார். அவரின் வெற்றிக்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது பட வாய்ப்புகள் கிடைத்து பிஸியாக இருக்கிறார் அசீம்.
ஹரீஷ் கல்யாண் :
பிக் பாஸ் சீசன் 1இல் வைல்ட் கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுத்து பைனல்ஸ் வரை சிறப்பாக விளையாடிய ஒரு ஸ்ட்ராங் போட்டியாளர். பிக் பாஸூக்கு முன்னரே நடிகராக இருந்தாலும், பிக் பாஸ் முடிந்தவுடன் இவருக்கு வாய்ப்புகள் கதவை தட்டி அழைத்தது. 'பியார் பிரேமா காதல்', இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு, ஓ மணப்பெண்ணே, லெட்ஸ் கெட் மேரீட் என வரிசையாக படங்களில் நடித்து வருவதுடன் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வருகிறார்.
ராஜூ ஜெயமோகன் :
ராஜுவும் 'காண காணும் காலங்கள்' சீரியல் மூலம் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர், பாரதி கண்ணம்மா, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர். பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னராக வெற்றி பெற்ற ராஜு அதை தொடர்ந்து விஜய் டிவியில் "ராஜு வீட்ல பார்ட்டி" நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
யாஷிகா ஆனந்த் :
பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னரே நெட்டிசன்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். போட்டோஷூட் நடத்தி தன் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
வனிதா விஜயகுமார் :
மிகப்பெரிய திரைக்குடும்பத்தின் வாரிசான வனிதா விஜயகுமார், விஜய் ஜோடியாக 'சந்திரலேகா' படத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த வனிதா நடிப்பதில் இருந்து விலகினார். அவரின் திருமணங்களால் பெரும் சர்ச்சையில் சிக்கிய வனிதாவுக்கு பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அதை வெகு சிறப்பாக பயன்படுத்தி கொளுத்திப் போடும் வேலையை பார்த்து அனைவரையும் கதிகலங்க வைத்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மிகவும் பிஸியான ஒரு செலிபிரிட்டியாக மாறியுள்ளார் வனிதா. இவரைத் தொடர்ந்து பிக் பாஸ் 7ல் வனிதா மகள் ஜோவிகா விஜயகுமார் போட்டியாளராக என்ட்ரி கொடுக்க உள்ளார்.
சுரேஷ் சக்கரவர்த்தி :
இயக்குநர், திரைக்கதை தொகுப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவராக திகழ்ந்த சுரேஷ் சக்கரவர்த்தி பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மிகவும் பிரபலமாகி தற்போது ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சாக்ஷி அகர்வால் :
ஒரு சில திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வந்த சாக்ஷி அகர்வால், பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளராக கலந்து கொண்ட பிறகு மிகவும் பிரபலமாகிவிட்டார். தற்போது திரைப்படங்களிலும் விளம்பரங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க இருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் எத்தனை பேர் பெரிய செலிபிரிட்டிகளாக போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.