மேலும் அறிய
Advertisement
Bava Chelladurai: கல்வி வேண்டாம் என்று சமூகத்தின் எதிரிகூட சொல்லமாட்டான்.. எழுத்தாளர் பவா செல்லத்துரை பதிவு!
Bigg Boss Season 7 Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளியேறிய எழுத்தாளர் பவா செல்லதுரை, அதன்பின் முதன்முறையாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 7 தமிழில் போட்டியாளராக கலந்துகொண்ட எழுத்தாளர் பவா செல்லத்துரை (Bava Chelladurai) கல்வி குறித்து நிகழ்ச்சியில் சொன்ன கருத்துக்கு பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்ததைத் தொடர்ந்து தற்போது தன் சார்பில் மிக நீண்ட விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொடக்கம் முதலே அதிகம் பேசப்பட்டு வந்த பவா செல்லதுரை சென்ற திங்கள்கிழமை தானாகவே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அதன் பின் மௌனம் காத்து வந்த அவர், தற்போது முதன்முறையாக பதிவிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது:
பவா செல்லத்துரை விளக்கம்
“எழுத்தாளனிடம் இருக்கும் ஒரே சொத்து, அவனின் ஒரே ஒரு சொல் மட்டுமே. அதுவே அவனை உயர்த்தும்! அதுவே அவனை வீழ்த்தும்! அப்படி ஒரு சொல்லால்தான் இப்போது நான் வீழ்த்தப்பட்டிருக்கிறேன்.
நண்பர்களின் தொடர் அறிவுறுத்தல்களால் இந்த ஐந்து நாட்களாக அலைக்கழிக்கப்பட்டேன். எதுவும் எதிர்வினையாற்றாதே, பேஸ்புக் பார்க்காதே, பதில் ஏதும் எழுதாதே என்று.. அதனாலேயே இன்று வரை இம்மௌனம் காத்தேன்.
தொடர்ந்து பல நண்பர்கள் நான் என்றோ, யாருக்கோ செய்த சில உதவிகளை இந்நேரத்தில் என்னை தேற்றுவதாக சொல்லி என்னை உள்ளுக்குள் சுருங்க வைக்கிறார்கள். ஆனால் என்னை அறிந்த, என் வாழ்நாள் முழுவதும் உடன் இருந்த நண்பர்கள் என நம்பிய பலரும் தங்கள் மீது ஒரு கல்லும் பட்டுவிடக்கூடாதென மௌனம் காக்கிறார்கள். நான் செய்த தவறுக்கு எல்லா கல்லெறிகளையும் என் திரேகமே ஏற்கட்டும் அல்லது சிதையட்டும்.
கல்வி வேண்டாம் என்று சமூகத்தில் எதிரிகூட சொல்லமாட்டான்
கல்வி நமக்கு எதுவும் செய்யாது என நான் மட்டுமல்ல. ஒரு பொது சமூகத்தின் எதிரி கூட சொல்ல மாட்டான். கிராமம் கிராமமாகப் போய் சைக்கிள் மிதித்து இருபது வருடங்களாக அதற்காக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மற்றும் அறிவொளி இயக்கத்துடன் சேர்ந்து நாடகம் போட்டவன் நான். கல்வித்தரத்தை இன்னும் ஒரு அங்குலம் மேம்படுத்த ஒவ்வொரு வகையாய் செயல்படுகிறேன், பேசுகிறேன். அவ்வளவுதான். இணையத்தில் பரவிக்கிடக்கும் என் காணொளிகளே இதன் நேரடி சாட்சி.
தமிழ் சமூகத்திடம் மன்னிப்பு கேட்கிறேன்
பெண் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி ராஜாஜி எழுதின ஒரு கதையை 50 முறையாவது நான் பல கல்லூரிகளில் பேசியிருக்கிறேன். பல தனியார் கல்வி நிறுவனங்களின் அழைப்பில் போய் அரசு பள்ளிகளின் முக்கியத்துவத்தை இன்றைக்கும் பேசுகிறேன். அந்த ஷோவில் நடந்தது ஜோவிகா என்ற அந்தப் பெண் கிட்டத்தட்ட விசித்திரா மேடத்தால் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டார். குடும்பத்தோடு தெருவில் நிற்கும்போது எப்படி மேடம் மேத்ஸ் மண்டைக்கு ஏறும் எனக் கேட்டதற்கு பெருங்குரலெடுத்து கத்தியும், தமிழில் உன் பெயரை எழுதத் தெரியுமா-டீ உனக்கு என்று விசித்திரா மேடத்தால் மீண்டும் அவமானப்படுத்தப்பட்ட போது நான் ஜோவிகாவை சமாதானப்படுத்த போய் சொன்ன வார்த்தைதான் அது.
எடிட் செய்யப்பட்ட அக்காட்சியை இப்போது பார்த்தபோது நான் முற்றிலும் தவறாக அர்த்தப்படுமாறு பேசி இருக்கிறேன் என்று தெரிகிறது. வகுப்பறைகளைத் தாண்டியும் கற்றுக் கொள்ள முடியும் என்பது மட்டுமே நான் சொல்ல வந்த கருத்து. அது தவறான அர்த்தத்தில் வெளிப்பட்டதை முழு மனதோடு ஒப்புக்கொண்டு என் மன்னிப்பை தமிழ் சமூகத்தின் முன்வைக்கிறேன்.
என் முயற்சியால் 200 பேர் கல்வி கற்கிறார்கள்
இந்த கல்லெறிதல்களினூடே நேற்று காலை திருவண்ணாமலை யிலிருந்து அழைத்த ஒரு நண்பர், உங்களால் மட்டும் 2000 பேர் இந்த ஊரில் கல்வி கற்றிருப்பார்கள் என கலங்கினார். அவருக்கு என் மீது உள்ள அதீத பிரியம் அது. ஆனால் யோசித்துப் பார்க்கையில் என் முயற்சியால் கல்வி கற்றவர்கள் ஒரு 200 பேராவது குறைந்தது இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் ஆரம்பித்து ஜூலை வரை இதை ஒரு இயக்கமாகவே நண்பர்களோடும் குடும்பத்தோடும் சேர்த்து செய்திருக்கிறேன். அண்ணாமலைபுரம், கரியான் செட்டித்தெரு, ஆகிய மலைவாழ் மக்கள் பெருமளவில் வசிக்கும் பகுதிகளில் கோயில் வாசலில் உட்கார்ந்து இரவெல்லாம் கணக்கெடுத்து அக்குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க உதவியிருக்கிறோம். தொடர்ந்து செய்து கொண்டும் இருக்கிறோம். இனிமேலும் அது தொடரும்.
இந்த கல்வியாண்டில் மட்டும் முப்பதைந்து மாணவர்களுக்கு பள்ளிக் கல்லூரி கட்டணம் செலுத்த என் நண்பர்களிடம் கையேந்தியிருக்கிறேன். எம்.பி. ஏ படிக்கிற மாணவனிலிருந்து தொடங்கி ஒன்றாம் வகுப்பு சேர்கிற மாணவன் வரை இதில் அடக்கம். இதில் ஒரு துளியும் பங்கேற்காதவர்கள் தான் கருங்கற்களோடு முன் வரிசையில் நிற்பவர்கள் என்பதும் நானறிந்ததே” என மனவருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
கிரிக்கெட்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion