Bigg Boss 7: பிரதீப் தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக்கொள்வார் என நினைத்தேன்.. ரெட்கார்டு குறித்து கமல்ஹாசன்!
பிரதீப்புக்கு அவரது தரப்பு நியாயத்தை முன்வைக்க வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்று ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது. நான் கொடுத்தேன் என கமல் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் சென்ற வாரம் பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது முதல் இணையதள விமர்சனங்கள் வெடித்ததுடன், பிக்பாஸ் வீட்டிலும் இது தொடர்பாக கூச்சல் குழப்பங்கள் முற்றியது.
சுமார் 40 நாள்களை பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்துள்ள நிலையில், இந்த சீசன் தொடங்கியது முதல் கடந்த வாரம் தான் நிகழ்ச்சி சூடுபிடித்தது. பிரதீப் வெளியேற்றம், மாயா - பூர்ணிமா - ஐஷூ - ஜோவிகா கூட்டணி, விசித்ரா - அர்ச்சனா கூட்டணி, இவர்களுக்கு இடையேயான கடும் மோதல் போக்கு, வாக்கு வாதம் என பிக்பாஸ் வீடு பரபரப்பின் உச்சக்கட்டத்தை அடைந்தது. Bully Gang என மாயா - பூர்ணிமா கூட்டணியை நெட்டிசன்கள் மோசமான விமர்சிக்கும் அளவுக்கு அவர்களது கேலி, கிண்டல் எல்லை மீறியது.
மற்றொருபுறம women cardஐ நியாயமாக பயன்படுத்துங்கள் என அர்ச்சனா பேசியது, பிரதீப் ஆண்டனிக்கு விசித்ராவின் ஆதரவுப் பேச்சு ஆகியவை இந்தக் கூட்டணியை கடுப்பேற்றி குழாயடி சண்டை போன்ற நிலைக்கு பிக்பாஸ் வீட்டைத் தள்ளியது.
இதனிடையே சமூக வலைதளங்களிலும், பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர்கள் மத்தியிலும் பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவுக் குரல்கள் வலுத்தன. பிரதீப்பும் தனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கோரி எல்லாம் தன் இணைய பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மற்றொருபுறம் கமல்ஹாசன் பிரதீப் தரப்பு நியாயங்களை எல்லாம் கேட்காமல் பிரதீப்புக்கு அநீதி இழைத்து அவரை வெளியேற்றியதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்றைய வீக் எண்ட் எபிசோடில் இந்தக் கூச்சல், குழப்பங்களை கமல் எப்படி தன் பாணியில் தீர்த்து வைக்கப்போகிறார், அர்ச்சனா மற்றும் விசித்திராவை உச்சக்கட்டமாக வம்பிழுத்த மாயா - பூர்ணிமா கூட்டணியை கமல் கேள்வி கேட்பாரா எனும் ஆவலால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எகிறன.
அதன்படி, நேற்றைய எபிசோடில் இருதரப்பினருக்கு மையமாக கருத்துகளைக் கேட்டு கமல் தெளிவுபடுத்தினார். இது ஒரு தரப்பினர் மத்தியில் விமர்சனங்களையும் பெற்றது. மேலும் பிரதீப் ஆண்டனி விவகாரம் குறித்து பேசிய கமல் தெரிவித்ததாவது:
“பிரதீப்புக்கு அவரது தரப்பு நியாயத்தை முன்வைக்க வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்று ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது.
நான் கொடுத்தேன். அவருக்கு வாய்ப்பு கொடுத்தபோதெல்லாம் தன்னுடைய தவறுக்கு வருந்துவதோ, அல்லது காரணம் சொல்லுவதோ இல்லாமல், மற்றவர்கள் செய்தது இதை விட பெரிய தவறு என்று தான் போய்க்கொண்டிருந்தார்.
இன்னொரு இடத்தில் அவர் தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக் கொள்வாரோ என்ற யோசனை எனக்கு வந்தது.
அதாவது நான் 4 வயசுல இருந்தே இப்படி தான் சார் இருந்தேன். இப்படிதான் இருப்பேன் என இன்னும் தனக்கான குழியை ஆழம் வெட்டிக்கொள்வாரோ என நினைத்ததால் தான் சரி போதும் விட்டுடுங்க என்றேன். இது அவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு தான்” எனப் பேசினார்.
இதன் மூலம் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். மேலும், பெண்கள் பாதுகாப்பு எனும் விவகாரம் குறித்தும், பிரதீப் ஆண்டனி மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையானவையா என்பதையும் கமல் மீண்டும் கேட்டறிந்து தெளிவுபடுத்தினார். பிரதீப்புக்கு ரெட்கார்டு வழங்கப்பட்ட விவகாரத்தில் இணையத்தில் வைக்கப்பட்ட தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு கமல்ஹாசன் விளக்கமளிக்கும் வகையிலேயே நேற்றைய எபிசோட் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.