Bharathiraja Health: தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இயக்குநர் பாரதிராஜா-மருத்துவமனை அறிக்கை
Bharathiraja Health Condition: இயக்குநர் பாரதிராஜா உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி தனது 81 வது பிறந்தநாளை கொண்டாடினார். அன்றைய தினம் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை தி. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார். ஏற்கனவே நீர்ச்சத்து குறைபாடு காரணமாக வீட்டில் இருந்தே சிகிச்சைப் பெற்று வந்த அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக அமைந்தகரையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலை தொடர்பாக தனியார் மருத்துவமனை அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, “இயக்குநர் பாரதிராஜா கடந்த 26ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றும் ஏற்பட்டு வருகிறது. அவருடைய உடல்நிலை தொடர்பாக மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு மருத்துவர்களால் கண்காணிக்க பட்டு வருகிறார்” எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக அவருக்கு மருத்துவர்கள் அவருக்கு ஓய்வு தேவை என்று அறிவுறுத்தியதாகவும், அப்பாவின் உடல் நிலை நன்றாக இருப்பதாகவும் அவரது மகனும், நடிகருமான மனோஜ் தெரிவித்திருந்தார். திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் பாரதிராஜா விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்வதாக தெரிவித்ததோடு, தங்கள் வாழ்த்துகளையும் சமூக வலைத்தளங்களில் கூறினர்.
பாரதிராஜா விரைவில் குணமடைய பிரான்சில் இருக்கும் தேவாலயத்தில் நடிகை ராதிகா மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தார். இதேபோல் மருத்துவமனைக்கு சென்று நேரில் நலம் விசாரித்த கவிஞர் வைரமுத்து, அவரின் நெஞ்சில் கொஞ்சம் சளி இருக்கிறது. அது விரைவில் சரி செய்யப்பட்டு விடும் என மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறினார். மேலும் பாரதிராஜா மீண்டும் வருவார். கலை உலகை ஆளுவார் எனவும் வைரமுத்து தெரிவித்திருந்தார்.
View this post on Instagram
பாரதிராஜா தனது உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் என் இனிய தமிழ் மக்களே, வணக்கம். நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன்.
மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வர வேண்டாம் என்று என் மேல் அன்பு கொண்ட அனைவரையும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன். மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் இணையதளம் மூலமும் அன்புடன் விசாரித்த மற்றும் நலம் பெற பிரார்த்தித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் சந்திப்போம் என தெரிவித்திருந்தார்.