Shruti Das cyber complaint : ’என் நிறத்தைக் கிண்டல் செய்யறாங்க!’ - புகார் செய்த நடிகை..என்ன நடந்தது?
தனக்கு வந்த கமெண்ட்களில் கொல்கத்தா சைபர் போலீசை ஸ்ருதி டேக் செய்ததை அடுத்து இந்த ஆன்லைன் ட்ராலிங் அங்கே அதிக கவனம் பெற்றது
சினிமா நடிகர்கள் என்றாலே ஆன்லைன் கிண்டலுக்கு பஞ்சமிருக்காது. அந்த வரிசையில் தற்போது ஆன்லைன் தாக்குதலால் மன உளச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் மேற்கு வங்க நடிகை ஸ்ருதி தாஸ்.
2019ல் மேற்கு வங்கத்தின் பிரபல ஹிட் சீரியலான திரிநயனியில் மெயின் கதாப்பாத்திரமாக அறிமுகமானவர் 25 வயதாகும் நடிகை ஸ்ருதி தாஸ். இவரும் சீரியலின் இயக்குநர் ஸ்வர்னேந்துவும் ஒருவரை ஒருவர் நீண்டகாலமாக நேசித்து வருகிறார்கள். இதற்கிடையே தற்போது தன்மீதான ஆன்லைன் ட்ரோல்களின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஸ்ருதி கொல்கத்தா காவல்நிலையத்தில் இதுகுறித்த சைபர் புகார் ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்த அவர் பதிவில், ‘தொடக்கத்தில் அனைவரும் இந்தமாதிரியான தாக்குதல்களைக் கண்டுகொள்ளவேண்டாம் எனச் சொன்னார்கள். நானும் பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டேன்.ஆனால் தற்போது நாளுக்கு நாள் அந்த கமெண்ட்கள் மிக மோசமான தனிமனிதத் தாக்குதலாக மாறிவருகிறது. நான் ஸ்வர்னேந்துவுடன் உறவில் இருப்பதால் என்னைத் தாக்கி என் கேரக்டரை தவறாகச் சித்தரித்து ஆன்லைனில் பதிவிடுகிறார்கள்.இனிமேலும் பொருத்துக்கொண்டிருந்தால் இந்த கிண்டல் இன்னும் அதிகமாகும்.அதனால்தான் புகார் அளிக்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இவர் தற்போது அங்கே தேஷர் மாதி என்கிற மெகா சீரியலில் நடித்து வருகிறார்.
தனக்கு வந்த கமெண்ட்களில் கொல்கத்தா சைபர் போலீசை ஸ்ருதி டேக் செய்ததை அடுத்து இந்த ஆன்லைன் ட்ராலிங் அங்கே அதிக கவனம் பெற்றது. இதையடுத்து போலீசார் ஸ்ருதியை ஈ-மெயிலில் புகார் அளிக்கச் சொன்னார்கள். அவர் புகார் அளித்ததை அடுத்து இந்த விவகாரத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்துள்ளனர். மேலும் 2019லிருந்து தன் மீதான இந்த தாக்குதல் குறித்த ஸ்க்ரீன்ஷாட்களையும் தனது புகாரில் இணைத்துள்ளார் ஸ்ருதி.
View this post on Instagram
மேலும், ஆன்லைனில் மட்டுமல்ல சினிமா மற்றும் சீரியல் வட்டாரத்திலும் தனது நிறம் குறித்து பலர் விமர்சித்து வருவதாகவும் முதல் சீரியலில் தனக்கான சரியான மேக்கப் போடப்படவில்லை என்றால் தனக்கான அடுத்தடுத்த சீரியல் வாய்ப்புகளே வந்திருக்காது என சூட்டிங் ஸ்பாட்டில் சிலர் காதுபடவே பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.தன்னைப் போன்ற பல சீனியர் நடிகர்களும் இதுபோன்ற தாக்குதல்களைச் சந்தித்ததாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கொல்கத்தா காவல்துறை, ‘சினிமா விளம்பர உலகம் வெள்ளை நிறச் சருமத்தைத்தான் முக்கியத்துவப்படுத்துகிறது.இதனால் சீரியலில் நடிப்பவர்களும் பாதிக்கப்படுவதில் ஆச்சரியமில்லை. சருமத்தின் நிறத்தை வெள்ளையாகத் தெரியவைப்பதற்குதான் மேக்கப் போடச் சொல்கிறார்கள். இதன் காரணமாகத் தன் நிறத்தை வெளிப்படையாகத் தன்னம்பிக்கையுடன் வெளிப்படுத்தும் பெண்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. ஸ்ருதியின் புகாரின் பேரில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் ’ எனக் கூறியுள்ளது.