The Kerala Story: ஒரு படத்தை தடைசெய்வது என்பது தவறான அணுகுமுறை... இயக்குனர் அனுராக் கஷ்யப் கருத்து.....
திரைப்படங்களை தடை செய்யும் வழக்கத்திற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் இயக்குனர் அனுராக் கஷ்யப்
மேற்கு வங்கத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தடைசெய்யப் பட்டதைத் தொடர்ந்து திரைப்படங்களுக்கு தடை விதிக்கும் வழக்கத்திற்கு தனது எதிர்ப்பைத் ஹெரிவித்துள்ளார் பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப்
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடந்த மே 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை வெளியிடுவதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டிருந்தது. மேலும் தமிழ் நாட்டில் இந்தப் படம் முதல் நாள் வெளியாகி கடும் எதிர்ப்புகளுக்குப் பின் அடுத்த நாள் திரையிடல் ரத்துசெய்யப் பட்டது. கேரளா ஸ்டோரி திரைப்படத்தை மேற்கு வங்கத்தில் வெளியிடுவதற்கு தடை விதித்தார் அம்மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி. மேலும் அனைத்துத் திரையரங்குகளில் இருந்தும் இந்தப் படம் அகற்றப்பட்டு விட்டதா என உறுதிபடுத்திக் கொண்டார் மம்தா பானர்ஜி. வங்கத்தில் வன்முறை சம்பவங்கள் எதுவும் நடக்காமல் அமைதியை நிலைநாட்டவே இந்தப் படத்தை தடை செய்ததாக தெரிவித்தார் மம்தா பானர்ஜி.
இந்நிலையில் பாலிவுட் திரைப்பட இயக்குனரான அனுராக் கஷ்யப் தனது திரைப்படங்களை தடை செய்யும் வழக்கத்திற்கு தனது எதிர்ப்பை தனது ட்விட்டர் பக்கட்த்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ”எப்படிப்பட்ட ஒரு படமாக இருந்தாலும் சரி அது பிரச்சாரமாக, எதிர்ப்பிரச்சாரமாக, புன்படுத்தக்கூடியதாக எப்படியிருந்தாலும் சரி ஒரு படத்தை தடை செய்வது என்பது தவறான ஒரு அனுகுமுறையே” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாகவே மூத்த நடிகரான ஷபானா அஸ்மி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் தடையை கண்டித்து கருத்துத் தெரிவித்திருந்தார். மேலும் ஃபிரஞ்சு எழுத்தாளர் வால்டையர் என்பவரின் கருத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்தார் அனுராக். ”உங்களது கருத்துடன் நான் ஒற்றுப்போகவில்லை ஆனால் நீங்கள் அதை சொல்வதற்கான உரிமைக்காக சாகும்வரை நான் உங்களுடன் நின்று போராடுவேன்.” என்பதே அந்த வரிகள்.
மேலும் கேரளா ஸ்டோரி மாதிரியான பிரச்சாரத் திரைப்படங்களை தடை செய்வது அவற்றை எதிர்கொள்ளும் சரியான முறை இல்லை என்பதையும் தற்போது சுதிர் மிஷ்ரா இயக்கியுள்ளா அஃப்வா என்கிற திரைப்படத்தை சென்று அனைவரையும் பார்க்கும் படி அறிவிறுத்தியுள்ளார் அனுராக் கஷ்யப். சமூக ஊடகங்களின் மூலம் வெறுப்பும் முன்முடிவுகளும் எப்படி நம் மனதில் ஆழமாக விதைக்கப் படுகின்றன என்பதை இந்தப் படம் பேசுகிறது. இந்த படத்தைப் பார்த்து உங்கள் எதிர்ப்பை மேலும் வலுவானதாக மாற்றிக்கொள்ளுங்கள் “ எனக் பதிவிட்டுள்ளார் அனுராக் கஷ்யப்.
கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியதிலிருந்து கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. கேரளா மாநிலத்திலிருந்து மொத்தம் 33,000 பெண்கள் காணாமல் போனதாகவும் அவர்கள் அனைவரும் வலுகட்டாயமாக இஸ்லாமியத்திற்கு மதமாற்றம் செய்யப் பட்டதாகவும் தகவல் வெளியிட்டிருந்தது இந்தப் படம். இதன் காரணத்தால் கடும் எதிர்ப்புகளை சந்தித்தது.