Balu Mahendra : ’ஒன்னுமே இல்லாம போறேன்.. ஆனா பிடிச்சத செய்யறேன்..’ பாலு மகேந்திராவின் 84-வது பிறந்தநாள் இன்று..
ஒளி ஓவியன் பாலு மகேந்திராவின் 84-வது பிறந்தநாள் இன்று. அவரை பற்றிய ஒரு சிறிய தொகுப்பை காணலாம்.
ஒளி ஓவியன் பாலு மகேந்திராவின் 84-வது பிறந்தநாள் இன்று. அவரை பற்றிய ஒரு சிறிய தொகுப்பை காணலாம்.
இலங்கையில் மட்டக்களப்பு அருகில் உள்ள கிராமத்தில் 1939-ல் பிறந்தவர் பாலு மகேந்திரா. 1977-ல் வெளியான 'கோகிலா' என்ற கன்னடப் படம் தான் பாலு மகேந்திராவின் முதல் படம். இத்திரைப்படம் தான் பாலுமகேந்திராவுக்கு முதல் தேசிய விருதை பெற்றுத் தந்தது. தமிழில் பாலு மகேந்திரா இயக்கிய முதல் படம் அழியாத கோலங்கள். பருவ வயதில் காதலுக்கும் காமம் இடையேயான உணர்வை விளங்கி கொள்ள முடியாமல் தவிக்கும் டீன் ஏஜ் வயதினர் பற்றிய திரைப்படம். தமிழ் சினிமாவுக்கு இந்த படம் தனி ட்ரெண்டையே செட் செய்ததாக சொல்லப்படுகின்றது.
சிறுவனாக இருந்தபோது முதற் தடவையாக கேமராவை தொட்டுப் பார்த்த அனுபவத்தை பாலு மகேந்திரா இவ்வாறு கூறி இருந்தார். 'என் வீட்டு வாழைமரத்தின் பின் அன்னலட்சுமியை தொட்டபோது உண்டான சிலிர்ப்பை கேமராவைத் தொட்டபோது உணர்ந்தேன்' என்றார்.
பாலு மகேந்திரா மூடுபனி என்ற திரைப்படத்தை ஷோபா, பிரதாப்போத்தன் ஆகியோரது நடிப்பில் 1980-ல் இயக்கினார். இளையராஜாவும் பாலு மகேந்திராவும் இணைந்த முதல் திரைப்படமும் இதுதான். இவர்கள் கூட்டணியில் உருவான என் இனியா பொன் நிலாவே என்ற பாடலை இன்றைய 2கே கிட்ஸ்களும் கூட ஹம் செய்ய கூடும்.
இவரின் படைப்புகளில் ரெட்டைவால் குருவி, சதிலீலாவதி போன்ற படங்கள் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்ற திரைப்படங்கள், பாலு மகேந்திராவின் படைப்புகள் அனைத்தும் நினைவை விட்டு நீங்காதவை என்றாலும், தமிழ் சினிமாவில் அவரின் திரை பயணத்தில் என்றென்றும் நினைவுகூறத்தக்க ஒரு திரைப்படம் என்றால் அது 'மூன்றாம் பிறை தான். 1982ஆம் ஆண்டு வெளியான இப்படத்திற்காக கமல்ஹாசன் மற்றும் பாலு மகேந்திரா இருவரும் தேசிய விருதைப் பெற்றனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜாவின் இசையில் கண்ணதாசன் எழுதிய 'கண்ணே கலை மானே...' பாடல் பலருக்கும் இன்றும் பிடித்தமான பாடல் லிஸ்ட்டில் இருக்கக்கூடும்.
இந்தியில் ’சாத்மா’தெலுங்கில் 'நிரீக்ஷனா' மலையாளத்தில் 'ஓமக்குயில்' போன்ற திரைப்படங்கள் பாலு மகேந்திராவின் திரை வாழ்வில் முக்கியமானவை. தொடர்ந்து கலைப் படங்கள் எடுத்துவந்த பாலு மகேந்திராவுக்கு கமர்ஷியல் திரைப்படங்கள் எடுக்கவராது என்ற விமர்சனம் எழுந்தது. இதற்கு பதில் கொடுக்கும் விதமான 1984-ல் 'நீங்கள் கேட்டவை' என்ற திரைப்படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றது.
சினிமா என்றாலே பெரும் செலவாகும் என்ற கூற்றை உடைத்ததும் பாலு மகேந்திரா என்றால் அது மிகை ஆகாது. ஆம், அவர் பெரிய பெரிய லைட்டுகளை எல்லாம் நம்பாமல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மினிமல் லைட்களைக் பயன்படுத்தியே சினிமாக்களை எடுத்தார். அதில் வெற்றியும் கண்டார்.
'சதிலீலாவதி' திரைப்படத்தில் அதிகமான காட்சிகள் இண்டோரில் படமாக்கப்பட்டிருக்கும். இத்திரைப்படத்திலும் அவர் குறைவான லைட்டுகளையே பயன்படுத்தி இருப்பார். அவரின் 'வீடு', 'சந்தியா ராகம்' ஆகிய படங்களில், சில காட்சிகளில் வெளி வராண்டாவில் ஒரு வெள்ளை வேட்டியினை காயப்போட்டிருப்பார்கள். அதன் மூலம், வெளிச்சத்தை தேவையான அளவு பவுண்ட்ஸ் செய்யும் வித்தையினை பாலு மகேந்திரா செய்திருப்பார். இப்படம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சினிமாவாக மாறியது. 'வீடு'. சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் வென்றது.
கதாநாயகி என்றாலே நல்ல வெள்ளை நிறத்தில்தான் இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதியை உடைத்ததும் பாலு மகேந்திராதான். ஆம் அர்ச்சனா, ஷோபா, சில்க் ஸ்மிதா, ப்ரியாமணி என அவரது பல கதாநாயகிகள் மாநிற அழகிகள்தான்.
மெளனங்களின் வழியாகவும் நமக்குள் கதையின் போக்கையும் வலியையும் நமக்குள் கடத்தியவர்கள் வெகு சிலரே! அவர்களில் முக்கியமானவர் பாலுமகேந்திரா. "நாம ஜெயிக்கிறோம், சம்பாதிக்கிறோம், தோக்குறோம், ஒண்ணுமே இல்லாது போறோம். இது எல்லாத்தையும் தாண்டி நாம இஷ்டப்பட்ட வேலையை இஷ்டப்பட்ட நேரத்துல செய்கிறோம் என்பது எவ்வளோ பெரிய பாக்கியம்..!" என்றார் பாலு மகேந்திரா. ஆம் அது உண்மை தான் அவர் அப்படி தான் வாழ்ந்தார், அவர் வெற்றி தோல்விகளை அல்ல படைப்புகளை நம்பினார். அதில் மட்டும் தான் கவனம் செலுத்தினார். அதனால் தான் அவர் சிறந்த படைப்பாளியாக ரசிகர்களின் நெஞ்சில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார். ஈடு இணை இல்லா ஒப்பற்ற கலைஞன் பாலு மகேந்திராவை அவர் பிறந்தநாளில் நினைவு கூர்கிறது ஏபிபி நாடு.