Baahubali vs PS: பாகுபாலியா? பொன்னியின் செல்வனா? இணையத்தில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்..!
இன்று உலகெங்கிலும் வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்தை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் பாகுபலி படத்துடன் ஒப்பிட்டு இணையத்தில் மோதி கொள்கிறார்கள்.
பலரும் கனவு கண்ட ஒரு படத்தை நிஜத்தில் காட்சிப்படுத்திய பெருமை இயக்குனர் மணிரத்னத்தை மட்டுமே சேரும். அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலுக்கு உயிர் கொடுத்து அதை கண்முன்னே உருவங்களாக படைத்து திரை ரசிகர்களை வியக்க வைத்து விட்டார் இயக்குனர் மணிரத்னம்.
ராக்கெட் வேகத்தில் டிக்கெட் விற்பனை :
இயக்குனர் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் இரண்டாவது பாகம் இன்று உலகெங்கிலும் அனைத்து மொழிகளிலும் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. முதல் நாள் காட்சிகளே சக்கை போடு போட்டு வரும் நிலையில் அடுத்தடுத்து சனி, ஞாயிறு, மே தினம் என தொடர்ந்து விடுமுறை நாட்களுக்கான டிக்கெட் முன்பதிவுகளும் வேகமாக விற்று தீர்ந்து வருகின்றன.
ஃபர்ஸ்ட் ஷோ பார்த்த மக்கள் கருத்து :
இந்த நிலையில் 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் முதல் காட்சியை பார்த்து திரும்பிய ரசிகர்கள் படம் குறித்த அவர்களின் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்து கொண்டாடப்பட்டதோ அதே போல இரண்டாம் பாகமும் சரியான வெற்றி படமாக அமையும் என கருத்து தெரிவித்து வருகிறார்கள். முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகத்தில் ஏராளமான ட்விஸ்ட், சஸ்பென்ஸ் என ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கவர்ந்து விட்டார் மணிரத்னம் என புகழ்ந்து வருகிறார்கள்.
PS - பாகுபலி ரசிகர்கள் மோதல் :
பொன்னியின் செல்வன் 2 படம் குறித்து கருத்து தெரிவித்து வரும் அதே வேளையில் இப்படத்தை பாகுபலி படத்துடன் ஒப்பிட்டு ட்ரோல் செய்து வருகிறார்கள். எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் இரண்டு பாகங்களாக வெளியான பாகுபலி படத்துடன் ஒப்பிட்டு பல மீம்ஸ், விமர்சனங்களை இணையத்தில் தெறிக்க விடுகிறார்கள் சோசியல் மீடியா பயனாளர்கள். இதனால் பாகுபலி மற்றும் பொன்னியின் செல்வன் ரசிகர்களுக்கு இடையே இணையத்தில் பெரும் வாக்குவாதம் நடைபெற்று வருகிறது.
பாகுபலி படம் எல்லாம் ஒரு படமா? அது ஒரு பொம்மை படம் என கலாய்க்கும் PS ரசிகர்களுக்கு பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களையும் சேர்த்தாலே அது பாகுபலிக்கு ஈடாகாது என பாகுபலி ரசிகர்கள் முட்டி மோதி வருகிறார்கள். இந்த சண்டை எங்கு போய் முடிய போகிறது என தெரியவில்லை என தலையில் அடித்து கொள்கிறார்கள் நெட்டிசன்கள்.
நன்றி தெரிவித்த மணிரத்னம் :
PS 2 புரொமோஷன் சமயத்தில் மணிரத்னம் பேசுகையில் "இயக்குனர் ராஜமௌலி தான் பாகுபலி படத்தின் மூலம் சரித்திர கதையை இரண்டு பாகங்களாக எடுக்க முடியும் என நிரூபித்து காட்டினார். அவர் தான் நான் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க முன்னோடியாக இருந்தவர். அவரின் வழிகாட்டுதலால் தான் பலரும் இன்று சரித்திர கதைகளை எடுக்க தைரியத்தை கொடுத்தவர்" என ராஜமௌலியை பாராட்டி இருந்தார் மணிரத்னம் என்பது குறிப்பிடத்தக்கது.