AR Rahman Notice: ”மன்னிப்பு கேளுங்கள் ஏ.ஆர். ரஹ்மான்” - ரூ.15 கோடி இழப்பீடு கேட்டு மருத்துவர் சங்கம் பதில் நோட்டீஸ்
ரூ.10 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர். ரஹ்மான் தரப்பு அளித்த நோட்டீஸ்க்கு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
AR Rahman Notice: தனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக கூறி ரூ.10 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர். ரஹ்மான் அளித்த நோட்டீஸ்க்கு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் பதிலடி கொடுத்துள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒருங்கிணைப்பு அமைப்பின் சார்பில் அதன் தேசிய மாநாட்டின் செயலாளர் மருத்துவர் விநாயக் செந்தில் சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்தார். அதில், கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 26 மற்றும் 30ம் தேதிகள் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான மாநாடு நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், அதில் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து அவருக்கு முன்பணமாக ரூ. 29.50 லட்சம் கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், தமிழக அரசின் அனுமதி பெறாததால் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால், கொடுத்த முன்பணத்தை திருப்பி தராமல் ஏ.ஆர். ரஹ்மான் தரப்பு ஏமாற்றி வருவதாக புகாரில் கூறப்பட்டிருந்தது. அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட மோசடி புகார் தொடர்பாக மத்திய குற்றவியல் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கு அறுவை சிகிச்சை புணர்கள் சங்கம் அளித்த புகாருக்கும் ஏ.ஆர். ரஹ்மானிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், நிகழ்ச்சியை ரத்து செய்தால் முன்பணம் திருப்பி தரமுடியாது என்ற அடிப்படையில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் ஏ.ஆர். ரஹ்மான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே நேற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்துக்கு எதிராக ஏ.ஆர். ரஹ்மான் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக புகார்தாரருக்கு எதிராக ஏ.ஆர். ரஹ்மான் தரப்பு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதில், 15 நாட்களுக்குள் ரூ.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்குவதுடன், பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் தரப்பு நோட்டீஸ்க்கு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் சார்பில் பதில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ஏ.ஆர். ரஹ்மான் மன்னிப்பு கேட்பதுடன், ரூ.15 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இசை நிகழ்ச்சிக்கு முன்பணமாக பெற்ற ரூ.29.50 லட்சத்தை வட்டியுடன் கொடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: EthirNeechal Serial: ஆதி குணசேகராக வருகை தந்த வேல ராமமூர்த்தி.. ஒருநாள் சம்பளமே இவ்வளவா? - வைரலாகும் தகவல்..!
Silambarasan: “உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்”.. சித்தார்த்தை நெகிழ்ந்து பாராட்டிய சிம்பு..!