Ashes Test: தொடரை வெல்லுமா ஆஸ்திரேலியா? முட்டுக்கட்டை போட தயாராகும் இங்கிலாந்து.. ஆஷஸ் 4வது டெஸ்ட் இன்று தொடக்கம்
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருக்கும் இந்த தொடரில் இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ளது. இதில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும், 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் இன்று தொடங்குகிறது. சமீபகாலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி காட்டி வரும் இங்கிலாந்து முதல் 2 டெஸ்டில் தோற்றாலும் 3வது போட்டியில் சுதாரித்துக் கொண்டு வெற்றி பெற்று அசத்தியது. இந்த 4வது போட்டியில் அந்த அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஆலி ராபின்சனுக்கு பதிலாக மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் அணியில் தொடர்ந்து இடம் பெற, தனது பழைய ஃபார்மை மீட்க இந்த போட்டி மிக முக்கியமானதாகும். அதேபோல் ஜானி பேர்ஸ்டோவும் தனது ஃபார்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இந்த பக்கம் ஆஸ்திரேலிய அணியை எடுத்துக் கொண்டால் கடந்த டெஸ்டில் காயத்தால் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்ட மிட்செல் மார்ஷ் கிட்டத்தட்ட 4 ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் அணியில் களம் கண்டு சதம் அடித்தார். இப்போது கேமரூன் கிரீன் குணமடைந்து உடல்தகுதியை எட்டி விட்ட நிலையில், இதனால் யாரை சேர்ப்பது? அணி நிர்வாகத்துக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு உகந்தது என்பதால் சுழற்பந்து வீச்சாளர் டாட் மர்ஃபி கழற்றி விடப்பட்டு கேமரூன் க்ரீன் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிட்டதட்ட இரு அணிகளும் சரிசம பலத்துடன் திகழ்வதால் இந்த போட்டியில் யார் வெல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்ற ஆஸ்திரேலியாவும், தொடரைக் கைப்பற்றும் போட்டியில் நீடிக்க இங்கிலாந்தும் மல்லுக்கட்டும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. போட்டி நடக்கும் ஓல்டு ட்ராப்ஃபோர்டு மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி இதுவரை 31 டெஸ்டில் விளையாடி 9 போட்டிகளில் வெற்றி, 7 போட்டியில் தோல்வி, 15 போட்டிகளில் டிரா கண்டுள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது.