Arya - Sayyeshaa Daughter: ஸ்கூலுக்கு போறேனே... முதல் நாள் பள்ளி சென்ற மகள்... ஆர்யா - சாயிஷா உணர்ச்சிகர பதிவு!
தங்களின் மகள் அரியானா முதல் நாள் பள்ளி சென்ற அனுபவம் குறித்து நடிகை சாயிஷா உணர்வுப்பூர்வமாக இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களுள் ஒருவரான ஆர்யா, கடந்த 2016ஆம் ஆண்டு கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்தபோது நடிகை சாயிஷாவை காதலித்து, தொடர்ந்து 2019ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிகளுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இவர்களது குழந்தைக்கு அரியானா என பெயர் வைத்தனர்.
தற்போது சாயிஷா, தங்களின் குழந்தை அரியானா முதல் நாள் பள்ளி சென்ற அனுபவம் குறித்து உணர்வுப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “ அரியானா முதல் நாள் பள்ளிக்கு சென்றதால் அனைவரும் உணர்ச்சிகரமாக இருந்தோம். அரியானா வீட்டை விட்டு வெளியே சென்று பல மணி நேரங்கள் செலவிடப்போவது இதுவே முதல் முறை. ஆனால் அவளுடைய காலை மிகவும் நன்றாக இருந்தது. அவள் நிறைய குழந்தைகள் மற்றும் பொம்மைகளுடன் விளையாடி மகிழ்ச்சியுடன் திரும்பி வந்தாள்” இவ்வாறு சாயிஷா பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
தங்கள் மகள் அரியானாவின் புகைப்படங்களை ஆர்யா - சாயிஷா தம்பதி அவருக்கென தனியாகத் தொடங்கியுள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
2005ஆம் ஆண்டு விஷ்ணு வர்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆர்யா, மாதவனுக்கு அடுத்தப்படியாக சாக்லெட்- பாய் ஆக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். உள்ளம் கேட்குமே, பட்டியல், ஓரம் போ, நான் கடவுள், மதராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், ராஜா ராணி, கஜினிகாந்த், டெடி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் ஆர்யா.
தற்போது வெங்கடேஷ் நடிக்கும் தெலுங்கு படமான ‘சைந்தவ்’ படத்தில் நடிகர் ஆர்யா இணைந்துள்ளதாக, படக்குழு அதிகாரபூர்வமாக கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. மேலும் ஆர்யாவின் கதாபாத்திரம் மற்றும் தோற்றத்தையும் படக்குழு வெளியிட்டது. தெலுங்கில் ‘ஹிட்’ பட சீரிஸ்களை இயக்கிய சைலேஷ் கொலனு அடுத்ததாக ‘சைந்தவ்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
தெலுங்கில் தயாராகி, பான் இந்தியா அளவில் வெளியாக உள்ள இப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கும் இப்படம், டிசம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான மனஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகரின் பெயர் மற்றும் தோற்றம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி மனஸ் என்ற கதாபாத்திரத்தில் ஆர்யா நடிக்க உள்ளதை படக்குழு அறிவித்தது.
மேலும் படிக்க
Simbu New Look: 'சேகுவேரா கெட்டப்பில் சிலம்பரசன்’ .. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.. பின்னணி என்ன?