Nitin Chandrakant : அதிர்ச்சியில் திரையுலகம்.. தேசிய விருது வென்ற கலை இயக்குநர் தற்கொலை.. என்ன காரணம்?
தேவ்தாஸ், மம்முட்டி நடித்த டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர் உள்ளிட்ட பல பிரபல திரைப்படங்களுக்கும் கலை இயக்கப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இந்திய சினிமாவின் பிரபல கலை இயக்குநரான நிதின் சந்திரகாந்த் தேசாய் தற்கொலை செய்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 58.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட்டில் கோலோச்சி வரும் நிதின் பாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர்களான சஞ்சய் லீலா பன்சாலி, அசுதோஷ் கௌரிக்கர், ராஜ்குமார் ஹிரானி, விது வினோத் சோப்ரா உள்ளிட்ட பலருடன் பணிபுரிந்துள்ளார்.
ஆஸ்கர் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் க்ரோர்பதி நிகழ்ச்சி தொடர்பான காட்சிகளின் செட்கள் அமைத்தது தொடங்கி, தேவ்தாஸ், மம்முட்டி நடித்த டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர் உள்ளிட்ட பல பிரபல திரைப்படங்களுக்கும் கலை இயக்கப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
மேலும், ஸ்வதேஸ், லகான், ஜோதா அக்பர் உள்ளிட்ட பிரபல பாலிவுட் திரைப்படங்களில் ப்ரொடக்ஷன் டிசைனராகவும் பணியாற்றியுள்ளார். தேவ்தாஸ், லகான், ஹம் தில் தே சுக்கே சனம், அம்பேத்கர் உள்ளிட்ட படங்களுக்காக தேசிய விருது வென்றுள்ள நிதின், பாலிவுட் , மராத்தி படங்களில் நடிகராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும் ஹலோ ஜெய் ஹிந்த், அஞ்சிதா எனும் படங்களை இயக்கியுள்ள இவர், படத் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். மும்பையை அடுத்த கர்ஜாத் பகுதியில் சொந்தமாக என்.டி. ஸ்டுடியோஸ் எனும் ஸ்டுடியோவை நிறுவி பணியாற்றி வந்த நிதின் தேசாய் இன்று தன் ஸ்டுடியோவிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நிதி நெருக்கடி காரணமாக நிதின் தேசாய் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்களில் தகவல் பரவி வரும் நிலையில், சினிமா துறையினர் மற்றும் ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Suicidal Trigger Warning..
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)