சினிமா கார்ப்பரேட் கையில போயிடுச்சு...அரணம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டில் அரசியல் பேசிய இயக்குநர் பிரியன்
அரணம் படத்தை இயக்கியிருக்கும் பாடலாசிரியர் மற்றும் இயக்குநர் பிரியன் பெரிய பட்ஜெட் சினிமாக்களை விமர்சித்து கடுமையாக பேசியுள்ளார்
இயக்குநராகும் பாடலாசிரியர்
விஜய் ஆண்டனி இசையமைத்த உசும-லாரசே, மாகா-யலா, மஸ்-காரா போட்டு, வேலாயுதம் படத்தில் வேலா வேலா என பல்வேறு புகழ்பெற்ற பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் பிரியன். மேலும் கலகத் தலைவன் , சினம், கடாரம் கொண்டான், பிச்சைக்காரன் , கோலி சோடா உள்ளிட்டப் படங்களுக்கு இவர் எழுதிய பாடல்கள் பெரிய அளவில் மக்களை சென்று சேர்ந்துள்ளன. தற்போது இயக்குநராக அவர் அறிமுகமாக இருக்கும் படம் அரணம். பிரியன், லகுபரன், வர்ஷா , கீர்த்தனா உள்ளிட்டவர்கள் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் அரணம். ஹாரர் திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை தமிழ் திரைக்கூடம் தயாரித்துள்ளது. ஷாஜன் மாதவ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். நேற்று மாலை பிரசாத் லேப் இல் அரணம் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது பேசிய அப்படத்தின் காதநாயகனும், இயக்குநருமாகிய கவிஞர் பாடலாசிரியர் பெரிய பட்ஜட் கமர்ஷியல் சினிமா மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
சினிமா மீது உள்ள கோபம்தான் அரணம்
”20 வருடம் சினிமாவில் இருந்த என்னையே நீங்க இந்த அடி அடிக்கிறீங்கன்னா புதுசா வரும் ஒருத்தனை என்ன அடி அடிப்பீங்க.. கலைக்குள்ளேயே கலையை அழிப்பதற்கானவர்கள் இருக்கும் இடம் சினிமாதான்” என்றார்.
“ஒரு காலக்கட்டத்தில் சினிமாவில் அவ்வளவு வீரியமான கலைஞர்கள் இருந்தார்கள். ஆனால் இப்போது எல்லாம் வெறும் வெட்டு குத்தை மட்டுமே படமாக எடுக்கிறார்கள். நான் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியின் 10 வருஷத்தில் எனக்கு ஒரு இடத்தை கொடுத்தது தமிழ். என்னைப் போன்ற கனவுகள் இருக்கும் ஒருவருக்கு இந்த துறையில் எப்படி மேலே வரவேண்டும் என்று ஒரு மூத்த பாடலாசிரியரும் சொல்லிக் கொடுக்கவில்லை. அதனால் தான் பாடலாசிரியர்களை உருவாக்கும் தமிழ் திரைப்பா கூடம் என்கிற ஒன்றை நான் உருவாக்கினேன். இதனை நான் தொடங்கும் போது எல்லா மூத்த பாடலாசிரியர்களும் இதை செய்ய வேண்டாம் என்று சொன்னார்கள். மூத்த கவிஞர் வாலி மட்டுமே என்னை யாருமே செய்யாத விஷயம் நீ செய் என்று சொன்னார். 2003 முதல் 2013 வரை நான் உச்சத்தில் இருந்தேன் .
ஆனால் இதற்குபிறகு என்னுடைய பாடல்கள் குறைந்துவிட்டது. எனக்கு வாழ்க்கை கொடுத்த தமிழ் மொழிக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். என் மொழிக்கு நான் செய்யாமல் வேறு யார் செய்வார். நான் ஒரு படத்தை இயக்கப் போகிறேன் என்று யாரிடம் தெரிவித்தாலும் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி ‘ நீங்க பாடலாசிரியர்தானே’ என்று . எனக்கு பிடித்ததை செய்வதற்கு நான் என் யார் யாருக்கோ பதில் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன். பாரதியின் தமிழைப் படித்து வளர்ந்த தன்மானம் கூட இல்லையென்றால் எப்படி. அந்த கோபத்தில் எடுத்ததுதான் அரணம். உண்மையைச் சொல்லப் போனால் சினிமா மீது இருக்கும் கோபம் தான் அரணம் “ என்று பிரியன் கூறினார்.
சினிமா கார்ப்பரேட்காரர்கள் கையில் போய்விட்டது
”எல்லா மேடைகளிலும் ஏன் திரைக்கலைஞர்களை நாம் அழவைக்கிறோம் என்பதை யோசித்து பார்க்க வேண்டும் . எல்லா மேடைகளிலும் நடிகர்கள் அழுவதில்லை ஆனால் இயக்குநர்கள் மைக்கை கையில் பிடித்த உடனே அழுகிறார்கள். ஃபைட் கிளப் படத்தில் நடித்த விஜயகுமாராக இருந்தாலும் சரி. ஒரு கலைஞனை அழவைக்கக் கூடிய இடம் எப்படி நல்லா இருக்கும். ஒரு கலைஞனை காயப்படுத்தலாமா. ஒரு காலத்தில் படைப்பாளிகள் கையில் இருந்த சினிமா இப்போது கார்ப்பரேட் காரர்கள் கையில் சென்றுவிட்டது. சினிமா மீண்டும் படைப்பாளிகள் கையில் வரவேண்டும் என்பதே என் ஆசை. இயக்குநர் பாலுமகேந்திரா ஊட்டிக்கு போய் அசால்ட்டாக படத்தை எடுத்துவிட்டு வந்தார். ஏ.வி.எம் தயாரிப்பாளர் கையைக் கட்டிக்கொண்டு தான் படம் பண்ணவில்லை” என்று அமைதியாகிவிட்டார்.
”ஆனால் இன்று 300 கோடி 400 கோடிக்கு குப்பை குப்பையாக படம் வெளியாகிறது. சித்தா மாதிரி அயோத்தி மாதிரி அற்புதமான படங்கள் இருக்கின்றன. ஒரு சில படங்கள் திரையரங்கங்கள் கிடைக்காமல் ஓடிடியில் வெளியாகின்றன. அந்தப் படங்களை மக்கள் பார்த்து இப்படி எல்லாம் படம் வருகிறதா என்று கேட்கிறார்கள். நல்ல படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை. அரணம் படம் தோற்றாலும் அதை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.” என்று இயக்குநர் பிரியன் பேசியுள்ளார்.