AR Rahman: அத பண்ணா, ஆக்ஸிஜன்ல விஷம் கலந்து சுவாசிக்கிற மாதிரி.. ஏஆர் ரஹ்மான் கூறியது எதைப் பற்றி.?
இசையில் அதை செய்தால், அது, ஆக்ஸிஜனில் விஷம் கலந்து அதை சுவாசிப்பதுபோல் ஆகிவிடும் என்று ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார். அவர் எதைப்பற்றி அப்படி கூறினார் தெரியுமா.?

ஆஸ்கர் விருதாளரான ஏ.ஆர். ரஹ்மான், இசையில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில்தான், ஆக்ஸிஜனில் விஷம் கலந்து அதை சுவாசிப்பது போன்றது என்று கூறியுள்ளார். எதற்காக அவர் அப்படி கூறினார் என்று பார்ப்போம்.
எல்லாவற்றிலும் கலந்த ஏஐ தொழில்நுட்பம்
தற்போது இணைய உலகத்தை கலக்கி வரும் ஏஐ தொழில்நுட்பம், இணையம் மட்டுமல்லாது, நம் அன்றாட வாழ்விலும் நுழைந்துவிட்டது. ஆம், நாம் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் பொருட்களிம், ஏஐ தொழில்நுட்பம் வந்துவிட்டது. ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் என நாம் வீடுகளில் பயன்படுத்தும் சாதனங்களிலும் ஏஐ தொழில்நுட்பம் புகுந்துவிட்டது.
இப்படி, எல்லாம் ஏஐ மயம் என்று கூறும் அளவிற்கு வேகமாக இந்த தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. அது இசைத்துறையையும் விட்டு வைக்கவில்லை. சமீபத்தில் வெளியான சில பாடல்களில், ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மறைந்த பாடகர்களின் குரலை மறு உருவாக்கம் செய்வது போன்றவைகளை முயற்சி செய்து வெற்றி கண்டுள்ளனர்.
இசையில் ஏஐ பயன்பாடு குறித்து ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் கருத்து
இசைத்துறையில் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்து, ஆஸ்கர் விருதாளரான இந்திய இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார். இசையில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை பொறுத்தவரை, நன்மை மற்றும் தீமை என இரண்டுமே உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இசைக்கலைஞர்கள் புதிய தொழில்நுட்பத்திற்கு எதிரிகள் அல்ல என்றும், சொல்லப்போனால், லால் சலாம் படத்தின் பாடலுக்காக, மறைந்த பாடகர்கள் பம்பா பாக்யா மற்றும் ஷாகுல் ஹமீது ஆகியோர் குரல்களை ஏஐ மென்பொருளை பயன்படுத்தி தான் உருவாக்கியதாக சுட்டிக்காட்டியுள்ளார் ஏ.ஆர். ரஹ்மான். ஆனால், அந்த இசைக்கலைஞர்களின் குடும்பத்தாரிடம் முறையாக அனுமதி வாங்கியே அதை தான் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இசையில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது வைரலாகிவிட்டதாகவும், ஆனால் சில பாடல்கள் மோசமாக உள்ளதாகவும் கூறியுள்ள அவர், அப்படியான சில பாடல்களில் பிரபல பாடகர்களின் குரல்கள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதை கட்டுப்படுத்த வேண்டும், இல்லையென்றால் பெரும் குழப்பம் ஏற்பட்டுவிடும் என்றும் கூறியுள்ளார் ஏ-ஆர். ரஹ்மான்.
“ஆக்ஸிஜனில் விஷம் கலந்து, அதை நாம் சுவாசிப்பது போன்றது“
இந்த தொழில்நுட்பத்தால் நன்மையும் உள்ளது, தீமையும் உள்ளது என்றும், நல்ல விஷயங்களை, வாய்ப்பு கிடைக்காமல் இருப்போர் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்த வேண்டும், ஆனால், இத்தொழில்நுட்பத்தை மோசமான விஷயங்களக்கு பயன்படுத்தினால் அது நமக்கு தீமையை விளைவிக்கும் என்றும், அது ஆக்ஸிஜனில் விஷயம் கலந்து நாம் அதை சுவாசிப்பது போன்றது எனவும் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

