HBD AR Rahman: ஏ.ஆர்.ரஹ்மானைத் தெரியும்! அவங்க அப்பா யாருனு தெரியுமா? இவ்ளோ பெரிய பிரபலமா?
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் 58வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரின் தந்தை யார்? என்று அறிந்து கொள்ளலாம்.
உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கர் விருது வென்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று 58வது பிறந்தநாள் ஆகும். ஏ.ஆர்.ரஹ்மானின் 58வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை யார்?
நம் அனைவருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் மிகப்பெரிய இசை ஆளுமை என்று தெரியும். ஆனால், அவரது தந்தையைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அவரது தந்தை ஆர்.கே.சேகர். ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தையும் ஒரு இசையமைப்பாளர் ஆவார். ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தையின் முழுப்பெயர் ராஜகோபால குலசேகரன் ஆகும். இவரை அனைவரும் ஆர்.கே.சேகர் என்று அழைக்கின்றனர்.
ஆர்.கே.சேகர் என்று மலையாள திரையுலகின் பிரபல இசையமைப்பாளராக திகழ்ந்தார். ஆர்.கே.சேகர் குடியாத்தத்தைப் பூர்வீகமாக கொண்டவர். 1933ம் ஆண்டு பிறந்த ஆர்.கே.சேகர் முதன்முதலாக 1964ம் ஆண்டு வெளியான பழசி ராஜா என்ற படம் மூலமாக இசையமையப்பாளராக அறிமுகமானார். அந்த படத்தில் இடம்பிடித்த சொட்ட முதல் சுடல வரே பாடலே இவர் இசையமைத்த முதல் பாடல் ஆகும்.
இறக்கும் வரை இசை:
இவரது இசையில் 20 படங்கள் வெளியாகியுள்ளது. அதில், மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாராக கொடி கட்டிப் பறந்த பிரேம் நசீரின் படங்களும் அடங்கும். ஆர்.கே.சேகரின் இசையில் உருவாகிய பல பாடல்களும் சூப்பர் ஹிட்டான பாடல்கள் ஆகும். 1976ம் ஆண்டு வெளியான சோட்டானிக்கர அம்மா படமே இவர் இசையமைத்த கடைசி படம் ஆகும். ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகரின் மிகவும் நெருங்கிய நண்பர் மலையாள திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜுனன்.
அவரது முதல் படம் முதல் ஆர்.கே.சேகர் உயிரிழக்கும் வரை எம்.கே.அர்ஜுனன் இசையமைத்துள்ள படங்களில் உதவி இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். எம்.கே.அர்ஜுனன் மட்டுமின்றி இசையமைப்பாளர் தக்ஷிணாமூர்த்திக்கும் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.
இசைக் குடும்பம்:
ஓய்வே எடுக்காமல் கடினமாக உழைத்ததால் அவரது உடல்நலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக 43 வயதிலே ஆர்.கே.சேகர் கடந்த 1976ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி காலமானார். ஆர்.கே.சேகர் கஸ்தூரியை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஏ.ஆர்.ரஹ்மான், ஏ.ஆர்.ரெஹனா உள்பட நான்கு குழந்தைகள் ஆவார்கள். இவரின் மகள் வழி( ஏ.ஆர்.ரெஹனா) பேரன்தான் பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ஜிவி பிரகாஷ்குமார் ஆவார்.
ஆர்.கே.சேகரின் மறைவிற்கு பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் குடும்பம் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினர். பின்னர். ஏ.ஆர்.ரஹ்மானும் தனது தந்தையைப் போல இசையமைப்பாளராக ரோஜா படம் மூலமாக அறிமுகமாகி இந்திய சினிமாவையே தனது இசையால் கட்டி ஆண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.