Amaravathi Rerelease: 'எனக்கு அதுதான் முதல் படம்.. ரொம்ப அவஸ்தைப்பட்டாங்க' அமராவதி நினைவுகளை பகிர்ந்த நடிகை சங்கவி..!
"எனக்கு அப்போது ஒன்றும் தெரியாது. மொழி தெரியாது, கேமரா கோணங்கள், எப்படி மேக் அப் போட வேண்டும், மிகவும் கஷ்டப்பட்டு என்னிடம் வேலை வாங்கினார்கள்” என்று சங்கவி நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் மே 1ஆம் தேதி(நாளை) அவரது முதல் தமிழ் படமான அமராவதி டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழ் சினிமாவின் எந்தப் பின்னணியுமின்றி முன்னேறி தலயாக உருவெடுத்து ரசிகர்களால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொண்டாடித் தீர்க்கப்படும் நடிகர் அஜித்குமார்.
20 ஆண்டுகளுக்குப் பின் ரீ - ரிலீஸ்
1990ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் 1993ஆம் ஆண்டு இயக்குநர் செல்வா இயக்கத்தில் அஜித் நடிகராக அறிமுகமான திரைப்படம் அமராவதி. சோழா பொன்னுரங்கம் இந்தப் படத்தைத் தயாரித்த நிலையில், 90களின் தமிழ் சினிமாவைக் கலக்கிய நடிகை சங்கவியும் இந்தப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். நிழல்கள் ரவி, நாசர், விசித்ரா ஆகியோர் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பாலபாரதி இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார்.
இந்தப் படம் வெளிவந்து 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் வரும் மே 1ஆம் தேதி நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு அமராவதி படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்கப்பட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
9ஆம் வகுப்பு முடிந்ததும் நடிப்பு
இந்நிலையில் இந்தப் படத்தின் வெளியீடு குறித்து நடிகை சங்கவி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ”என் ரசிகர்களுக்கு வணக்கம். இன்று என் முதல் தமிழ் படம் அமராவதி பற்றி பேசப்போகிறேன். மே 1 உழைப்பாளர்கள் தினம். ஆனால் இந்த மே 1 எனக்கு மிகவும் ஸ்பெஷல். இந்த ஆண்டு என் படம் டிஜிட்டலில் ரீ ரிலீஸ் ஆகப்போகிறது.
எனக்கும் அஜித்துக்கும் இது முதல் படம். 1993ஆம் ஆண்டு இந்தப் படம் எடுத்தாங்க. அப்போது நான் 9ஆம் வகுப்பு முடித்திருந்தேன். செல்வா சார் என்னைப் பார்த்துவிட்டு இந்தப் பொண்ணு பார்க்க அழகா இருக்காங்க. இந்தப் பொண்ணை போடலாம் எனக் கூறி நடிக்க வைத்தார்கள்.
ரீரிலீஸ் என்பது அரிது
எனக்கு அப்போது ஒன்றும் தெரியாது. மொழி தெரியாது, கேமரா கோணங்கள், எப்படி மேக் அப் போட வேண்டும், எப்படி கேமராவை எதிர்கொள்வது, நடிப்பது என ஒன்றும் தெரியாது. செல்வா சார் மிகவும் அவஸ்தைப்பட்டார்கள். மிகவும் கஷ்டப்பட்டு என்னிடம் வேலை வாங்கினார்கள்.
சோழா க்ரியேஷன்ஸ் பத்தி சொல்லணும்னா அது ஒரு சினிமா கம்பெனி மாதிரி இருக்காது. நண்பர்கள், வயதில் குறைந்தவர்கள் கல்லூரியில் எப்படி இருப்பார்களோ அப்படி தான் இருக்கும். நிறைய பேரை ஊக்குவித்துள்ளார்கள். பொன்னுரங்கன் சாருக்கு நன்றி.
அதிர்ஷ்டம்:
ஒரு நடிகராக நாங்கள் படம் நடித்தால், படம் முடிந்து அது ரிலீஸாகும், அதன் பின் நிறைய படங்கள் கிடைக்கும். ஆனால் ஒரு படம் ரீ ரிலீஸ் ஆவது என்பது ரொம்பவும் அரிதான விஷயம். சிலருக்கு தான் அது அமையும். எம்ஜிஆர் சார், ரஜினி சாரின் படங்கள் ரீ ரிலீஸ் ஆகியுள்ளன.
இப்படி வெகு சிலருக்கு மட்டுமே இது அமைந்துள்ள நிலையில், எங்கள் முதல் படமும் இதில் இருப்பதை நான் அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். ரொம்ப நல்ல படம் அமராவதி. தயவு செய்து இந்தப் படத்தை திரையரங்கில் பார்த்து எங்களை ஊக்குவியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

