Allu Arjun: என் பிறந்தநாளா இருந்தாலும் மனைவிக்கு தான் கிஃப்ட்... அல்லு அர்ஜூன் செயலுக்கு இதயங்களை பறக்கவிடும் ரசிகர்கள்!
தன் பிறந்த நாள் அன்று கூட தன் காதல் மனைவி ஸ்நேகாவுக்கு பரிசாக மோதிரம் கொடுத்து அசத்தியுள்ளார் எனக்கூறி ரசிகர்கள் இணையத்தில் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
டோலிவுட்டின் 'ஸ்டைலிஷ் ஸ்டார்’ அல்லு அர்ஜூன் நேற்று (ஏப்.08) தன் 41ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், உலகம் முழுவதுமுள்ள அல்லு அர்ஜூன் ரசிகர்கள் அவரை வாழ்த்து மழையில் நனைய வைத்தனர்.
41ஆவது பிறந்தநாள்
சிரஞ்சீவி, ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர் டேவிட் வார்னர் தொடங்கி சமந்தா, ராஷ்மிகா வரை பல பிரபலங்களும் நேற்று சமூக வலைதளங்களில் தங்கள் வாழ்த்துகளை அல்லு அர்ஜூனுக்கு பகிர்ந்தனர். இந்நிலையில் அல்லு அர்ஜூனின் மனைவி ஸ்நேகா, முன்னதாக தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அல்லு அர்ஜூனின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில் ”ஹாப்பி பர்த்டே அல்லு அர்ஜூன்” என எழுதப்பட்ட சாக்லேட் கேக், அல்லு அர்ஜூனுடன் தான் இருக்கும் புகைப்படம், தன் கையில் புது மோதிரம் அணிந்திருக்கும் புகைப்படம் ஆகியவற்றை ஸ்நேகா பகிர்ந்திருந்தார்.
மனைவிக்கு கிஃப்ட்
இந்நிலையில் அல்லு அர்ஜூன், தன் பிறந்த நாள் அன்று கூட தன் காதல் மனைவி ஸ்நேகாவுக்கு பரிசாக மோதிரம் கொடுத்து அசத்தியுள்ளார் எனக்கூறி அவரது ரசிகர்கள் இணையத்தில் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
மேலும் ”கணவரின் பிறந்தநாளிலும் இவர் தான் கிஃப்ட் பெறுகிறார், இவர் தான் சிறந்த மனைவி” என ஸ்நேகாவைக் கலாய்த்தும் ரசிகர்கள் இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தன் மனைவி ஸ்நேகாவுடனான அதீத காதலை அல்லு அர்ஜூன் பல நேர்காணல்களிலும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.
காதல் மனைவி
தங்களது பொதுவான நண்பர்கள் மூலம் ஸ்நேகாவை முதன்முதலில் சந்தித்த அல்லு அர்ஜூன், பார்த்த நொடியே காதலில் விழுந்தார். தொடர்ந்து 2011ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் அல்லு அர்ஜூன் - ஸ்நேகா இருவரும் திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 12 ஆண்டுகளாக இந்தத் தம்பதி டோலிவுட்டின் காதல் பறவைகளாக வலம் வந்து ரசிகர்களை ஈர்த்து வருகின்றனர். இவர்களுக்கு ஆர்ஹா எனும் பெண் குழந்தையும், அயான் எனும் ஆண் குழந்தையும் உள்ளனர்.
சென்ற மாதம் தங்கள் 12ஆவது திருமண நாளை அல்லு அர்ஜூன் - ஸ்நேகா தம்பதி கொண்டாடிய நிலையில், 'பிறந்த நாள் வாழ்த்துகள் க்யூட்டி' என தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வைத்து லைக்ஸ் அள்ளினார் அல்லு அர்ஜூன்.
புஷ்பா 2 அப்டேட்
மற்றொருபுறம் அல்லு அர்ஜூன் பிறந்த நாளை முன்னிட்டு புஷ்பா 2 படத்தின் கான்செப்ட் டீசர் நேற்று முன் தினம் (ஏப்.07) வெளியாகி இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது. 2021ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. சுகுமார் இந்தப் படத்தை இயக்குகிறார்.