26 years of Kadhal mannan : அஜித்தின் பெஸ்ட் கம்பேக்! காதலில் புதுமையை புகுத்திய காதல் மன்னன்! 26 ஆண்டுகளை கடந்தும் சிம்மாசனம்!
26 years of Kadhal mannan : ஆக்ஷன், நகைச்சுவை, காதல் என அனைத்திலும் படு மாஸாக ஸ்கோர் செய்து பாராட்டுகளை குவித்த காதல் மன்னன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
காதல் சப்ஜெக்ட் என்பது தமிழ் சினிமாவில் அழியாத ஒன்றாக வெவ்வேறு பரிணாமம் எடுத்து வெவ்வேறு மாதிரி காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் யாருமே யோசிக்க முடியாத ஒரு கதையை கையில் எடுத்த அதில் மாபெரும் வெற்றியையும் கொடுத்தார் அறிமுக இயக்குநராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த கே.பாலச்சந்தரின் உதவி இயக்குநராக இருந்த சரண். அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு போனாலும் ஒரு வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த நடிகர் அஜித்துக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது தான் 1997ம் ஆண்டு இதே நாளில் வெளியான 'காதல் மன்னன்' திரைப்படம். இப்படம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
காதல் கோட்டை, ஆசை, வான்மதி உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்த அஜித்துக்கு ஏனோ அதை தொடர்ந்து நடித்த ஐந்து படங்களுமே தோல்வியை சந்தித்தது. அப்படியான சூழலில் அவருக்கு ஒரு பரீட்சையாய் அமைந்த படம் தான் சரணின் 'காதல் மன்னன்'. ஆக்ஷன், நகைச்சுவை, காதல் என அனைத்திலும் படு மாஸாக ஸ்கோர் செய்து பாராட்டுகளை குவித்தது. மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் ஒரு நடிகராக அறிமுகமான திரைப்படம். 'மெஸ் விஸ்வநாதன்' கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்தி நடித்திருந்தார்.
அஜித்தின் ஆணழகன் இமேஜ் இந்த படத்திற்கு பிறகு பல மடங்கு எகிறியது. அவரின் ஜோடி திலோத்தமாவாக நடித்த நடிகை மானு அறிமுகமானார். ஒரே படத்தில் கனவு கன்னியாக வலம் வந்த மானு அதற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகியவர் அதற்கு பிறகு ஒரே படத்தோடு நடிப்புக்கு எண்டு கார்டு போட்டார்.
கண்டிப்பான தந்தையின் ஆசைக்காக அவர் சொல்லும் மாப்பிள்ளையை கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்கும் ஹீரோயின். திருமண நிச்சயதார்த்தம் அன்று அவள் எதேச்சையாக சந்திக்கும் ஒரு நபர் மீது ஈர்க்கப்பட்டு அது காதலாக மாறுகிறது. அப்பாவின் கண்டிப்பு, சமூக கட்டுப்பாடு இப்படி தன்னை சுற்றி இருக்கும் வேலியை தாண்டி ஹீரோவும் ஹீரோயினும் ஒன்று சேர்கிறார்களா? அதற்கு இடையில் அவர்கள் சந்திக்கும் சிக்கல் என்னென்ன? அதை எப்படி அவர்கள் சமாளிக்கிறார்கள் என கதைக்களம் மிகவும் சஸ்பென்ஸாக கடைசி வரை பார்வையாளர்களின் துடிப்பை லப் டப் என வேகமாக துடிக்க செய்தது.
இப்படி ஒரு மாறுபட்ட திரைக்கதையை இதுவரையில் பார்க்காத தமிழ் ரசிகர்கள் படத்தை கொண்டாடினார்கள். 26 ஆண்டுகள் ஆன போதிலும் இன்றும் இப்படம் நினைவுகளில் ஊசலாடுவது தான் அதன் ஸ்பெஷலிட்டி.
தமிழ் சினிமாவுக்கு கிடைத்த இசை பொக்கிஷங்களில் ஒருவரான இசையமைப்பாளர் பரத்வாஜ் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான முதல் படம். பாடல் அனைத்தும் இன்று வரும் இனிமை சேர்க்கும் பாடல்கள். மாறுபட்ட கதைக்களத்தை கொண்டு பார்வையாளர்களுக்கு சலிப்பு தட்டாத ஒரு காதல் கதையாக வெளியான 'காதல் மன்னன்' படம் நெஞ்சை விட்டு நீங்காத காதல் படங்களின் வரிசையில் நிச்சயம் இடம்பெறும்.