AK 64: ரெட் டிராகன் ரசிகர்களுக்கு ட்ரீட்! அஜித் பிறந்தநாளில் வருகிறது ஏகே 64 அறிவிப்பு?
அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அவரது பிறந்தநாளில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் அஜித்குமார். இவருக்கு என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் கடைசியாக குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக இருந்தது.
அஜித் பிறந்தநாள்:
அஜித்தின் பிறந்த நாள் மே 1ம் தேதி ஆகும். இதனால், ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளை உழைப்பாளர் தினமாக மட்டுமின்றி அஜித் பிறந்தநாளாகவும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அஜித்குமார் தற்போது கார் பந்தயத்தில் பங்கேற்று வருகிறார். அஜித் கார்பந்தயத்தில் பங்கேற்று முடிக்கும் வரை நடிப்பில் இருந்து சற்று விலகியிருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
ஏகே 64 இயக்குனர் யார்?
இந்த நிலையில், அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்த பட அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏகே 64 என குறிப்பிடப்பட்டுள்ள அவரது அடுத்த படத்தை இயக்கப்போவது யார்? என்பதுதான் தற்போது கோலிவுட்டில் பரபரப்பான பேசுபொருளாகியுள்ளது.
பிரசாந்த் நீல், விஷ்ணுவர்தன் ஆகியோர் இயக்கத்தில் திரைப்படம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், தற்போது கார்த்திக் சுப்பராஜ் அல்லது ஆதிக் ரவிச்சந்திரன் ஆகிய இருவரில் ஒருவர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கலாம் என்று கூறப்படுகிறது.
மீண்டும் ஆதிக்?
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய குட் பேட் அக்லி திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் வாகனத்தில் ஏகே 64 என்ற எண் காரின் வாகன எண்ணாக குறிப்பிடப்பட்டிருக்கும். அப்போதே, அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன்தான் இயக்கப்போகிறார்? என்ற பேச்சு எழுந்தது.
அஜித்தின் அடுத்த பட இயக்குனர் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே செல்லும் நிலையில், அஜித்தின் 54வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது.
கொண்டாட்டத்தில் ரசிகர்கள்:
அவரது பிறந்த நாளுக்கு இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அஜித் ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக ஏகே 64 படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்குமார் தற்போது கார் பந்தயத்தில் தீவிரமாக இருக்கும் நிலையில், படத்தின் அறிவிப்பு வாய்ப்பு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் சிலர் கூறுகின்றனர்.
இருப்பினும் மற்ற ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் அஜித்தின் குட் பேட் அக்லி வெற்றி, ஒரே ஆண்டில் இரண்டு படங்கள் ரிலீஸ், அஜித் பத்மபூஷண் விருது வென்றது ஆகியவற்றை அவரது ரசிகர்கள் தீவிரமாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

