‛தேசிய விருதுகள் நியாயமாக வழங்கப்படுவதில்லை’ -பிரபல மலையாள இயக்குநர் கடும் தாக்கு!
Adoor Gopalakrishnan: புகழ்பெற்ற மலையாள இயக்குநரும் பல தேசிய விருதுகளுக்கு சொந்தக்காரருமான அடூர் கோபாலகிருஷ்ணன் தேசிய திரைப்பட விருதுகள் ஒரு நகைச்சுவை என்று கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய திரையுலகில் பெருமைக்குரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் தேசிய திரைப்பட விருதுகள் 2022 சமீபத்தில் வழங்கப்பட்டது. இந்நிலையில் புகழ்பெற்ற மலையாள இயக்குநரும் பல தேசிய விருதுகளுக்கு சொந்தக்காரருமான அடூர் கோபாலகிருஷ்ணன் தேசிய திரைப்பட விருதுகள் ஒரு நகைச்சுவை என்று கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த ஆண்டு வழங்கப்பட்ட 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகளை தமிழ் படங்களான சூரரைப் போற்று, மண்டேலா மற்றும் மலையாள படமான ஐயப்பனும் கோஷியும் பெற்றது.
அடூர் கோபாலகிருஷ்ணன் மனவருத்தம்:
இந்திய திரைப்பட சங்கத்தின் ஜான் ஆபிரகாம் நினைவு விருதுகள் சமீபத்தில் கேரளாவில் நடந்தது. அதன் துவக்க விழாவில் கலந்து கொண்ட அடூர் கோபாலகிருஷ்ணன் துவக்க விழாவின் போது ஆற்றிய உரையில் தற்போது தேசிய திரைப்பட விருதுகள் கொடூரமான நகைச்சுவையாக உள்ளது என்று கூறியுள்ளார்.முன்னதாக, தேசிய திரைப்பட விருதுகளின் நடுவர் குழு அமர்வு புகழ்பெற்ற இயக்குநர்களையும், கலைஞர்களையும், விமர்சகர்களையும் கொண்டிருந்தது. ஆனால் தற்போது யார் என்றே தெரியாத நடுவர் கூட்டம் இந்த விளையாட்டை எல்லாம் விளையாடி வருகிறது என்று கூறியுள்ளார். நடுவர் குழுவின் சேர்மனாக யாரோ ஒருவர் இருந்து கொண்டு யார் யாருக்கோ விருதுகளை அள்ளிக் கொடுத்து வருகிறார்.
எல்லோருக்கும் எல்லாம் தெரிந்தாலும், இவர்கள் ஏன் விருதுகளை வாங்கினார்கள் என்று யாரும் கேள்வி கேட்க முடியாது. சினிமா என்பது ஒரு கலை; பொழுதுபோக்கு அல்ல! தற்போது நடுவர் அமர்வில் உள்ளவர்கள் அனைவரும் பாலிவுட் படங்களின் ரசிகர்கள். அதே நேரத்தில் டெல்லியில் இருந்து என் நண்பன் ஒருவர், நடுவர்கள் இரண்டு படங்களை பார்த்துவிட்டு களைத்து போய்விடுவார்கள் என்று கூறினார். திரைப்படத்தை பார்க்காதவர்களும் அந்த திரைப்படத்தை பற்றி எதுவும் தெரியாதவர்களும், திரைப்படங்களுக்கு விருது கொடுக்கின்றனர் என்று மலையாள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும், இவை அனைத்தும் அவரது தனிப்பட்ட சிந்தனைகளே என்றும் அவர் கூறியுள்ளார்.
18 முறை தேசிய விருது பெற்றவர்:
இவர் தேசிய விருதுகள் குறித்து விமர்சனம் எழுப்புவது இதில் முதன்முறை அல்ல. 2016 ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பி தேசிய திரைப்பட விருதுகள் செலக்சன் ப்ராசஸ் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது சினிமாவின் நவீன போக்குகளை நன்கு அறிந்த மற்றும் தேசிய அந்தஸ்து பெரும் சிறந்த திரைப்பட தயாரிப்பாளர் தலைமையில் தேசிய விருதுகளுக்கான படங்களை தேர்ந்தெடுப்பதை உறுதி செய்யப்படுத்துமாறு அமைச்சகத்திடம் வலியுறுத்தினார். அடூர் கோபாலகிருஷ்ணன் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருதை பெற்றுள்ளார். 50 ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தாலும் 12 திரைப்படங்களை எடுத்துள்ளார். கோபாலகிருஷ்ணன் 18 முறை தேசிய விருது பெற்றவராவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.