Adipurush: அனுமனுக்கு ஒரு சீட்டு ரிசர்வேசன் செய்த ஆதிபுருஷ் படக்குழு..! சுவாரஸ்ய தகவல்
Adipurush: திரையிடப்படும் அனைத்து காட்சிகளிலும் அனுமனுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என ஆதிபுருஷ் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ராமாயணத்தினை மைய்யமாகவோ அல்லது அதனை ஒரு பகுதியாகவோ அல்லது ராமாயணத்தின் சாராம்சத்தை மட்டும் கதைக் கருவாக வைத்து இந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் அதிகப்படியான திரைப்படங்கள் வெளியாகிவிட்டது. இந்நிலையில் ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து இயக்குநர் ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பாகுபலி படத்தின் மூலம் உலகப்புகழ் பெற்ற ப்ரபாஸ் நடிக்க, ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் மிகவும் பிரமாண்ட செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வரும் ஜூன் 16ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ‘ஆதிபுருஷ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியான சிலமணி நேரத்தில் அனைத்து மொழிகளிலும் கோடிக்கணக்கான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளதால், படத்துக்கான எதிர்ப்பார்ப்பும் அதிகமாக உள்ளது.
இதனிடையே, ‘ஆதிபுருஷ்’ படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை அனுமனுக்காக காலியாக விட போவதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில், "அர்ப்பணிப்பு, பக்தி மற்றும் விசுவாசத்தின் உருவமாக விளங்கும் அனுமனுக்கு மிகுந்த மரியாதையுடன் கூடிய பணிவான அஞ்சலி. ‘ஆதிபுருஷ்’ படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு தியேட்டரிலும் ஒரு இருக்கையை படக்குழு சார்பாக ஒதுக்குகிறோம்" என பதிவிட்டுள்ளது. படக்குழுவின் இந்த அறிவிப்பு அனுமன் பக்தர்களை நிச்சயம் திரைப்படத்தினை பார்க்க வரவைக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
ஆதிபுருஷ் திரைப்படம் சுமார் 500 கோடி செலவில் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆதிபுருஷின் டீஸர் வெளியானபோது அதன் சிஜி மிக மோசமாக இருந்ததாக ரசிகர்கள் கடுமையாக விமர்சித்திருந்தார்கள். பின் படத்தின் சிஜி வேலைகள் திருத்தங்கள் செய்யப்பட்டு அண்மையில் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. டீசரைக் காட்டிலும் ட்ரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் ஒரு பாடலும் வெளியிடப்பட்டது.
மேலும், ஜூன் 16 ஆம் தேதி வெளியாக இருக்கும் ஆதிபுருஷ் ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களில் 160 முதல் 170 கோடிக்கு வெளியிடும் உரிமத்தை வியாபாரம் செய்திருக்கிறது. பிபள் மீடியா கம்பெனி என்கிற தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடுவதற்கான உரிமத்தை வாங்கியிருக்கிறது. இந்தத் தகவல்கள் எல்லாம் அதிகாரப்பூர்வமாக படக்குழு சார்பாக அறிவிக்கப்பட்டால் திரையரங்களில் வெளியாவதற்கு முன்பே அதிக வியாபாரம் சம்பாரித்த தெலுங்குப் படங்களில் சாதனை படைக்கக் கூடியதாக இருக்கும் ஆதிபுருஷ்.
ஆதி புருஷ் படத்தைத் தொடர்ந்து ப்ரபாஸ் கே ஜி எஃப் திரைப்பட இயக்குனர் ப்ரஷாந்த் நீல் இயக்கும் சலார் படத்தில் நடித்து வருகிறார். பின் நாக் அஷ்வின் இயக்கும் ப்ராஜெக்ட் கே படத்தில் நடிக்க இருக்கிறார் ப்ரபாஸ். தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் ஆகியோர் இந்தப் படத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். அடுத்ததாக அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார் ப்ரபாஸ்.