Urvashi : ஆர்.ஜே.பாலாஜி இப்படித்தான்.. வீட்ல விசேஷம் படத்தை பற்றி சீக்ரெட் சொன்ன ஊர்வசி..
RJ பாலாஜி புத்திசாலித்தனமிக்க ஒரு தெளிவான திரைப்பட இயக்குநர், அவரது குழுவினரிடமிருந்து சிறந்த உழைப்பை பெற்று விடுவார் " - நடிகை ஊர்வசி
தேசிய விருது வென்றவரும், 80கள் தொடங்கி இன்றளவும் இந்தியத் திரையுலகின் முக்கிய நடிகைகளுள் ஒருவராகவும் விளங்குபவர் நடிகை ஊர்வசி.
ரசிகர்களின் இதயங்களை வென்ற நடிகை
நடிகையாக திரைப் பயணத்தை தொடங்கியது முதல் இன்று அவர் நடிக்கும் துணை, கௌரவ கதாபாத்திரங்கள் வரை, பார்வையாளர்களின் இதயங்களிலும் மனதிலும் என்றென்றும் நிலைத்திருக்கும்படியான நடிப்பை வெளிப்படுத்தி, முழுத் திரையையும் ஊர்வசி ஆட்கொண்டு விடுவார்.
அந்த வகையில், வரும் ஜூன் 17ஆம் தேதி வெளியாக உள்ள 'வீட்ல விசேஷம்' திரைப்படத்திலும் அத்தகைய ஒரு கதாப்பாத்திரத்தில் ஊர்வசி மீண்டும் நடித்துள்ளார். ஆர். ஜே.பாலாஜி, என் சரவணன் இணைந்து இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானதில் இருந்தே ஊர்வசியின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
இந்நிலையில் இப்படம் குறித்து நடிகை ஊர்வசி கூறியுள்ளதாவது:
“வீட்ல விசேஷம் திரைப்படம் எனக்கு முழு திருப்தியைக் கொடுத்துள்ளது. மிகவும் அரிதாகவே, ஒரு கலைஞருக்கு மதிப்புமிக்க கதை, தெளிவான பார்வை கொண்ட நல்ல திரைப்பட இயக்குநர்கள் மற்றும் அற்புதமான சக நடிகர்கள் கொண்ட ஒரு படம் கிடைக்கிறது.
சத்யாராஜுடன் நடித்தது மகிழ்ச்சி
இந்தப் படம் எனக்கு அப்படிப்பட்ட ஒரு படமாக அமைந்தது. நான் மலையாளத்தில் இதே போன்ற திரைப்படங்களை செய்திருந்தாலும், இப்படம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தப் படத்தினுடைய படப்பிடிப்பின் ஒவ்வொரு நொடியும் என்னை உற்சாகப்படுத்தியது.
சத்யராஜ் சாருடன் திரையைப் பகிரும் வாய்ப்பு அதற்கு ஒரு முக்கியமான காரணம். நல்ல நடத்தை மற்றும் நடிப்பின் மூலமாக மற்றவர்களை ஈர்க்கும் திறமை பெற்ற நடிகர்களுடன்பணியாற்றுவதை, நான் எப்போதும் ரசிப்பேன். அப்படிப்பட்ட ஒரு நடிகர் சத்யராஜ். இது எனது பாத்திரத்தையும் சிறப்பாக வழங்க உதவியது.
புத்திசாலி இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி
நான் இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்புவதற்கு மற்றொரு காரணம் RJ பாலாஜி. அவருடைய படங்களில் எனக்கு ஒரு குறிப்பிடத்தக்க, தனித்துவமான பாத்திரம் எப்போதும் கிடைக்கும். RJ பாலாஜி புத்திசாலித்தனமிக்க ஒரு தெளிவான திரைப்பட இயக்குநர். மேலும் அவரது குழுவினரிடமிருந்து சிறந்த உழைப்பை பெற்று விடுவார்.
RJ பாலாஜி ஜாலியாகவும் துடிப்பாகவும் இருக்கும்போது, NJ .சரவணன் அமைதியாகவும், இறுதி வெளியீட்டைப் பெறுவதில் கெட்டிகாரராகவும் இருக்கிறார். திரைப்பட இயக்குநர்களின் இந்தக் கலவையானது படப்பிடிப்பின்போது குழுவில் உள்ள அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் நிலைமையை சமமாக வைத்துக்கொண்டது” என்றார்.
அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் படம்
’வீட்ல விசேஷம்’ படத்தின் மூலம் பார்வையாளர்களுக்கு கிடைக்கப்போகும் அனுபவங்கள் பற்றி ஊர்வசி கூறுகையில், “சமீப காலமாக, ஒரு குறிப்பிட்ட குழுவினரின் ஆர்வத்தையும் ரசனையையும் பூர்த்தி செய்யும் திரைப்படங்களை நாம் பார்க்கிறோம். இருப்பினும், வீட்ல விசேஷம் திரையரங்குகளில் அனைவரையும் மகிழ்விக்கும் மற்றும் திருப்திப்படுத்தும் படமாக இருக்கும்” எனக் கூறினார்.
'வீட்ல விசேஷம்’ படத்தை ஜீ ஸ்டுடியோ மற்றும் பே வியூ எல்எல்பி சார்பில் போனி கபூர், ரோமியோ பிச்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தியில் சூப்பர் ஹிட்டான ‘பதாய் ஹோ’ படத்தின் ரீமேக்கான இப்படத்தில் RJ பாலாஜி, அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.