Tabu: அன்பே.. அப்பாஸ் முதல் அஜித் வரை காதலால் உருகவைத்த தனித்துவ நாயகி.. தபுவின் பிறந்தநாள்!
Tabu Birthday: ஆறடி உயரம், கவர்ந்திழுக்கும் மாநிறம், கூல் ஆட்டிட்யூட் என தனித்துவ அழகால் தமிழ் ரசிகர்களை ஈர்த்து ஒற்றைப் படத்தில் கோலிவுட் ரசிகர்களின் இதயங்களைக் கட்டிப்போட்டார் தபு!
1971ஆம் ஆண்டு பிறந்த பிரபல நடிகை தபு (Actress Tabu) இன்று தன் 52ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஆண்டுதோறும் வயது கூடுவதற்கு எதிர்பதமாக உபயோகிக்கப்படும் ரிவர்ஸ் ஏஜிங் எனும சொற்றொடருக்கு சிறப்பான எடுத்துக்காட்டாக விளங்குபவர் தபு.
குழந்தை நட்சத்திரம் டூ வெற்றி நாயகி
பாலிவுட்டின் பிரபல நடிகையான ஷப்னம் ஆஸ்மி - பிரபல கவிஞர் ஜாவேத் அக்தர் தம்பதியின் உறவுக்காரரான தபு, தன் 11ஆம் வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
தொடர்ந்து 1994ஆம் ஆண்டு ரிஷி கபூருக்கு ஜோடியாக ‘பெஹலா பெஹலா ப்யார்’ எனும் படத்தில் நடிகையாக அறிமுகமானார். ஹீரோயினாக அவரது முதல் படம் பெரிய கவனமீர்க்கவில்லை தான். ஆனால் முதல் 2 ஆண்டுகளில் பாலிவுட்டின் பிரபல நடிகையாக உருவெடுத்த தபு 1996ஆம் ஆண்டு தென்னிந்திய ரசிகர்களின் இதயங்களுக்குள் நுழைந்தார்.
ஆறடி உயர அழகி
1996ஆம் ஆண்டு வெளியாகி அன்றைய இளசுகளைக் கவர்ந்து தமிழ்நாட்டில் கவனமீர்த்து மாபெரும் வெற்றிப் படமாக அமைந்த திரைப்படம் காதல் தேசம். கதையளவில் படம் விமர்சனங்களை சந்தித்தாலும் அன்றைய சென்னை, ஏ.ஆர்.ரஹ்மானின் மாயம் செய்யும் இசை, கதாபாத்திரத் தேர்வு என படம் திரையரங்குகளுக்கு ரசிகர்களை சுண்டி இழுத்தது.
ஆறடி உயரம், கவர்ந்திழுக்கும் மாநிறம், கூல் ஆட்டிட்யூட் என தன் ஆஜானுபாகுவான அழகுடன் தன் நடையாலேயே தமிழ் ரசிகர்களை ஈர்த்து ஒற்றைப் படத்தில் கோலிவுட் ரசிகர்களின் இதயங்களை மொத்தமாக கட்டிப்போட்டுவிட்டார் தபு.
அப்பாஸ் முதல் அஜித் வரை..
‘எனைக் காணவில்லையே நேற்றோடு’ பாடலில் ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்பிபியுடன் சேர்ந்து திரையில் தபுவும் மேஜிக் செய்தார். மற்றொருபுறம் தெலுங்கு சினிமாவுக்கும் எண்ட்ரி தந்த தபு நடிகர் நாகர்ஜூனாவின் ஆதர்ச ஜோடியாக மாறிப்போனார்.
பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை சினிமாவை கலைக்கண்ணோட்டத்துடன் அணுகும் பல இயக்குநர்களின் முதல் தேர்வாக மாறிய தபு, மற்றொருபுறம் கமர்ஷியல் படங்களிலும் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளாமல் நடித்தார்.
காதல் தேசம் அப்பாஸ் தொடங்கி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் அஜித், ஏன் பாலிவுட்டின் உச்ச நடிகரான அமிதாப் உடன் ‘சீனிகம்’ திரைப்படம் வரை, அனைவருடன் சிறப்பான ஈக்குவேஷனை திரையில் கொண்டுவந்து காதல் தேவைதையாக வலம் வந்தார் தபு!
ஹாலிவுட் என்ட்ரி
தன் திரைப்பயணத்தில் இந்திய சினிமாவை உலக அளவில் அடையாளப்படுத்தும் நடிகையாக உருவெடுத்த தபு மறைந்த நடிகர் இம்ரான் கானுடன் இணைந்து ‘நேம் சேக்’ ‘லைஃப் ஆஃப் பை’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இளமையழகைத் தாண்டி தன் 50களிலும் தனித்துவ கதாபாத்திரங்களால் தொடர்ந்து பாலிவுட்டில் வெற்றிகரமான நடிகையாக வலம் வரும் தபு, அந்தாதூன், தெலுங்கில் ‘அல வைகுந்தபுரம்லோ’ சென்ற ஆண்டு அதிக வசூலை ஈட்டிய பாலிவுட் படங்களில் ஒன்றான ‘பூல் புலைய்யா 2’ ஆகிய படங்களில் நடித்து தொடர்ந்து இன்றைய நாயகிகளுக்கு டஃப் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் தபுவை அனைத்து மொழி ரசிகர்களும் வாழ்த்தி கொண்டாடி வருகின்றனர்.