Priya Bhavani Shankar: படம் வெற்றி பெற்றால் ஓகே... ஓடவில்லை என்றால் காரணம் நானா? - பவானி சங்கர் சரமாரி கேள்வி!
ஒரு படம் வெற்றிபெற்றால் அது உன்னால் தான் என்று யாரும் பாராட்டுவதில்லை ஆனால் தோல்வியடைந்தால் அந்த பழியை என்மேல் போடுகிறார்கள் என்று நடிகை பிரியா பவானி சங்கர் வேதனை தெரிவித்துள்ளார்
பிரியா பவானி சங்கர்
தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பின் திரைக்கு வந்தவர்களில் ஒருவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் நாயகியாக நடித்த மேயாத மான் படம் சிறப்பான வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ரசிகர்களால் பெரியளவில் வரவேற்கப்பட்டார் கோலிவுட்டின் முன்னணி நடிகைகள் பெரும்பாலானவர்கள் பிற மொழி பேசுபவர்களாக இருக்கும் நிலையில் தமிழ் பேசும் நடிகையாக பிரியா பவானி சங்கருக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அடுத்தடுத்து நடித்த கடைக்குட்டி சிங்கம் , மான்ஸ்டர் உள்ளிட்ட படங்கள் தொடர் வெற்றிகளை கொடுத்தன. தொடர்ச்சியாக நிறைய படங்களில் நடித்து வந்தாலும் இதற்கடுத்து பிரியா பவானி சங்கர் நடித்த படங்கள் பெரியளவில் கவனம் பெறவில்லை. இப்படங்களில் அவர் நடித்த கதாபாத்திரங்களும் கவனிக்கப் படவில்லை. தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து ஒரு குட்டி கம்பேக் கொடுத்தார். சமீபத்தில் வெளியான இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திராத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படத்திற்கு பிறகு அவர் சமூக வலைதளங்களில் அதிகமாக ட்ரோம் செய்யப்பட்டார்.
ட்ரோல் செய்யும்போது கஷ்டமாகதான் இருக்கும்
தற்போது அருள்நிதி நடித்த டிமான்டி காலணி 2ஆம் பாகத்தில் நடித்துள்ளார் பிரியா பவானி சங்கர். இப்படத்திற்காக அளித்த பேட்டி ஒன்றில் இந்தியல் 2 படத்தில் தான் ட்ரோல் செய்யப்பட்டது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். ” நான் நடித்த முதல் பெரிய பட்ஜெட் படம் இந்தியன் 2. அதற்கு முன் நான் ஹீரோவுடன் டூயட் ஆட வேண்டும் என்று எல்லாம் யோசிக்கவில்லை. உதாரணத்திற்கு கடைக்குட்டி சிங்கம் படத்தில் நான் நாயகியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படவில்லை. அந்த படத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் எந்த அளவிற்கு முக்கியமானது என்பதை தான் எனக்கு முக்கியமாக பட்டது. ஆனால் இந்தியன் 2 படத்தில் நான் நடிக்க ஒப்பந்தம் ஆன பிறகு எனக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கின. நீங்கள் ஒரு ஹீரோவுடன் சேர்ந்து டூயட் ஆடினால் தான் உங்களை ஹீரோயினாக எடுத்துக் கொள்கிறார்கள்.
அதைப்பற்றி எனக்கு எந்த வித வருத்தமும் இல்லை. ஏனால் ஒரு படத்தில் தயாரிப்பாளரின் பணம் முதல் நடிகர்கள் உழைப்பு வரை நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஒரு படம் தோல்வியடைந்தால் அது அந்த படத்தை சம்பந்தபட்ட அனைவரையும் தான் பாதிக்கும். இந்தியன் 2 படம் நன்றாக இல்லை என்றதும் என்னை கேலி செய்யத் தொடங்கினார்கள். ஆனால் இன்று எனக்கு இந்தியன் 2 படத்தின் கதையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் அது தோல்வி அடையும் என்று எனக்கு தெரிந்தாலும் நான் அந்த படத்தில் நடிக்கதான் தேர்வு செய்வேன். ஷங்கர் இயக்கி கமல் சார் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்த ஒரு நடிகையின் பெயரை சொல்லுங்கள் பார்ப்போம். அந்த வாய்ப்பை நான் கைவிட விரும்பவில்லை. நான் நடித்த படங்கள் வெற்றிபெற்றால் அது என்னால் தான் என்று யாரும் என்னிடம் வந்து பாராட்டவில்லை. ஆனால் ஒரு படம் தோல்வி அடைந்தால் அதற்கான மொத்த பழியையும் என்மேல் சுமத்துவார்கள். அப்படி சொல்லும்போது நமக்கு வலிக்கதான் செய்யும். ஆனால் என் படங்கள் வெற்றிபெற்றபோது அதை நான் தலையில் ஏற்றிக்கொள்ளவில்லை அதேபோல் தோல்வியின் போது அது என்னுடைய பொறுப்பு மட்டும் இல்லை என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்” என்று பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.