Actress Madhubala : ஆக்ஷன் ஹீரோக்களுக்கு முழு படம்.. எங்களுக்கு பாட்டும், டான்ஸும்.. மனம்திறந்த மதுபாலா
நான் ஹீரோயினாக இருந்தபோது ஆக்ஷன் ஹீரோக்களே முழு படத்தையும் ஆக்கிரமிக்கும் நிலைமை இருந்தது என நடிகை மதுபாலா தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியா தொடங்கி வட இந்தியா வரை பிரபல நடிகையாக 90-களில் வலம் வந்தவர் நடிகை மதுபாலா.
தமிழ் நடிகையான இவர், பிரபல இந்தி நடிகை ஹேமமாலினியின் உறவுக்காரர். மலையாளம் தொடங்கி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, என பல மொழிகளிலும் மதுபாலா டாப் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து 90களில் குறிப்பிடத்தக்க நடிகையாக வலம் வந்தார்.
இயக்குநர் சிகரமாகக் கொண்டாடப்பட்ட இயக்குநர் பாலச்சந்தரின் 'அழகன்' படத்தின் மூலம் 1991ஆம் ஆண்டு தமிழில் அறிமுகமான மதுபாலா அதன் பின் பிரபல இயக்குநர்களின் சாய்ஸ் ஹீரோயினாக மாறினார்.
மணிரத்னத்தின் நாயகி
இயக்குநர் மணிரத்னத்தின் ரோஜா, இயக்குநர் ஷங்கரின் ஜெண்டில் மேன் எனத் தொடர்ந்து மெகா ஹிட் படங்களில் நடித்த மதுபாலா, மற்றொருபுறம் இந்தியில் அக்ஷய் குமார், ரிஷி கபூர், அஜய் தேவ்கன், கோவிந்தா என டாப் ஸ்டார்களுடன் ஜோடி சேர்ந்தார்.
தொடர்ந்து படு பிஸியான நடிகையாக பல மொழிகளில் வலம் வந்த மதுபாலா, திடீரென 1999ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.
திருமணத்துக்கு பின் தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வந்த மதுபாலா இறுதியாக தமிழில் தலைவி, தேஜாவு ஆகிய படங்களில் தோன்றினார். தற்போது சாகுந்தலம் படத்தில் நடித்துள்ள இவர் பட வெளியீட்டுக்காகக் காத்துள்ளார்.
’நான் இப்படிப்பட்ட காலத்தில் நடித்தேன்....’
இந்நிலையில், முழு படங்களும் ஆக்ஷன் ஹீரோக்களுக்கு கொடுக்கப்பட்ட காலத்தில் தான் நடிகையாக இருந்ததாக மதுபாலா தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள மதுபாலா, சினிமாவில் காட்டப்படும் பாலின வேறுபாடு, ஒரே மாதிரியான ஹீரோயின் கதாபாத்திரங்கள் ஆகியவை பற்றி பேசுகையில்,
“என் காலத்தில் அனைத்து ஹீரோயின்களும் செய்ததை தான் நானும் செய்தேன். நான் பல மொழிகளில் பல கதாபாத்திரங்கள் செய்தேன். அது பற்றி புகார்கள் இல்லை.
ஆனால் ஒரு கட்டத்தில் நான் இதிலிருந்து வெளியேற நினைத்தேன். அப்போது நான் சினிமாவில் நிறைய விஷயங்கள் செய்ய விரும்பினேன், ஆனால் அது போன்ற கதாபாத்திரங்கள் எனக்கு அமையவில்லை.
பாட்டும் டேன்ஸூம் அமைஞ்சது...
ஆக்ஷன் ஹீரோக்களுக்கே மொத்த படமும் கொடுக்கப்படும் காலத்தில் நான் இருந்தேன். எங்களுக்கு சில அற்புதமான பாடல்கள், நடனங்கள் அமைந்தன. இந்தியிலும் முழுக்க முழுக்க ஆக்ஷன் படங்கள் தான். ரோஜா போல் வேறு படங்களில் நடிக்க விரும்பினேன், ஆனால் வாய்ப்புகள் அமையவில்லை, அதன் பின் என் வாழ்க்கைத் துணையை பார்த்துவிட்டேன், எனவே நான் சினிமாவில் இருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டேன்.
நான் எனக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தையும் ஊதிய வேறுபாட்டையும் ஏற்றுக் கொண்டேன். ஆனால் இன்றைய சினிமாவில் ஹீரோயின்களின் நிலையை முழுமையாக மாற்றியிருக்கும் பெண்களுக்கு நன்றி. ஹீரோயின்களின் பெயரைக் கொண்டு விளம்பரப்படுத்தப்பட்டு படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் கலெக்ஷன் அள்ளுகின்றன”என மதுபாலா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.