`தி லெட்டர்’ -இந்திய அமெரிக்கத் திரைப்படத்தில் ஐஷ்வர்யா ராய்.. சுவாரஸ்ய பின்னணி தெரியுமா?
நடிகை ஐஷ்வர்யா ராய் பச்சன் தன்னுடைய அடுத்த திரைப்படத்திற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளார். இது இந்திய - அமெரிக்கத் திரைப்படமாக உருவாகவுள்ளது.
பாலிவுட் நடிகை ஐஷ்வர்யா ராய் பச்சன் சமீபத்தில் மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகும் திரைப்படமான `பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்தில் தன் பாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் மணி ரத்னம் இயக்கி வரும் இந்தப் படத்தில் பல்வேறு முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை ஐஷ்வர்யா ராய் பச்சன் தன்னுடைய அடுத்த திரைப்படத்திற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளார். இது இந்திய - அமெரிக்கத் திரைப்படமாக உருவாகவுள்ளது.
`தி லெட்டர்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படம் மறைந்த எழுத்தாளர் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய `த்ரீ விமன்’ என்ற புத்தகத்தின் அடிப்படையில் உருவாக்கப்படவுள்ளது. இந்தத் திரைப்படத்தில் நாடக ஆசிரியர் இஷிதா கங்குலி இயக்கவுள்ளார். இதுகுறித்து பேசிய இஷிதா கங்குலி, `இந்தப் படத்தின் முன்னணி நடிகராக நடிகை ஐஷ்வர்யா ராய் பச்சன் நடிக்கவுள்ளார். தாகூர் எழுதிய இந்த நாடகம் `த்ரீ விமன்’ என்ற பெயரைக் கொண்டதாக இருந்தாலும், நாங்கள் படத்தின் தலைப்பை மாற்றி, `தி லெட்டர்’ என்று சூட்டியுள்ளோம். தாகூரின் அண்ணி காதம்பரி தேவியின் கடிதத்தைப் பற்றிய கதை இது. ஐஷ்வர்யாவுக்கு இந்தக் கதை பிடித்ததோடு, எனது அறிமுகத் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.
இஷிதா கங்குலி இந்தத் திரைப்படத்தை இந்தி மொழியில் உருவாக்க முயற்சி செய்ததாகவும், நடிகை ஐஷ்வர்யா ராய் பச்சன் இந்தப் படத்தை ஆங்கிலத்தில் உருவாக்கலாம் என அறிவுறுத்தியதாகக் கூறியுள்ளார். `பெருந்தொற்றுக்கு முன்பே நானும் ஐஷ்வர்யாவும் இந்தப் படம் குறித்து பேசியுள்ளோம். இதை இந்திப் படமாக உருவாக்கவே நான் முயன்றேன். எனினும், படத்தின் திரைக்கதையைப் படித்த பிறகு, அவர் அமெரிக்க நகர்ப்புற மக்களுக்கும் புரியும் கதை என்பதால் இதனை ஆங்கிலத்தில் உருவாக்கலாம் எனக் கூறினார். அவரது பரிந்துரையால் இது இந்திய - அமெரிக்கத் திரைப்படமாக உருவாகவுள்ளது’ என இஷிதா கங்குலி கூறியுள்ளார்.
இந்நிலையில் நடிகை ஐஷ்வர்யா ராய் பச்சன் இயக்குநர் மணி ரத்னத்தின் கனவுத் திரைப்படமான `பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்துள்ளார். சோழர்களைப் பற்றிய திரைப்படமான இதில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சோபிதா துலிபாலா, பிரபு, சரத் குமார், ஜெயராம், பிரகாஷ் ராஜ், த்ரிஷா, ஐஷ்வர்யா லஷ்மி, ஜெயசித்ரா, ரகுமான், விக்ரம் பிரபு, அஷ்வின் ககமானு, விஜய் யேசுதாஸ், லால், நாசர், கிஷோர், நிழல்கள் ரவி, ரியாஸ் கான், மோகன் ராமன், அர்ஜுன் சிதம்பரம், பாபு ஆண்டனி, பாலாஜி சக்திவேல், பார்த்திபன் என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர்.