பரபரப்பு.. பாலியல் புகார் எதிரொலி!மோகன்லால் உட்பட அனைவரும் ராஜினாமா
பாலியல் புகார் எதிரொலியாக மலையாள நடிகர் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா. அந்தவகையில் நடிகர் மோகன்லாலும் நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
ஹேமா அறிக்கை:
மலையாள சினிமாத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னை குறித்து, ஒய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையம் அறிக்கை ஒன்றை கேரள அரசிடம் சமர்பித்தது. அதன்படி அந்த அறிக்கையில், சினிமாத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் இடம் பெற்றது.
பட வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக உடன்பட தாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாக பல பெண்கள் வாக்குமூலம் அளித்திருந்தனர். சினிமாவில் அட்ஜஸ்ட் செய்து கொண்டு, சமரசம் செய்து கொண்டு இருக்க வேண்டும் என தங்களிடம் சொல்லப்பட்டதாக பெண்கள் வாக்குமூலம் அளித்தனர்.
மோகன்லால் ராஜினாமா:
தங்கள் அனுமதி இன்றி ஹோட்டல் அறைகளில் ஆண் சகாக்கள் நுழைவார்கள் என்றும் காவல்துறையில் புகார் அளிக்க முற்பட்டால் சினிமாவில் தடை விதித்துவிடுவோம் என மிரட்டுவார்கள் என்றும் பெண்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி இருந்தனர். இது மலையாள சினிமாவில் பேசுபொருளானது. இந்நிலையில் தான், மலையாள நடிகர் சங்கமே கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் மலையாள நடிகர் சங்க தலைவராக இருந்த மோகன்லாலும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். மலையாள திரைப்பட நடிகர்கள் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்திருப்பது கேரளாவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.